Thursday, January 6, 2011

அறுபடை வீடு விளக்கம்

அறுபடை வீடு விளக்கம்




* சேனைகளும், சேனாதிபதிகளும் தங்கும் இடமே படைவீடு எனப்படும். படைகள் தங்குவதால் "படைவீடு' என்று ஆயிற்று. "விடு' என்ற சொல் சற்று நீண்டு "வீடு' என்று ஆயிற்று. இது ஒரு தொழிற்பெயராகும். "விடுதல்' என்றால்

"ஆணவம், கன்மம், மாயை' என்ற ஆதிக்க சக்திகளிலிருந்து விடுபடுவதே ஆகும். "விடு' என்ற சொல்லுக்கு "முக்தி'என்றும் பொருளும் உண்டு. முக்தியைத் தருபவன்முருகன். ஆசை, பொறாமை,கஞ்சத்தனம், மோகம், பாகுபாடு,கொடூரம் ஆகிய ஆறுபகைவர்கள் மனித மனங்களைத் தாக்குகின்றனர். இவர்களை வெற்றி கொள்ள நமக்கு ஒரு துணை தேவை. அந்தத் துணையே முருகப்பெருமான்.



* "கந்தன்' என்ற சொல்லுக்கு "பகைவர்களுடைய ஆற்றலை வற்றச் செய்பவன்' என்பது பொருள். நமது உள்ளத்துக்குள் இருக்கும் அகப்பகை, புறவுலகில் இருக்கும் புறப்பகை என்ற இரண்டு பகைகளையும் அழிக்கும் வல்லமை வெற்றிவேல்வீரனாகிய முருகனுக்கு உண்டு. முருகன் எல்லா தேவர்களையும் தனது சேனையாக பெற்றவன். எனவே அவன் "தேவசேனாதிபதி' எனப்படுகிறான்.



* நம்மிடமுள்ள கெட்ட குணங்களை அழிக்கும் சேனைத்தலைவனாகிய முருகன், தங்கியிருக்கின்ற தலங்களில் திருப்பரங்குன்றம், திருச்செந்துõர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை முக்கியமானவை. இத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆறு கெட்ட குணங்களும் நீங்கிவிடும். அவை அகன்றால் முருகப்பெருமானின்திருப்பாதத்தை அடையலாம்.



பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.



திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.



திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது



சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை



திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.



பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.



நூல்கள் : கச்சியம்பதி கந்தபுராணம், காவடிசிந்து, திருப்புகழ்

No comments:

Post a Comment