Tuesday, January 11, 2011

சக்தி வழிபாடு

சக்தி வழிபாடு

சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக, தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.
சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள்.
முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள்.
வாழ்வு சிறப்புற ஆட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும். என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும், கலை ஞானங்களைப் பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும், வாழ்வை ஆற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர்.
அவதாரபுருஷர்களாக, சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி வந்தனர். இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும், கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும்.
ஜகதம்பா; உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான இராஜராஜேஸ்வரி [பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும், மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது. இதுவே சக்தியின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம், வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும்.சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது. சக்தி இன்றேல் சிவன் இல்லை, புறச்சமயங்களின் தாக்குதலால் சக்திக்கு தனி உரிமை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையாலும் புராணங்களின் செல்வாக்கு நிலையாலும் சாக்தம் என்ற மதம் உருவாகியது. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதமே சாக்தம் ஆகும். சைவம் தத்துவநிலையில் சக்திக்கு இடம் கொடுத்தது. முதன்மை வேறுபாடே இருமதத்திற்கும் உள்ள வித்தியாசம். பிருங்கி முன்வர் சிவத்தையன்றிச் சக்தியை வழிபடுவதில்லை.

சாக்த சமயம் அம்மன் வழிபாட்டை புதிய நிலையில் வகுத்துக்காட்டின. அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது கோடுகளாலான யந்திர வழிபாடாகும். சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை "சிறீசக்கர பூசை" என்பர். இதனை ஸ்ரீவித்யோ பாசனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இது 3 வகைப்படும். அதில் பூப்பிரஸ்தார யந்திரமே இலங்கையில் காணப்படுகிறது.
பொன்னம்பலவாணேசர் கோவில் ராஜராஜேசர் முன்னிலையிலும், நயினை நாகபூசனி அம்பாள் முன்னிலையிலும், முன்னேஸ்வர ஆலயத்தில் வடிவாம்பிகை முன்னிலையிலும் சக்கர யந்திரத்தில் எழுதப்பட்ட மந்திரங்களை உபாசிக்கும் போது அது பயன்கொடுப்பதில் பெருமையுள்ளதாகிறது. இவ் வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களிலும் விக்கிரகங்களின் கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படுகிறது.
ஹரப்பா காலத்திற்கும் குப்தர் காலத்திற்கும் இடையில் சக்தி வழிபாடு கருத்தூன்றி இருந்ததேயன்றி சிறப்பான வழர்ச்சி பெறவில்லை. சக்தி என்ற கருத்து மக்களிடையே நிலையூன்றி இருந்தது. இக் கருத்தை ஆதரிக்குமாற்போல இருக்கு வேதம் துணைநின்றது. சக்தியை இயக்குசக்தி, இயங்குசக்தி என வகைப்படுத்தலாம். இயங்குசக்தியும் இயக்குசக்தியுமாயுள்ள தெய்வம் சூரியன். அவனுக்குரியது சாவித்திரி மந்திரம் அல்லது காயத்திரி மந்திரம் ஆகும். சவிதா என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்பது பொருள். உலகை இயக்குபவன் ஆதலால் இயக்குசக்தி சூரியனிடம் உண்டு. அவனை இயக்குகின்றவள் உஷையும் அக்கினியும் ஆகும். உஷை தாய் என்றும் அக்கினி காதலி எனவும் போற்றப்பட்டனர். வேத காலத்திலும் சக்திவழிபாடு இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ஆகமங்கள் தோற்றம் பெற்றன.
