Tuesday, January 11, 2011

திருமுறைகளின் தாற்பரியம்

திருமுறைகளின் தாற்பரியம்

ந்தேகம் 1 : திருமுறை என்பதன் கருத்து யாது?
தெளிவு: திருமுறை என்பது தெவீக முறைப்பாடு என்னும் கருத்துடையது. இது திருவருளாகிய சக்தி மேலிட; அடியார்கள் வாக்கில் மலர்ந்த சிவபரம்பொருள் பற்றிய துதிகளாம். இவற்றை தமிழ் வேதம் என்றும் சமய நூலறிஞர்கள் கொள்வர். சிவபெருமானின் அளப்பருங் கருணை ஆன்மாக்களின் ஆணவ இருளை அகற்றுமாறு உதவும் வகை இத் திருமுறைகளால் உணரற்பாலதாம். திருமுறை இறைவனின் மந்திர ரூபமாகும். இவற்றைப் பரிசுத்தமான இதயத்தில் வைத்துப் பூசிக்க வேண்டும். இறைவனின் தரிசனங்களை அற்புத லீலைகளை வழிமுறையாக ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற சீரடியார்கள் உலகம் உய்யும்படியாகத் தமிழில் பாடியவையே பன்னிரு திருமுறைகளாம்.
இறைவனின் இருப்புக்குப் பிரமாணமாய் இங்கு திருமுறைப் பாடல்கள் அமைவது தெளிவு)
சந்தேகம் 2 : திருமுறைகளை ஓதுவதால் ஏற்படும் பயன் யாது?
தெளிவு : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பதிகங்களில் இறுதிக் காப்புத் தோத்திரங்களில் திருமுறைகளை முறைப்படி பாராயணம் பண்ணுவதால் பெறப்படும் பலாபலன்கள் விரிவாக தரப்பட்டுள்ளமை காண்க. திருமுறைகள் அனைத்தும் ஆன்மாக்களின் உய்தி பொருட்டு இறைவனால் அருளப்பட்ட திருவருட் பிரவாகமாகும். அதாவது இத்துதிகள் அனத்தும் இருபத்தேழு சிவனடியார்களைச் சிவனே அதிட்டித்து அருளிச் செய்தனர் என்பது இவற்றை அருளிச்செய்த அடியார்களின் வாக்குகள் மூலம் அறியக்கிடக்கின்றது. இந்த அருட்பெருக்கில் மனதை லயப்படுத்தினால் சித்த சுத்தி ஏற்படும். இதன் பயனாக சித்தத்தாற் செலுத்தப்படுகின்ற மனத்தின் கண்ணுள்ள குறைகள் நீங்கி வேண்டற்பாலன. யாவும் வேண்டுவாங்கெய்துப் பெறலம்.
மேலும் இத்தேவார திருவாசக தோத்திரங்களைப் பொருளுணர்ந்து சித்தங்களிகூர ஓதினால் ஆன்மசுத்தி ஏற்பட சிவதரிசனம் பெற்றுச் சிவபோகதிற் திளைக்கலாம். "சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி" விடும் பாங்கு திருமுறைப் பாராயணத்திற்குண்டு.
(இறைவன் தன்திருவருட் சக்தியின் வழிநின்று எம்மை ஈடேற்றும் பான்மை இங்கு புலனாகும்)
சந்தேகம் 3 : திருமுறைகளைப் பன்னிரண்டாக வகுத்தமைக்கு ஏதும் காரண்முண்டா?
தெளிவு : உண்டு போலும். மெய்கண்டார் அருளிச்செய்த சைவசித்தாந்த முதல் நூல், அதாவது சிவஞான போதம், பன்னிரண்டு சூத்திரங்கள் உடையது. இவற்றை அடிப்படை இலக்கணமாகக் கொண்டு விளக்கமாக வேதாகம புராண இதிகாச சாரங்களை உள்ளடக்கிய இலக்கியப் படைப்பே இப் ப்ன்னிரண்டு திருமுறைகளாம். இறைவன் அடியார்களின் "உளமே புகுந்து மிகநல்ல வீணை தடவி" அருளிய பாடல்களே இவை. அனாகதபீடத்தில் மலர்கின்ற இதயத்தாமரையில் பன்னிரண்டு இதழ்கள் உண்டு என்கிறது சைவசித்தாந்தம்.
இததிருமுறைகளையும் சிவனே இருபத்தேழு நட்சத்திரங்கள் போன்ற இருபத்தெழுவரை அதிட்டித்துப் பன்னிரண்டு இராசிகளுக்குச் சமானமாகப் பன்னிரண்டு பகுதிகளாக வகுத்து அருளியுள்ளார். இந்த இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்றான ஆருத்ரா நட்சத்திரம் சிவனாரது நட்சத்திரமாகக் கொள்ளப்படுவது இங்கு நோக்கற்பாலது.
எங்களைச் சூழ்ந்து தாங்கும் வானவெளியில் உள்ள கோள்வீதியில் பன்னிரண்டு இராசிகள் உள்ளன. ஆங்கு இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒளிர்விட்டுப் பல்வேறு கிரணங்களை உலகுக்குச் சிவசக்தி போன்ற சூரிய சந்திரரின் வெப்பதட்பங்களுக்கு ஏற்றவாறு வழங்கிச் சீவராசிகள் உய்யுமாறு திகழ்கின்றன.
இது பிரபஞ்ச நியதி. பரமண்டலத்தின் நிழலாம் இகம் இருந்தவாறு நிஜமாகிய பரமண்டலத்தின் நிழலாம் இகம் இருந்தவாறு, நிஜமாகிய பரமண்டலத்தில் பரமபதியாகிய சிவனை ஆன்மாக்கள் சாருமாறு அவனது சங்கற்பமாம் திருவருள் உவந்தாளித்த வேதாகம மார்க்கமும் சாதனங்களும், பெறுபேறுகளுமே பன்னிரண்டு திருமுறைகளில் இருபத்தேழு அடியார்களின் வாக்குகளில் பிரத்தியட்சமாம்.
உதாரணமாகச் சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரம் முக்கியமாக "மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே", என்று இலக்கணம் வகுக்க, பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் சரிதிரங்களை அதற்கு இலக்கியமாக வகுத்திருந்தமை காண்க.
இவை எல்லாம் மனித முயற்சி என்று கொள்ளற்க. இது தெய்வ நியதி - சைவநீதி.
(ஆன்மா சுயஒளிபெறத் திருவருள் முனைப்பு இருந்தவாறு)
சந்தேகம் 4 : திருமுறைகளைப் பரவலாக நோக்கும் போது ஓரிடத்தில் சிவன் - ஆண்டான்,சீவன் - அடிமை என்ற வலியுறுத்தல் காணப்பெற இன்னோரிடத்தில் சீவன் சிவனே என்று வலியுறுத்தப்பெறுகிறது. வேறொரு இடத்தில் சிவனே வானாகி, வளியாகி, தீயாகி, நீராகி, யாவையுமாய் அல்லையுமாய் நிற்கின்றான் என்ற பொருளில் பேசப்படுகிறது. இவற்றிற் காணும் பேதங்களுக்கு விளக்கம் என்ன?

