Thursday, January 6, 2011

அட்சயப் பாத்திரம்

அட்சயப் பாத்திரம்
மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியிது:
ஒரு அட்சய திருதியை நாளன்று, துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசரும் அவருடைய சீடர்களும் செல்கிறார்கள் காலை நேரத்தில். நல்ல உணவு உண்டு,மனத்திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடை பெற முனைகிறார், முனிவர் துர்வாசர். தீய எண்ணத்துடன் துரியோதனன் இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்துண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றார்.துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள்அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரௌபதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ள அள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள்தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத்தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள்.அதற்குள், திரௌபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள் என இது துரியோதனின் திட்டம்.
துரியோதனன் வேண்டியபடியே துர்வாசன் பாண்டவரிடம் செல்கிறார்; மதிய உணவு தங்கள்அனைவருக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறார். துரியோதனன் எதிர் பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். கவலையுற்ற திரௌபதி கிருஷ்ணரை வேண்ட, அவர் அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரௌபதி கூறினாள். இருப்பினும் கிருஷ்ணரின் வற்புறுத்தலால் பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்; அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினார். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவனுடைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.
துர்வாசர் சாபம் மட்டுமே இடுபவர் அல்லர். தன்னை நன்றாக கவனித்துக் கொள்பவர்களுக்கு வரங்களும் கொடுத்திருக்கிறார். காட்டாக பாண்டுவின் மனைவி குந்திக்கு எந்த தேவரையும் நினைத்த மாத்திரத்தில் கூப்பிட அவர் அருளிய வரம். இந்த வரத்தின் மூலமே கர்ணன் , தருமன் , பீமன் , அருச்சுனன் மற்றும் மாத்ரிக்கு நகுலன்,சகாதேவன் பிறக்க ஏதுவாயிற்று.


(iii) புத்த பீடிகையும் அட்சய பாத்திரமும்.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே என மதித்துப் போற்றப்படும் ஜீவகாருண்ய மார்க்கத்தைப் போதித்தார் புத்தர். அவர் அந்த உயிர் இரக்கச் செயலை உலகுக்கு வழங்கிப் பற்றற்றுப் பர நிலை அடையப் பணித்தார். அக உண்மை அனுபவத்தையும், ஆன்மக் கடவுள் தத்துவங்களையும் வெளியிற் பிரசாரம் செய்யவில்லை. புற வாழ்வில் தூய்மை பெற்று ஒவ்வொருவரும் அக உண்மை அடைந்து அனுபவிக்கட்டும் என்பதுவே அவரது உட்கோளாகும்.
பின் உற்ற மணிமேகலையின் மூலமாக பெளத்த நெறிச் சித்தியின் இரகசியம் வெளியாக்கப்பட்டுள்ளது. அவர் மணிபல்லவத்திலுள்ள புத்த பீடிகையில் முன் ஞானம் பெறலும், கோமுகிப் பொய்கையினின்று அட்சய பாத்திரம் பெறலும் அருட் பிரசாதத்தின் அடையாளங்களேயாம். பசித்தோர்க்கெல்லாம் இல்லையென்னாது அப்பாத்திரத்தின் உண்டியை எடுத்தெடுத்து வழங்கினாள் என்ப. இக் குறைவுபடா நிறை நிலைக்கோர் எடுத்துக் காட்டாக இன்றும், திருச்செந்தூர் நாழிக்கிணறு விளங்குகின்றது. இவற்றாலெல்லாம் ஆண்டவர் அருளின் பெருமையை ஓர்ந்து அறிவது நம் கடமையாகும்.

No comments:

Post a Comment