ஆகமங்கள் உருவம் அமைத்து வழிபடும் நிலையை ஊக்குவித்தன. உருவங்களில் சக்திக்குரிய இடப்பாகத்தையும் வரையறுக்க தவறவில்லை. அர்த்தநாரீஸ்வரர் உருவம் சக்திக்குரிய சமபங்கம் கொடுத்த தன்மையை முன் வைக்கின்றது. சிவனுக்குரிய நிலையை உருவ அமைதியை எடுத்துகாட்டும் இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின. இவை சிவனால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சக்திக்குரிய ஆகமங்கள் இருபத்தேழு தோற்றம் பெற்றன. இவை சக்தியால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவனுக்கு நவசக்திகள் உண்டு. அவை வாமா, ஜேஸ்ட்டா, ரெளத்திரி, காளி, கல்விகரணி, பலவிகரணி, சர்வபூதமணி எனப்படும். இக்காரணத்தால் 9 எண்வரக்கூடிய 27 ஆகமங்கள் தோற்றம் பெற்றது.
பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள். அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன.
அடுத்த நிலையில் அம்மன் வழிபாட்டில் பலியிடுதல் சிறப்பான தொன்று. கர்ப்பூராதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் செம்மறியாடு, ஒட்டகம், பூனை, எருமை முதலியவற்றை பலியிடும்படி கூறப்படுகிறது. உண்மையில் இவைகளைப் பலியிடுதல் அல்ல. இவைகளின் குணங்கள் மனிதனிடத்தில் உள்ளன. அக்கெட்ட குணங்களை மனிதன் பலியிட வேண்டும். அங்கேயே நல்லொளி தெரியும். ஒளியைத் தாங்கியுள்ள தீபம் அம்பாள் எனப் போற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடும் அம்பாளுக்கே ஆயிற்று.
பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள். இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றி இருக்கலாம்.
குப்தர் காலத்தில் சக்திக்குரிய கோயில்கள் உண்டு. சந்திர குப்தனுடைய நாணயத்தில் சிங்கத்தின் மீது அம்மன் எழுந்தருளியிருக்கும் நிலை பொறிக்கப்பட்டுள்ளது. குப்த மன்னரே பெண் தெய்வங்கட்கு விக்கிரம் அமைக்கும் பாணியை தோற்றுவித்தனர். அதன் சாயலாக தமிழ் நாட்டில் பெண் தெய்வங்களுக்கு விக்கிரகம் அமைத்தல் முறை பின்பற்றப்படடு பின் வந்த காலங்களில் பெரிய மண்டலங்களுடன் கூடிய ஆலயங்கள் தோற்றம் பெறலாயின.
காளிதாச மகாகவியும் சக்திமீது பல பாடல்களை பாடியுள்ளார். இதிகாச புராணத்தில் தாட்சாயினி, பார்வதி பற்றிய கருத்துக்கள் உண்டு. சிவ புராணத்தில் உமை தன்னை பிரமமாகவும், பேரொளியாகவும் பரந்த இவ்வுலகமாகவும் காரண காரியமாகவும் எல்லாமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றது. மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமைகள், வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் புராணங்களது குறிப்பின்படி சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் 3 தெய்வங்களினதும் பேரொளியிலிருந்து சக்தி தோற்றம் பெற்றாள் எனக் குறிப்பிடுகின்றது.தென் இந்திய வரலாற்றுக்காலங்களில் சங்ககாலத்திலிருந்து சக்தி வழிபாடு சிறப்படைந்திருந்தது. பாலை நில மக்கள் கொற்றவையை வழிபட்டிருந்தனர். அக்கால நூலின் "ஓங்கு புகழ் காமர்ச்செல்வி" எனவும் திருமுருகாற்றுப்படை வெற்றிவேல் போர்க்கொற்றவை எனவும் குறிப்பிடுகின்றது.