தெளிவு : இவை ஆன்ம பக்குவங்களின் பேதங்களையே குறிக்கின்றது. இதன் விளக்கத்தை மூன்று அவத்தைகளில் காணும் பேதாபேதங்களின் மூலம் உணர்வது சாலும்.
நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது உலகம் எமக்கு வேறாக தெரிகிறது. இது போன்றது ஆன்மீகத்தின் துவைதநிலை. கடவுள் வேறு ஆன்மா வேறு எனக் காணும் நிலை ஆண்டான், அடிமை என்னும் துவைத நிலை.
கனவு காணும்போது நாம் காணும் உலகம் அந்நியமாக இல்லாமல் நம்மில் இருந்து உற்பவித்ததாய் இருக்கக் காண்கிறோம். இங்கு உலகம் வேறாகக் காண்பதுபோலத் தோன்றினாலும் நமக்குள்ளே இருந்து வருவதாக இருத்தல் உண்மை. நாம் வேறு உலகம் வேறு என்று கூறமுடியாத தன்மையில் கனவில் நாமே உலகமாகிக் காட்சியளிக்கின்றோம். இது போன்றது ஆன்மீகத்தில் விசிஷ்டாத்துவித நிலை. அதாவது இறைவன் வானாகி, வளியாகி அனைத்துமாய் தோற்றும் பாங்கு.
ஆழ்ந்த நித்திரையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஏன்? தெரிவதற்கு நமக்கு அந்நியமாய் வேறொன்றுமில்லை. உள்ளது இருப்பு ஒன்றே. அது சுகம் என்கிற திருவருள். நித்திரையில் நாம் இருந்தோம் என்பதற்குச் சான்றாக நாம் விழித்தவுடனே சுகமாகத் தூங்கினோம் என்று சொல்கிறோம் அல்லவா? நித்திரையிலிருந்து அறியாமை அகன்றால் இருப்பு சுகம் மாத்திரமே. இந்தச் சுகமே திருவருளாம். இதைவிட வேறொன்றுமில்லை.
இது சீவன் சிவனாம் தன்மையாகச் சொல்லப்படும் அத்துவித நிலையை விழக்கும் நிலை எனக்கொள்க.
ஆழ்நித்திரையில் இருக்கும் ஒரு பொருளே கனவில் பலவாய் விரிந்து விழிப்பில் வெவ்வேறு தனித்துவப் பொருள்களாகப் பரிணமிக்கின்றது.
விழிப்பில் ஈஸ்வரன், சீவன், உலகம் மூன்றும் இருக்கின்றன. கனவில் உலகம் சீவனில் ஒடுங்க சீவனும் ஈஸ்வரனுமே இருக்கிறனர். ஆழ்நித்திரையில் சீவனும் ஈஸ்வரனுள் ஒடுங்க ஈஸ்வரன் மாத்திரமே உள்பொருள் ஒன்றாய் இருக்கிறது. ஒடுக்கத்திலிருந்து சீவேஸ்வரசகங்களாக பிரபஞ்ச விருத்திகள் ஆக்கம் நிலைபேறு பெறுகின்றன. இது வேதாந்தசாரம். வேதாந்தத் தெளிவே சித்தாந்தம் என்பர் பெரியோர்.
(ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் இயங்கும் பான்மை ஈண்டு பெறப்படும்.)
சந்தேகம் 5 : தேவார தோத்திரங்களைப் பண்ணும் இசையும் பொருந்தப் பாடினாற்றான் பயனுண்டு என்று சொல்லப்படுகிறது. இதில் பொருள் உண்டா?
தெளிவு : ஆம், இதிற் பொருளுண்டு. இந்தப் பிரபஞ்சத்தின் மையம், இருப்பு, இயக்கம் அனைத்தும் ஒரு நாதமயமாக இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நாதத்திலிருந்தே பிரணவம் (விந்து-சுத்தமாயை) தோன்றிற்று. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள், பஞ்சபூதங்கள் அனைத்தும் ஒரு ரிதத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இந்த ரிதத்தையே சத்தப்பிரமம் என்று சத்தப்பிரமவாதிகள் கூறுகிறார்கள். இந்த ரிதம் பல்வேறுபட்ட நாத அதிர்வுகளைக் கொண்டது. ஒவ்வொரு அதிவும் ஒவ்வொரு பண்ணில் அமைவுபெற்றுப் பிரபஞ்ச ஆக்கம், நிலைபேறு, அழிவுக்கு ஆதாரமாக இருக்கிறது. இவற்றை மந்திரஓசை மூலமாக அணுக முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. குறிப்பிட்ட ஒரு பண்ணோடு இசைக்கின்ற ஒலி அப்பண்ணின்பாற் பொருந்திய அதிர்வுச் சக்தியைத் தட்டி எழச்செய்கிறது. எழுச்சி பெற்ற சக்தியானது அந்தப் பண்ணிக்கு மெருகூட்டிய சித்தத்தை நிறைவு செய்கின்றது.
எனவே பண்ணும் பொருளளவில் முக்கியம் என்று கொள்க. உதாரணமாக கொடியேற்ற விழாவின் போது அட்டதிக்குப் பாலகர்களை வருவிக்கக் குறிப்பிட்ட பண்களையே உரைக்குமாறு ஆகமம் சொல்கிறதேயொழிய ஒரு குறிப்பிட்ட தேவாரத்தையோ மற்றும் தோத்திரத்தையோ ஓதும்படி சொல்லவில்லை. குறிப்பிட்ட பண்ணை இசைக்க அதற்குரிய தெய்வம் தலைப்படுகிறது.
இதனால் ஒரு தெய்வத்தின் பெறுபேற்றைப் பெறவேண்டின் அதற்குரிய பண்ணில் வேண்டிய பொருளடங்கிய தோத்திரபாராயணம் செய்யவேண்டும் என்பது தெளிவு. அற்புத நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஆதாரம் இதுவே. "பண்ணாரப் பாடவல்லார்க்கில்லைப் பாவமே" என்பது சம்பந்தர் வாக்கு.(ஆன்மாக்களிடத்து இறைவன் தமது முதலுபகாரம் உணர்த்துமாறு இங்கு உணரற்பாலது.)
சந்தேகம் 6 : நாயன்மார்களது திருவாக்குகள் அற்புதங்களாக மலர்ந்தமைக்கு ஏதும் விளக்கம் உண்டா?
தெளிவு : விளக்கம் முழுமையாகப் பெறுதற்கில்லை. ஓரளவில் உற்றுணர்தல் தகும்.
சைவசித்தாந்தத்தில் நான்கு வாக்குகள் பற்றிச் சொல்லப்படுகிகிறது. சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி எனப்படும் வாக்குகள் சுத்தமாயையிலிருந்து தோன்றுகின்றன. சுத்தமாயை என்பது பரிக்கிரகசக்தி, குண்டலினிசக்தி, விந்து, பிரண்வம், எனப் பலவாறாகக் கருதப்படுகிகிறது. சுத்தமாயையில் இருந்து உற்பத்தியாகும் வாக்குகளே சத்தப்பிரபஞ்சம், அர்த்தப்பிரபஞ்சம் எனும் சித்துச்சடப் பிரபஞ்ச விருத்திகளுக்கு மூலகாரணமாம். ஓம் எனும் பிரணவ ஒலியே சத்தார்த்தப் பிரபஞ்சத்தின் அதிட்டான வஸ்து என்கிறது வேதம்.
இவற்றின் தன்மை இங்கு விபரமாக தர இயலாது விரிக்கிற் பெருகும்; விளக்குதற்கும் அரிது.
இங்கு நாம் மேற்கூறிய சித்துச்சடப் பிரபஞ்ச ஆக்கத்திற்கு அடிப்படை வாக்குகளே என்பதை மனதிற்கொண்டு, மேலும் சொல்லின் தூலபரிணாமங்கள் பற்றிச் சற்று ஆராய்வோம்.
சொற்களில் மூன்று விதமான வெளிப்பாடுகளை நாம் நடைமுறையில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒன்று அர்த்தமில்லாமல் அலட்டுகின்ற ஓலங்கள். இவற்றால் விஷேடமான பயன் இல்லை. செவிக்கினியவை ஆக்கபூர்வமானவையாகவும், கோரமான சொற்கள் தாக்கங்களைத் தரவல்லனவாகவும் இருக்கும்.
இரண்டாவது வகை கருத்துள்ள சொற்கள் ஒருவருக்குத் தெரியாத விடயத்தைப் பற்றி மற்றொருவர் கருத்து விளங்கக் கூறும் போது கேட்பவருக்கு அவ்விடயம்பற்றி ஏலவே இருந்த அறியாமை என்ற இருள் அகல அவ்விடயம் அவருக்கு வெளிச்சமாகிறது. எனவே சொல்லினுள் ஒளி, அதாவது வெளிச்சம் இருப்பதாகக் கொள்ளலாம். "சொல்லக விளக்கது சோதியுள்ளது" என்னும் அப்பர் வாக்கு இதுவே.
மூன்றாவது வாக்கு உள்ளத்தில் சிதாகாசத்தில் தூண்டப்பட்ட சித்தசுத்தியுடன் கூடிய எண்ணமே சொல்லாக வடிவெடுத்து வந்து புறத்தில் வேண்டிய பொருளாகப் பரிணமிக்கிறது. இந்த வாக்கைச் சார்ந்தனவே சிவனடியார்களது திருவாக்குகள், தேவர திருவாசகங்கள் இவையனைத்தும் சித்தசுத்தி விருத்திகளே. ஞானசம்பந்தர் ஆண்பனைகளைப் பார்த்துப் பெண்பனைகளாகுக என்ச் சங்கற்பித்தார். அப்பொழுது அவர் ஆண்பனைகளைப் பெண்பனைகளாகத் தம்சித்தத்தில் கண்டார். அவரின் அகக்காட்சி வெளியே உள்ள ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கியது.
சித்தத்தின் விளைவே எண்ணம் (சங்கற்பம்). நமது சித்தத்திற்கேற்றவாறே நமக்குச் சூழலும் வாழ்வும் வந்து அமைகின்றது. இன்றைய விஞ்ஞானத்தில் தலைசிறந்த ஞானிகள் "எண்ணங்களே சூக்குமப் பொருட்கள்" என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். ஒருவரின் எண்ணம் எவ்வண்ணம் வாழ்வும் அவ்வண்ணமே.(புறக்கரண்ங்களுக்கு எவ்வாற்றானும் காண ஒண்ணாத மூலம் அகக்கண்ணுக்குப் பொருளாவது புதுமையாம்.)
சந்தேகம் 7 : திருச்சிற்றம்பலம் என்பதன் கருத்தென்ன? திருமுறை ஓதுவதற்கு முன்னும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று உச்சரிப்பது ஏன்?
தெளிவு : திருச்சிற்றம்பலம் என்பதை திரு+சித்து+அம்பலம் என்று பிரித்துப் பொருள் உணர்க. பேரறிவுவெளி, சிதாகாசவெளி, சிவஞானவெளி எனக் கருத்து உரைத்துக் கொள்க.
இதுவே சிதம்பரம் என்றும், சொல்லப்படுகிறது. இது ஒவ்வொரு ஜீவராசியிலும் அதன் இருதயக் குகையில் சக்திமமான உள்ளக் கோயிலென ஒளிர்விடுகிறது. இதற்குள் உயிர்க்குயிரான சிவன் திருநடனம் புரிகிறார். அண்டத்தில் இவ்வெளி சிதம்பரத்தில் இருப்பதாக வேதம் சொல்கிறதுநாயன்மார் அருளிப்பாடிய தோத்திரங்களின் சாரம் அனைத்தும் இங்குதான் அடக்கம். அசரீரி வாக்குகள் அனைத்திற்கும் மூலம் இந்தச் சிதாகாசமே. அதாவது திருச்சிற்றம்பலமாம். இங்கு நடனம் புரியும் நடராசப்பெருமானே திருமுறை நாயகன் ஆவர். எனவே நாம் திருமுறைகளை இங்கு இருந்து பெறுவதற்கு வாக்கின் முதல் திருச்சிற்றம்பலம் என்று உள்ளம் ஒன்றி உரைப்பின், சிதாகாசம் திறந்து சிவஞான ஊற்றுச் செயல்படும். உண்மை ஒளியுடன் திருமுறைகள் வேண்டியவாறு ஊற்றெடுத்து வாக்கில் தொனிக்கும். இவற்றின் பயன் யாம் வேண்டிய பெறுபேற்றைத் தரும்.

