Sunday, January 30, 2011

நாரதர் கர்வபங்கம். . .

நாரதர் கர்வபங்கம். . .


சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் மகரிஷி நாரதர்.
அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு
பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது.
அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.
பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.
மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார்நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக்கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக்குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாககொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்துவருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விடநேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று
சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.
இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர்.
 சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறைசுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.
’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று
தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு
முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.
’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால்
என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம்
செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை
ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.
“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு
அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம்,
குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன்மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே.
அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.
ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.
கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக
செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை.
பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.



No comments:

Post a Comment