மணிமேகலை, சிவப்பதிகாரம் போன்ற நூல்களில் சக்தியானவள் காளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை என்ற பெயர்கள் உண்டு. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றி பாடும்போது சக்தியினையும் போற்றிப் பாடியிருந்தமை குறித்தற்குரியது.
பல்லவர் காலப்பகுதியில் சக்திவழிபாடு சைவத்துடன் இணைந்து வளர்ந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் ஆதாரப்படுத்துகிறது. " அம்மையே அப்பா ஒப்பிலாமணியே.. மங்கயர்க்கரசி.., பிடியதனுருவுமை.., மாதர்ப்பிறைக்கண்ணியானை..," இதைவிட சங்கரரது பிரபஞ்சசாரம், சௌந்தர்யலகரி போன்ற நூல்களிலே சக்தி போற்றப்படுகின்றன.
பல்லவர் காலத்தின் பின்பும் சக்திவழிபாடு சிறப்புற்றிருந்தது. சோழர் காலத்தில் சக்திக்குரிய தலங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் ராஜராஜேஸ்வரியையும், பாண்டியர் நாயக்கர் மீனாட்சியையும் வழிபட்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி கோயில் முழுமையாக அமைவுபெற்றிருந்தது. குமரகுருபரர் சகலகலாவல்லிமாலையையும் அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியையும் சக்திமீது பாடினர்.
கஜபாகு மன்னர் காலத்தில் கிராமிய வழிபாட்டின் அம்சமாக கண்ணகி வழிபாடு தோற்றபெற முத்துமாரி அம்மன் வழிபாடும் கிராமிய வழிபாட்டில் தன் இடத்தை எடுத்துக் கொண்டது. இம்முத்துமாரி காத்தவராயனின் தாயாகவும் காணப்பட்டாள். இவளுக்கு கரகமெடுத்து நேர்த்திக்கடனை கிராமிய மக்கள் நிறைவேற்றினர். இவள் முத்துமாலையை கோபத்தால் வீசியபோது அம்பாள் நோய் தோன்றியதெனவும் குளிர்த்தி, கரகம் முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதால் நோய்தீர்ந்தது எனவும் கர்ணபரம்பரைக் கதையொன்று கூறும்.
பிரதேசத்துக்கு பிரதேசம் கிராமத்திற்கு கிராமம் அம்மன் வழிபாடு சிறப்புப்பெற்றது. பொதுவாக மக்கள் கரகம், காவடி, குளிர்த்தி என்பவற்றால் வழிபாட்டை நிறைவேற்றுகின்றனர். மேற்கூறிய பெண்தெய்வ ஆலயங்கள் சீரும் சிறப்பும் பெற்று ஆகம முறைப்படியாக பெரிய ஆலயங்களாக உருப்பெற்றன.
இந்தியாவின் வட நாட்டிலேயே மிகுதியான செல்வாக்கை சக்தி வழிபாடு பெற்றுள்ளது. அச்செல்வாக்கு தென் நாட்டிலும் வலுப்பெற்றுள்ளது. உதாரணமாக நவராத்திரியை தென்னாடு பெற்றுக் கொண்டது. தசரா என்னும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது சான்றாகிறது. வட நாட்டில் வாழ்ந்த காளிதாசர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்றோர் அம்பாள் உபாசகர்களே. குமரகுருபரர், அபிராமிபட்டர் போன்றோரும் தென்நாட்டு அம்பாள் உபாசகரே. "தனம் தரும் கல்வி தரும்..." என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். இவ்வாறான சக்திக்குரிய சிறந்த விரதமாக நவராத்திரியையும், கணவனைப்பெற கார்த்தியாயினி விரதமும் கன்னிப்பெண்கள் அனுஷ்ட்டிப்பர். கேதாரகௌரி விரதம் உமை சிவனை அடைந்த வரலாற்றைக் கூறுகிறது எனலாம்.
20ம் நூற்றாண்டிலே அம்பாள் வழிபாடு சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். வீடுகள், பாடசாலைகள், வேலைத்தளம் என்பவற்றில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இவ்வாறு வரலாற்று நோக்கிலே அம்மன் வாழிபாட்டினைப் பற்றிக்கூறலாம்.

1 comment:

  1. தெளிவாக சுருக்கமாக அழகாக வணையப்பட்டுள்ள கட்டுரை. வாழ்க

    ReplyDelete