திருமுறை ஓதிமுடிந்தால் திருநின்றெழுந்த திருமுறைச் சக்தியை மீளவும் இருதய குகையில் சிதாகாசத்தில் இருத்தித் திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்துக் காப்புவது மரபு. இதற்குமேல் இதன் பூரண விளக்கம் அறியுமாறில்லை.
திருமுறைகள் சிவமயமாம் திருச்சிற்றம்பல வாயில் உட்புகுந்தார்க்குப் "பரத்துள் மறைந்தது பார்முதற் பூதமாம்" வெளிப்போர்ந்தார்க்குப் "பரத்தை மறைத்தது பார்முதற் பூதமாம்")
சந்தேகம் 8 : பெரியபுராணத்தில் சித்தரிக்கப்படும் திருத்தொண்டர்களை அடையாளம் காணுமாறு தோன்றுகின்ற அடிப்படைக் குணாதிசயங்கள் யாவை?
தெளிவு : பெரியபுராணத்தில் வருகின்ற நாயன்மாரும் தொகை அடியார்களும் பிரதானமான அடிப்படைக் குணம் ஒன்றை உடையவர்களாக இருந்தமை காணற்பாலது. அதாவது சித்தத்தைச் சிவன்பால் முற்றாக வைத்துள்ளமையே இந்தக் குணம். இதனால் இவர்கள் செயற்கரியன செய்தனர். எனவே இவர்களின் சரித்திரம் புராணங்களில் பெரியபுராணம் என்ற தலைப்பையும் பெற்றது. இவர்கள் சிவசின்னங்களையும், சிவாலயங்களையும், சிவனடியார்களையும் சிவனென்றே போற்றிப் பூசித்து வணங்கினர். சிவவேடங்களில் மெய்ப்பொருள் காணுந்திறன் இவர்களிடம் இருந்தது.
சிவநிந்தனை செய்தாரை உறவுமுறை, உயர்வு, தரம் பாராது அடியோடு ஒறுத்துத் தகித்தமையும், சிவவேடந் தரித்தவர்கள் உயிருக்கு இடுக்கண் விளைவித்த போதும் அதைப் பொருட்படுத்தாது அவர்களைப் போற்றிப் பாதுகாத்தமையும் சிவ அடியார்களின் சிறப்பம்சமாகக் காணக்கிடகிறது. இது சித்தத்தைச் சிவன்பால் வைத்த திறனை உணர்த்துமாறு அமைகிறது.
மேலும் வன்னிலைத் தொண்டர்களாகிய சிறுத்தொண்டர், கண்ணப்பர் போன்றோரின் தளம் வேறு. நாம் நின்று நோக்குகின்ற தளம் வேறு. ஆரறியவல்லார் அவர்கள்தம் அருட்டிறனை.
சிவனடியார்கள் அனைவரும் சிவனிடம் பக்திவசப்பட்டு-அயரா அன்புகொண்டு இருந்தனர்.ஏலவே சித்தத்தைச் சிவன்பால் வைத்தமை என்றதும் இதுவே. இது இவர்களின் இச்சையின் விளைவே. இவர்களின் அனேகர் சிவதொண்டு செய்தனர். இது இவர்களின் கிரியையின் செயற்பாடாம். ஒருசிலர் சிவனின் அருட்பிரவாகத்தைப் புகழ்ந்து பாடினர். இது இவர்களின் ஞானத்தின் வெளிப்பாடாம்.
அன்புடமை, ஆசார ஒழுக்கசீலம், மெய்ஞ்ஞான உணர்வு இம்மூன்றும் திருவடிகள் சாருமாறு உதவும் முக்கிய ஊன்றுகோல்களாகும். எல்லா நாயன்மார்களிலும் இம்மூன்று குணங்களும் இருந்தனவாயினும் ஒவ்வொருவரில் ஒவ்வொரு குணமே மேலோங்கியிருந்தமை காணக்கிடக்கிறது. கண்ணப்பர் அன்புடமைக்கும், அப்பர் ஆசாரசீலத்திற்கும், சம்பந்தர் மெய்ஞ்ஞான உணர்வுக்கும் உதாரணமாக திகழ்ந்தனர். இவர்கள் அனைவரையும் அடியாராகப் போற்றிப் பாடும்படி அடியெடுத்துக் கொடுத்தது சிவனே எனின் இவர்கள் தம்பெருமை பேசவும் எளிதோ.(பக்திகொண்டு தோத்திரப் பாராயணம் மூலம் ஞானம் பெறுமாறு இதன்கண் தெளிவாம
சந்தேகம் 9: பொருள் விளங்கி உள்ளம் உவக்கத் திருமுறை ஓதுவதற்கு ஏதும் சுலபமான உபாயம் உண்டா?
தெளிவு : ஆம்; உண்டு. மணிவாசகர் அருளிச்செய்த சிவபுராணத்தில் இந்த உபாயம் கையாளப்படுகிறது. அதாவது சிவனுடைய நாமமே சிவனுடைய மந்திரத் திருமேனி என்று கூறப்படுகிறது. நமச்சிவாய என்னும் சிவன் நாமமே திருவருள் சுரக்கும் ஒரு சுரங்கம் எனலாம். இந்த நாமம் மனத்துக்கண் நிறைந்திருப்பின் எங்கும் எப்பொழுதும் எல்லமே நிறைவுபெறும்.
இதற்கு நாம் நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்கவென்று மனதினால் உன்னி உள்ளத்தில் ஒன்றும்படி வாழ்த்தவேண்டும். இங்ஙனம் வாழ்த்துங்கால் மனதின்கண் ஏலவே குடிகொண்ட இதர எண்ணங்கள் சிவபெருமான் நாமங்களுக்கு இடராக நின்று போட்டிபோடக் கூடும். அப்பொழுது நாம் மனோவெகத்தைக் கெடுத்தாளும் வேந்தனடி வெல்க என்று மேலும் மேலும் உச்சரித்துச் சிவன் சிவன் நாமங்கள் வெல்லுமாறு உச்சாகம் அளிக்க வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து உச்சாகமூட்டுவதனால் ஒளி புக இருள் அகல்வது போல் இருள்மயமான எண்ணங்கள் அகன்று அறிவுச் சோதியன்ன சிவன் சேவடி மனத்தின்கண் நிறைவு பெறும். அப்பொழுது அவற்றைப் போற்றி போற்றி என்று புகழ்ந்து சிவன் அருள் ஆங்கண் சிறக்குமாறு போற்றி வணங்க வேண்டும். இவ்வாறு போற்றிப் புகழ அவன் திருத்தாள் எம் உள்ளத்தாமரையில் நிலைபெறும் பாக்கியத்தைப் பெறுவோம். அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்க முடியும். சூரியனைச் சூரிய வெளிச்சத்தாலன்றி விளக்கு வெளிச்சத்தால் காணமுடியுமா? முடியாது. அங்ஙனே சிவனின் திருவருள் எம்முள்ளத்தில் நிறைந்தனாற்றான் அவன் தாள் கண்டு களிகூரும் பேறு எமக்குக் கிட்டும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், அதுவாதல் நெறியின் பாற்பட்ட பயிற்சியே இது.இங்ஙனம் சிந்தை மகிழ்ச் சிவபுராணம் ஓதுவதால் முந்தை வினைமுழுதும் ஓய்கிறது. சிந்தையில் புத்திதத்துவத்தோடு ஒட்டியே புண்ணிய பாவங்கள் நின்று பக்குவம் பெற்றக்கால் பிராப்தமாகப் புசிப்புக்கு வருகிறது. சிந்தை நிறையத் திருவருள் பதிந்தால் புண்ணிய பாவங்கள் அனைத்தும் ஒழிந்துவிடும். சிவானந்தம் மாத்திரமே நிலைநிற்கும். எங்கும் எல்லாமே எப்பொழுதும் சிவமயமே. திருப்பல்லாண்டு வாழ்த்துகளும் இந்த உபாயத்தின் பாற்பட்டதாம். ஆகவே சிந்தை தெளிய நாம் சிவன் நாமம்பயில்வோமாக.
