Saturday, January 15, 2011

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

மூலமந்திரத்தை உபதேசம் பெறாமல் நாமே சொல்லலாமா?

பொதுவாக மந்திரங்கள் அனைத்துமே குருமுகமாக உபதேசம் பெற்றே பாராயணம்,ஜபம் செய்யவேண்டும்.இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.சரி அப்படியெனில் பல புஸ்தகங்களிலும் பல ஒலிதட்டுகளிலும் பல மந்திரங்கள் அச்சிடப்பட்டு ,ஒலிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதே அது தவறா?எனில் இல்லை.
பொதுவாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.இன்ன மந்திரத்தை இன்ன பலனுக்காக இவ்வளவு உரு ஜபிக்கப்போகிறேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜபிப்பவர்கள் தான்,தான் ஜபிக்கவேண்டிய மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கவேண்டும்.அதை விடுத்து சாதாரணமாக ஆன்மிக ஈடுபாட்டின்காரணமாக இதை தெரிந்துகொள்வதற்கு புஸ்தகத்தை பார்த்தோ,இதுபோல் இணையத்தை பார்த்தோ தெரிந்துகொள்ளலாம்.
ஏன் குரு உபதேசம்?
எதற்காக மந்திரங்கள் குரு உபதேசம் பெற்றே ஜபிக்கவேண்டும் என்றால்,அக்காலத்தில் வேதங்களெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி படிக்கவில்லை.வாய் வழியாகவே உபதேசிக்கப்பட்டன.அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவி என்ற பெயரும் உண்டு.மற்ற மந்திரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டாலும் அதை எழுதும்போதோ,படிக்கும்போதோ அக்ஷரத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக படித்தால் விபரீத பலன் ஏற்பட்டுவிடும்.இக்காலத்தில் கூட புஸ்தகங்களில் அச்சுப்பிழை ஏற்படுவது இயற்கையே.எனவே இம்மந்திரங்களை ஏற்கனவே நன்கு பழகிய ஒருவரிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து படித்தால் தவறுகள் இன்றி மந்திரத்தை ஜபித்து நாம் வேண்டிய பலனை அடைய முடியும்.அதாவது தவறு இன்றி உச்சரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே குருமுக உபதேசம்.
எளிமையாகச் சொன்னால், தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அச்சு/இணைய ஊடகம் மூலமாக மந்திரத்தை தெரிந்துகொள்ளலாம்.ஆனால் அதை பயன்படுத்த{ஜபிக்க}வேண்டுமெனில் குருவின் உபதேசம் அவசியம்.

2 comments: