Monday, January 31, 2011

குசேலர்

குசேலர்

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.
சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.
இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.
குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.
பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.
கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.
இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.
திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், “செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்” என வேண்டினார்.
இதற்கு திருமால், “குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!” என்று வரமளித்து மறைந்தார்.
அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.



No comments:

Post a Comment