("ஞானக்கண்ணினிற் சிந்தை நாடி" ஆன்மசுத்தி பெறுதல் இங்கு உணரற்பாலது)
சந்தேகம் 10 : கோவிலில் இறைவனுக்கு நெய்வேத்தியம் படைத்தல் முறையா? இது இறைவனைமனிதனாகப் பாவிக்கிறதாக இருக்கிறதல்லவா? இதனால் அடையும் பெறுபேறு என்ன?
தெளிவு : ஆகம முறைப்படி கோவில் மனிதரூபத்தில் கட்டப்பட்டு மனிதனில் செயல்படுகின்ற தெய்வாம்சங்களை ஆங்காங்கு விக்கிரகங்களாகவும், சின்னங்களாகவும் தாபித்து புறக்கிரியைகள் மூலம் இறைவனை துதித்து வணங்குவதற்கு உபயோகப்படுகிறது. தன்னுள் நின்று தன்னை நடாத்தும் இறைவனை அகக் காட்சியில் காணமுடியாதவர்கள் பாவனா மூலம் தரிசிக்கும் தந்திரோபாயமே ஆலய தரிசனம். இந்த உபாயத்தில் பாவனா சக்தியைப் பிரயோகித்தல் அவசியமாம்.
மனிதன் தன்னுடைய உடலைப் பாதுகாக்கச் செய்யும் உபசாரங்கள் அனைத்தும் கோயில்லைப் பாதுகாக்கச் செய்யப்பட வேண்டும் என்றது மரபுவழி நிறுவப்பட்டு வரும் ஒரு முறையாகும். இந்தக் கிரமத்திற்றான் கோவிலில் கொலுவீற்றிருக்கும் விக்கிரகத்திற்கும் அபிடேக ஆராதனைகளும், பூசாவிதானங்களும், நைவேத்தியப் படைப்புகளும் நடாத்தப் பெறுகின்றன. எமது உடலுக்கு உணவு முதலியன வழங்கப்படாவிடில் இந்த உடலில் இருக்கும் தெய்வாம்சங்கள் தொடர்ந்து செயல்படாதொழியும். இதேவண்ணம் கோயில் விக்கிரகாராதனைகள் முதலியன நடாத்தப்படாது விடில், கோவிலில் குடிகொண்டுள்ள தெய்வ சாந்நித்தியம் நிலைபெறாது ஒழிந்துவிடும்.
நம்பியாண்டார் நம்பி, பொல்லாப்பிள்ளையார் விக்கிரகத்திற்குப் படைத்த நைவேத்தியங்கள் அவரால் திருவமுது செய்யப்படாதிருக்கக் கண்டு தன்னுயிரை மாய்க்க எத்தனித்த போது பிள்ளையார் "நம்பி பொறு" என்று அவரைத் தடுத்து நைவேத்தியத்தைத் திருவமுது செய்ததாக நம்பியின் சரித்திரம் சொல்கிறது.
இந்தச் சரித்திர வாயிலாக நாம் கோவிலில் ஆகம முறைப்படி தாபித்துப் பூசிக்கப்படுகின்ற விக்கிரகங்களில் இறைவனின் சாந்நித்தியம் இருப்பதாக உணரப்படுகின்றது கண்கூடு. எனவே நாம் சமர்ப்பணம் செய்யும் நைவேத்தியம் சூக்கும நிலையில் விக்கிரகத்தில் சாந்நித்தியமாய் இருக்கும் தெய்வத்தால் ஏற்கப்ப்டுகின்றது என்று கொள்ளத்தகும்.
மேலும் எங்களுக்குத் தனுகரணாதி புவன் யோகங்களை அளிக்கும் கடவுளுக்கே இவை அனைத்தும் சொந்தம். அவர் தாம் இந்த உடமைகள் எல்லாவற்றிற்கும் உடையார். நாம் அடிமைகள். எனவே நாம் எமது என்று நினைக்கும் இறைவன் தந்த உடமைகள் அனைத்தையும் அவரின் பாதங்களில் முதல் வைத்து அவரிடம்மிருந்து பெறுவதைப் பாவனா முறையில் உறுதிப் படுத்திக் கொண்டாற்றான் இந்த உடைமைகளால் நாம் நிலைபேறான ஈடேற்றம் அடையலாம்.இறைவன் வழங்கிய ஆதி சக்தியைத் தக்கன் தனதாகப் பாவனை பண்ணி இறைவனுக்குப் பரிசு வழங்குவது போல் வழங்கியதன் விளைவு, புராண வழி உணர்தற்பாலதாம். மலையரசன் இறைவன்பாற் பெற்ற திருவருள் சக்தியை இறைவனுக்கு தன் ஆத்ம சம்ர்ப்பணமாக வழங்கியதன் பயனே சர்வ ஆன்மாக்களும் ஈடேறுமாறு சர்வேஸ்வரன் ஆறுமுகப் பெருமானாகப் பிரபஞ்சத்தின்கண் அவதரித்தார்.
மேலும் எமக்கெல்லாம் அன்னம் பாலிக்கும் அம்பலத்துக்கு நாம் நன்றிக்கடன் செலுத்துவது எங்ஙனம்? எங்களுக்குப் பொருளாகப்படுகிற அன்னத்தின் மூலம் தான் அதைச் செய்வது கடன். நாம் சாதாரணமாக உணவு பகுதிகளிலிருந்து கூட்டமாக ஒரு கவளம் எடுத்து அன்னம்பாலிக்கும் மூலத்திற்கு நன்றிக் கடனாக ஒதுக்கி வைத்ததன் பின்னரே உணவை உட்கொள்ளுதல் சைவமரபு.
சிவன் எம்மை ஆட்கொள்ளுமாறு ஆகமமாய் நின்று எம்மை அணுகி எம்முள்ளும் புறமும் நின்று எம்மைத் தம்பால் ஈர்ந்து நாம் அவனாகுமாறு அருள்புரிகிறான். இதற்குரிய பாங்கில் நம்மைத் தயார் பண்ணுவதற்கே கோயிற் கிரியா பூசாவிதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவன் எம்மை எக்காலத்தும் பிரியாது நாமேயாக இதுவரை இருந்த அந்நெறியில் நாம் அவனேயாகி அவன் பணி நிற்பது முறை.
(பாசம் களையுமாறு உணர்தல் இங்கு தெளிவாம்)
சந்தேகம் 11 : பதினொராம் திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார் அருளிய கைலாயஞான உலாவில் சிவபெருமானது திருக்கோலத்தைத் தரிசித்துப் பெண்கள் காதல் வேட்கையால் கைவளையல்கள் கழரவும் ஆடைகள்
நழுவி வீழவும் நின்று பரிதவித்தனர் எனச் சொல்லப்ப்டுகிறதன் தாற்பரியம் யாது?
தெளிவு : சிஞானபோதம் பதினொராம் சூத்திரம் ஆன்மா சிவனாரது திருவடிகளை அடையுமாறு சிவனே தொழிற்படச் சிவப்பேறு கிடைக்கப் பெற்று அனுபவித்தல் கூறப்படுகின்றது.

இந்தக்கிரமத்தில் பதினொராந் திருமுறையில் ஆன்மாக்கள் தத்தம் பக்குவங்களுக்கு ஏற்றாற்போல் சிவனுடன் புணருமாறு விழையும் பேரின்ப இச்சையை உலகியலில் சிற்றின்ப வாயிலாக விளக்கும் பான்மையே மேற்கூறப்பட்ட கைலாயஞான உலாச் செய்தி எனலாம்.
பதினொராம் திருமுறையில் இறைவன், அதாவது திரு ஆலவாய் ஆவுடையார், சேரமான் பெருமானுக்குத் தம் பக்தராகிய பாணபத்திரருக்கு வேண்டிய பொருளுதவி புரியுமாறு அருளிய அறக்கட்டளை முதற் திருமுகப் பாசுரமாக அமைதல் காண்க.
சிவனே இங்கு முதற்கண் வெளிப்படுதல் இத்திருமுறைக் காப்பியத்தின் சிறப்பாம். இறைவன் வெளிப்பட ஆன்மாக்கள் தத்தம் பக்குவங்களுக்கேற்ப அவரை அணைதல் முறையாகக் கூறப்படுகிறது.
சிவனே நாயகனாகவும் அனைத்து ஆன்மாக்களும் பெண்களாகவும் இங்கு பேசப்படுகிறது. ஆன்மாக்களின் பக்குவங்களைப் பெண்களின் பல்வேறு (7) பருவங்களின் மேல் வைத்து விளக்கம் தரப்படுகிறது.
பெண்களில் ஐந்து வயதிற்கு குறைந்தவர்கள் ஆண்மகனைப் (தலைவனைப்) பற்றி உணர்வு ஒன்றும் இல்லாதவர்கள். எனவே அவர்களுக்கு பக்குவம் கூறப்படவில்லை.
இந்த ரீதியில் உள்ள ஆன்மாக்கள் அன்றாடம் உண்டுடுத்து உறங்குபவர்களே தவிர கடவுள் பற்றிய கருத்துக் கனவிலும் கொள்ளார்.
ஐந்து வயதுக்கு மேல் ஏழு வயது வரையுமுள்ள பெண்கள் "பேதை"ப் பருவம் எய்துவார்கள் எனப்படுகிறது. இவர்கள் தலைமகனைப் பற்றிச் சிந்தியாதவர்கள்; அவனை ஈர்க்கும் பெற்றியும் அறியாதவர்கள். எனினும் ஆண் பெண் பேதம் தெரிந்தவர்கள்.
இந்தப்படியில் இயங்கும் ஆன்மாக்கள் கடவுள் பற்றிய சிந்தனை இல்லாத மந்தநிலையில் இருப்பினும் கடவுள் இருப்புப் பற்றிய சந்தேகம் கலந்த சிந்தனை சிறிது கொள்ளத்தான் செய்வார்கள்.
ஏழு வயது முதல் பதினொரு வயதுவரை உள்ள னெண் "பெதும்பை" எனப்படுகிறாள். பெதும்பைப் பெண்கள் தலைமகனைச் சாருங் காலம் வரும் என்று தெரிந்தவர்கள். ஆனால் அதுபற்றி அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள்.
இந்தப் பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரை அடையும் காலம் ஒருகால் கிட்டும் என்றும் கொள்வார்கள் எனினும், அதுபற்றிச் சற்றும் சிரத்தை காட்டார்.
"மங்கை"ப் பருவப் (12/13) தலைமகனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தில் அரும்பும் நிலையில் செயல்படக் காணலாம்.
இந்த மங்கைப் பருவ ஆன்மாக்களுக்குக் கடவுள் இருப்புப்பற்றி அறியும் ஆவல் மேலோங்கி நிற்கும். அதற்குரிய இலட்சணங்கள் சிறிது சிறிதாக வெளிக்காட்டும்.
மடந்தை"ப் பருவப் பெண்கள் (14/19) தலைமகன், இரும்புக்கு காந்தம் போலத் தங்களை ஈர்ப்ப, இருப்புக் கொள்ளாது தலைவனை அடையும் மார்க்கம் சரிவரக் காணாது துடிப்பர்.
இதற்குச் சமானமான படியில்லுள்ள ஆன்மாக்கள் இறைவனின் திருவருளின் ஈர்ப்புக்குள்ளாகி அவனை முழுமையாக அடையுமாறு புரியாது பல்வேறு பிரயத்தனங்களைக் கையாள்வர்.
"அரிவை", "தெரிவை"ப் பக்குவப் பெண்கள் (20/25, 26/30) தலைவனின் கலவி பற்றிய தியானத்தில் தலைவனை நோக்கிப் பல்வேறு சேட்டைகளைப் புரிந்து மயங்குவர்.
இந்தப் பக்குவ ஆன்மாக்கள் இறைவன் தரிசனம் ஓரளவு பெற்று சிவபோகத்தை யாசித்துப் பல்வேறு பூசாக்கிரமங்களை அனுட்டித்துப் பக்தியில் திளைப்பர்.
பேரிளம்பெண்" பக்குவப் பெண்கள் (31/40) தலைவன் கலவியை அனுபவித்து அவனைப் பிரியாது அவனில் தம்மை இழந்து இன்ப ஊற்றில் ஒன்றி ஒடுங்குவர்.
இந்தப் பக்குவத்திற்குச் சமமான ஆன்மாக்கள் இறைவனைத் தவிர வேறொன்றையும் காணார். இவர்கள் சிவனுடன் அத்துவிதமாகி (சிவபோகத்தில் தங்களை முற்றாக இழந்து) ஏகனாகி இறைபணி நிற்பர். இறைபணி நிற்பர் என்றது தங்கள் செயல்கள் இன்றி எல்லாம் இறைசெயல்களகக் கண்டு செயல்களைப் புரிதல் எனப் பொருள்படும்.
இங்கே பெண்கள் தலைவனைக் கண்டு வளையல் கழரவும், ஆடைகள் நழுவவும் நிற்கும் நிலை ஆன்மாக்களுக்களைப் பொறுத்தமட்டில் மிகமுக்கியமான இடம். சிவனடியார் நிலை இதுவே.. இறைவனைக் கண்டதும் உலகியற் பாசம் நீங்கிவிடும். பெண்களின் கைவளையல்கள் கழருவது என்பது பாச நீக்கத்தையே குறிக்கும். அங்ஙனம் நீங்கவே தனுகரணாதி தத்துவங்கள் வலிகெட்டுச் செயலற்றுவிடும். ஆடைகள் நழுவுதல் இதையே குறிக்கும். முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கப் பெறுவர். புறப்பற்று நீங்க அக்ப்பற்றுத் தொழில்படும்.
சிற்றின்பம் பேரின்ப வாயில் என்பர் அறிவறிந்த பெரியோர். ஒருகாதல் முதிர்ந்த பெண் தந்தலைவனின் புணர்ச்சியில் தன்வசம் முற்றாக இழந்து தன்னை அவனாகக் காண்கிறாள். தலைவனில் தலைவி இரண்டறக் கலக்கிறாள். கலவியில் அக்கணம் காணும் இரண்டற்ற ஒருமை உணர்ச்சியே சிற்றின்பத்தின் மூலம் அனுபவிக்கின்ற அத்துவிதம் எனலாம்.
பக்குவம் முதிர்ந்த ஆன்மா சிவத்துடன் ஐக்கியப்படும்போது பேரின்பம் துய்த்துத் தன்னை இழந்து சிவமாகி அனுபவிக்கிற அத்துவிதம் பற்றிய ஆன்மீக விளக்கமே கைலாய ஞானௌலாவில் சித்தரிக்கப்படுகிறது.

