Monday, January 31, 2011

சாவித்திரி, சத்தியவான்
சாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.
மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி, அவனது ஒரே மகள் சாவித்திரி. திருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை. மகளும், தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில், அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள். அவன்- சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும், சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன், உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.
தந்தையிடம் திரும்பும் சாவித்திரி, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.
சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும், சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில்கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.
சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள். உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள்.இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.
வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது.
'தந்தேன்' என்றான் எமன்.
சக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது.
 காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும், கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும் பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது. மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில், அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும், பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து, கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக, 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்றுவேண்டிக் கொள்வது மரபு.கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு.

"மாசிச் சரடு பாசி படரும்" என்பதற்கேற்ப, புதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும், கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.
மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக, மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறது.






1 comment:

  1. absolutely it's correct.And this is short & sweet.It's really helpful to me.Thank you for sharing with us.Because of this we can easy to remind our old story.Thanks again .

    ReplyDelete