("பரமேசுவரனது சீபாதங்களை அணையுமாறு" இங்கு உணர்த்தியது.)


சந்தேகம் 12 : சிவவேடங்கள், சிவாலயங்கள் குறிக்கும் உட்பொருள் என்ன?
தெளிவு : திருநீறு, உருத்திராட்சம், காவிவஸ்திரம் ஆகியனவே முக்கியமான சிவவேடங்கள்.
திருநீறு : சிவனின் திருமேனிய்ல் நீக்கமற நிறைந்திருப்பதாகவும் இதன் தத்துவம் பராசக்தியே என்றும் திருமுறைகளில் அழுத்தி ஓதப்படுகின்றன.
திருநீற்றின் பொருள் விளங்குமாறு அதன் உபயோகம் விபரமாகத் திருநீற்றுப் பதிகத்தில் தரப்பட்டுள்ளது. இதுவே சிவஞானம்-திருவருளாகி எங்கும் வியாபகமாய், எல்லாம் ஒடுங்கிய போதும் இது சிவனினன்றி வேறின் ஒடுங்காது விளங்கும்.
உருத்திராட்சம் : சிவபெருமான் ஆன்மாக்களில் கொண்ட இரக்கம் அவரின் கண்ணினின்றும் நீராக சொரிந்து வித்துகளாக வந்தனவே உருத்திராட்சம் எனப் புராணம் கூறுகிறது.
உருத்திராட்சம் அணிந்தவர்களை எந்தவொரு தீங்கும் அணுகாது. இவர்களில் அசுரத்துவம் நீங்க ஆன்மீகம் தலைப்படும்.
உருத்திராட்சம் சிரசிலும், கழுத்திலும், கைகளிலும் தரிசிக்கலாம். சந்தியாவந்தனம், பஞ்சாட்சரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம் முதலிய சிவவழிபாடுகள் செய்யுங் காலங்களில் உருத்திராட்சம் தரிப்பது உத்தமம்.
காவிவஸ்திரம் : காவிவஸ்திரம் வைராக்கியத்தை குறிக்கும். இதை அணிந்தவர்களின் உள்ளம் புறப்பற்றைத் துறந்து அகப்பற்றை நாடும்.
புறத்திலிருந்து வரும் அசுத்த எண்ண அலைகள் காவிவஸ்திரம் அணிந்தோரின் உள்ளத்தை அணைய ஆற்றாது அவை எங்கு இருந்து வந்தனவோ ஆங்கண் சென்றழுந்துவதியல்பு. தீப தூப ஆராதனைகள், மந்திரோச்சாடனங்கள் உள்ளத்திற் செறியக் காவிவஸ்திரம் ஒரு ஊடகமாக நிண்று உதவுகின்றது.
ஆலயம்: "உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்கிறது திருமந்திரம்.
கோவில் மனிதரூபத்தில் அமைக்கப் பெற்றமை இங்கு தெளிவு. பிரபஞ்ச அமைப்பும் மனித அமைப்பும் ஒரேதன்மையனவாம். சித்தாந்தத்தில் மனிதனைக் குட்டிப் பிரபஞ்சம் என்று அழைப்பதுண்டு. பிரனஞ்சத்திலும் வெவ்வேறு தளங்கள் உண்டு. மனிதனிலும் வேவ்வேறு தூல சூக்கும சரீரங்கள் உண்டு. அதிசூக்கும தளத்தில் பிரபஞ்சமும் மனிதனும் ஒன்றாம். இந்த இடத்தில் இரண்டும் ஒரு பொருளாம்பரத்தில் ஒடுக்கம் ஆகின்றன. இந்த ஒன்றாம் பொருளே தூபபரிமாணங்களின் விரிந்தும் வெவ்வேறாகவும் பரிணமிக்கின்றன.
நாமெல்லாம் இந்த பரிணாமங்களின் விளிம்பில் மாத்திரமே செயற்படுகிறோம். அதனாலேதான் வெவ்வேறாகக் கட்டுப்பட்டு, மட்டுப் படுத்தப்பட்டுக் குருடராய்த் திரிகிறோம்.
இந்தநிலை நீங்கி எங்கும் உள்பொருளாய் சிவமாம் தன்மை சாருமாறே கோயில் வழிபாட்டு முறை ஒரு ஆகம தந்திரோபாயமாக நமக்கு இறைவனால் அருளப்பெற்றது.

கோயிலில் அக்கினி ஓமம் மூலம் மந்திர சகிதமாகத் தெவ சாந்நித்தியத்தை எழச்செய்து கும்பத்திற் தாபித்து ஆகம விதிப்படி குறிப்பிட்ட கிரியைகள் மூலம் மருந்து சாத்தப்பட்ட மூல விம்பத்தில் ஏற்றி, உரிய சடங்குகள் நடாத்திப் பூசிப்பது வழக்கம். விழாக்காலங்களில் இறை சாந்நித்தியம் தம்பத்திலும் வியாபிக்குமாறு பூசாவிதானங்களைக் கையாணடு ஆன்ம ஈடேற்றத்திற்கு விசேட கிரியைகள் நடாத்தப்படுவது மரபு.
இங்கு மனிதனின் நாபித்தானம் ஓமகுண்டலமாகவும், இருதயத்தானம் கும்பமாகவும்,மூளையின் அடிப்பகுதியாகிய புருவநடு விம்பமாகவும், முள்ளந்தண்டில் இயங்கும் சுழுமுனைநாடி கொடித்தம்பமாகவும் பாவனை செய்யப்படுகின்றன.
ஓமகுண்டத்தில் இடப்படும் சமித்தாதியன ஆகாரமாகவும் நெய் மூச்சிலுள்ள பிராணனாகவும், மந்திரங்கள் மனத்தில் எழும் சங்கற்பங்களாகவும் கருத்தில் கொள்ளத்தகும்.
இந்தப்பாங்கில் எம்முள் இருக்கும் இறைவனைத் துயிலினிருந்தும் எழுந்தருளிப் பிரசன்னமாகச் செய்யும் உபாயமே இந்தப் புறக் கிரியகளாம்.

இந்தவகையில் பிரபஞ்சத்தின் சூக்கும தளத்தினின்றும் இறைசாத்தியத்தைப் புறத்திற்கோவிலில் பிரசன்னமாகி நிலை கொள்ளுமாறு செய்வதற்கே இந்த ஆலயக் கிரியகளும் வழிபாடுகளும் கையாளப்படுகின்றன.
ஆலயவழிபாட்டுக் கிரமமுறையில் நாம் எம்மைப் பரிகரித்தல்முறை. பரிசுத்தமான சூழலில் ஆக்கபூர்வமான சார்புகளோடு இணைய வேண்டும்.
சாத்துவீகமான ஆகாரங்களைச் சிவார்ப்பணமாக உட்கொள்ள வேண்டும்.
ஒழுங்காகப் பிராணாயாமப் பயிற்சி செய்து பிராணனைச் சுழுமுனை நாடியில் தம்பனம் செய்ய வேண்டும். இந்தப் பிராண சக்தியால் நாபித்தானத்தில் ஆகாரசுத்தி ஏற்படும். இதனால் புலனடக்கம் சாத்தியமாகும். புலனடங்க மனமும் ஒடுங்கும். மனோலயமே ஆன்ம தரிஷனத்திற்கு வழிவகுக்கும்.
மனம் ஒடுங்கி ஒருநிலைப்பட இருதயத் தாமரையில் வீற்றிருக்கும் திருவருட் சக்தியைத் தோத்திரங்களாலும் நாமவளியாலும் பூசிக்க வேண்டும். நாம அர்ச்சனை சீவனுக்குச் சிவனைக் காட்டும் ஒரு வெளிச்சமாகும்.
இங்ஙனம் பூசிக்கச் கழுமுனை நாடியில் குண்டலினி சக்தி ஞானக் கனலாக எழுந்து ஆஞ்ஞைத்தானத்தை அடையும். அப்பொழுது உள்ளத்தை உருக்கிப் புருவ மத்தியை நோக்கித் தியானம் செய்ய வேண்டிம். இதன் பயனாகச் சகஸ்ர தளத்தினின்றும் அமிர்தம் பொழியும் எனச் சிவாகம நூல்கள் கூறுகின்றன.
தோத்திரங்களில் பஞ்சபுராணமும், மந்திரோச்சாடன்ங்களில் பஞ்சாட்சர செபமும் உயர்ந்தனவாம்.
பஞ்சபுராணங்களில் தேவாரம் பண்ணுக்கும், திருவாசகம் பக்திக்கும், திருவிசைப்பா இசைக்கும், திருப்பல்லாண்டு வாழ்த்துக்கும், புராணம் பொருளுக்கும் ஒப்பனவாக அமைகின்றதன.
பண்ணில் தெய்வாம்சம் எழுந்து, பக்திவலையில் அகப்பட்டு, இசையால் இதயத்தில் ஒன்றி, வாழ்த்தினால் நிலைபெற்று, பொருளாம் தன்மை இதனாற் பெறப்படும்.
பஞ்சாட்சரமே மூலமந்திரம். பஞ்சகிருத்தியத்தின் மூலவேர். இதைச் செபம் பண்ணும் முறை குருகுலம் தீட்சை பெறுங்கால் உபதேச முறைப்படி கொள்ளல் தகும். அதிகாரம் இன்மையால் இதுபற்றி இங்கு விரித்தற்கு அஞ்சுகிறோம்.சிவலிங்கம் சிவனின் அருவுருவத் திருமேனியாகும். இது சோதிக்கொழுந்தெனவும் ஞானசொரூபம் எனவும் சொல்லப்படும்.
லிங்கம் என்பது சமஸ்கிருதத்தில் அடையாளம் என்பதைப் குறிக்கும். எங்கு எல்லாம் ஒடுங்குகின்றனவோ அங்கிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. இந்த ஒடுக்கத்தையும் தோற்றத்தையும் குறிக்கும் அடையாளமே லிங்கம் என்று கொள்க.மால் அயனறியாவாறு தோற்றிய சிவாக்கினிப்பிழம்பே பின்னர் அவர்கட்கிரங்கிக் குளிர்ந்து ஒடுங்கித் திரண்டு லிங்க வடிவானது என்று புராணம் கூறுகிறது.
லிங்க சொரூபத்தை வணங்குவோரின் பாசங்கள் பாவங்கள் அனைத்தும் சிவாக்கினியால் தகிக்கப்படும்.
கோவில் மூலத்தானத்தில் கருவறையில் லிங்க மூர்த்தி எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இடப்பக்கமாகத் தெற்கு நோக்கிச் சக்தி விக்கிரகம் அமைக்கப் பெற்றிருக்கும். ஆன்மாக்களின் உய்தி கருதிச் சிவசக்தி பிதிர்கள் பக்கமாகிய தெற்கு நோக்கி எழுந்திருப்பது சாலும். சிவன் சக்தி வழிநின்றே ஆன்மாக்களை ஆட்கொள்கிறார் என்பது இதனால் தெளிவு.
நந்தி சுத்திபெற்ற ஆன்மாவைக் குறிக்கிறது. இது ஆன்மா சிவத்தில் லயித்திருக்கும் நிலை.
பலிபீடம் பத்திரலிங்கம் என அழைக்கப்படுகிறது. சீவன் நான் எனது என்னும் அகந்தை மமதைகளை ஈஸ்வரனுக்கு (பக்திலிங்கத்திடம்) ஒப்படைத்தால் ஆன்மசுத்தி ஏற்பட்டு சிவலோலயம் ஏற்படுவதற்கு வழி செய்கிறது.
கொடிமரம் தானு என்றும் சிவன் என்றும் சொல்லப்படுகிறது. கொடி மரத்தில் சுற்றியிருக்கும் தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். ஆன்மா பாசத்தில் பந்தப்பட்டிருக்கும் நிலை பசுநிலை. சீலை மேலே ஏறிச் சக்ஸ்ரதளம் என்னும் நிலையை அடையும் போது (பசு) ஆன்மாவாகிறது. இந்த இடத்தில் கொடிச் சீலைத் தலைப்பில் நந்தியின் படம் வரைந்திருப்பதைக் காணலாம். இங்கு ஆன்மா சிவமாம், எனவே நந்தி சிவனெனவே வணங்கப்படுவர். நந்திக்குப் பக்கத்தில் காணும் அத்திரதேவர் திருவருட் சக்தியாம்(பரிக்கிரகசக்தி எனக் கருதுவோரும் உளர்) கொடிச் சீலையுடன் ஒன்று இணைந்து மேலே செல்லும் மஞ்சள் கயிறு திரோதன சக்தியாய் இயங்கி மேலேறும் நிலையில் திருவருட் சக்தியாகும்.
இவற்றை இன்னொரு விதமாக கொள்வதுண்டு. மனிதனின் முள்ளந்தண்டைக் கொடிமரம் குறிப்பதாகவும் கொடிச்சீலை குண்டலினியைக் குறிப்பதாகவும் கொள்வர். எவ்வாறு நோக்கினும் சீவன் சிவனாகவோ, பசு ஆன்மாவாகவோ, குண்டலினி சக்தி திருவருட்சக்தியாகவொ சுத்திபெறக் கொடித்தம்பமாகிய சிவம் தாங்கியாக நின்று திருவருளைச் செலுத்துமாறு ஈண்டு உணரப்பெறும்.
சிவன் தாங்கியாகவும் சீவன் அதிற் தங்கியும் இருக்க, சீவன் தாங்கியாகவும் பாசம் அதிற் தங்கியும் இருத்தல் கொடித்தம்பதாற்பரியமாம்.
மூலத்தையோ எழுந்தருளியையோ மறைத்திருக்கும் திரைச்சீலை திரோதானசக்தி எனப்படும்.

விநாயகர் : கோயிலில் முதல் விநாயகரை வணங்குதல் முறை. விநாயகர் பிரணவரூபர். பிரபஞ்ச கிருத்தியத்திற்ககு மூலம் பிரணவம்-பிரணவமூலர் விநாயகப்பெருமானே.
பைரவர் : வளிபாடுகளின் முடிவில் பைரவ சுவாமியை வணங்குதல் முறை. பைரவர் பிரபஞ்ச ஒடுக்கத்திற்குக் (இறுதிக்குக்) காரணமாக இயங்குகிறார். இவர் அண்டகோள உச்சிமுகட்டில் ஆட்சி செய்கிறார். பிரபஞ்சம் அனைத்துக்கும் இவர் ஓர் அரண் போன்றவர்.
படைத்தலைச் செய்கின்ற பிரமனின் அகந்தையைப் போக்குமாறு அவரின் உச்சந்தலையைத் தன் நகத்தாற் கிள்ளி எடுத்து ஏந்தியும், மற்றும் மாலாதி தேவர்களின் குருதியைப் பலியாகக் கொண்டு அடக்கியும் சங்காரமூர்த்தியின் அம்சமாகத் தொழிற்படும் ஆற்றலால் சிவமூர்த்தியே பைரவமூர்த்தி என்பது தெளிவாம்.
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்

புரிதரு வடுகனைப் போற்றி சஎகுவாம்.

(நினைக்கப்படற்கரிய பதியை நினக்கற்பாலதாய சின்னங்களிற் கண்டு வழிபடுமுறை உணர்த்தியவாறு)

சிவனடியார் திருவடி போற்றி

மெய்கண்டதேவனார் திருத்தாள் போற்றி




No comments:

Post a Comment