Tuesday, January 11, 2011

மஹோற்சவ கிரியைகளின் விளக்கம்

மஹோற்சவ கிரியைகளும் அதன் விளக்கமும்
உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர்.
நைமித்திக உற்சவங்களில் சிறந்தது மஹோற்சவம் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் பிரமோற்சவமாகும். நித்திய கிரியைகளின்போது ஏற்படும் குற்றம் குறைகளுக்குப் பிராயச்சித்தமாக அமைவது இந்த மஹோற்சவமாகும்.
கொடித்தம்பம்:
மஹோற்சவம் நிகழ்வதற்குக் கொடிமரம் அவசியம். இது நந்தி, பலிபீடம் என்பவற்றையடுத்து மனிதனின் முள்ளந்தண்டை நிகர்ந்து நிமிர்ந்து நிற்கும். மூங்கில், கருங்காலி, வில்வம்,தேவதாரு, பலாசு, தென்னை முதலிய மரங்களுள் ஒன்று கொடிமரமாகப் பயன்படித்தப்பெற்றிருக்கும். உலோக தகடுகளால் போர்த்தப்பெற்று மேலே கொடிச்சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புக்களையும் கொண்டதாக உருவாக்கப்பெற்றிருக்கும்.நிலமட்டத்திலிருந்து கர்பக்கிரக விமானத்தின் (ஸ்தூபியின்) கலச மட்டம் வரையிலான உயரமே கொடிமரத்தின் உயரமாகும். இதன் அடியிலுள்ள சதுரவடிவமான பாகம் பிரம்மபாகம். அதன் மேலுள்ள எண்கோன அமைப்பு விஷ்ணுபாகம். அதற்கு மேல் விருத்தமாக அமைவது ருத்ரபாகம்,
கொடிச்சீலை:
கொடிமரத்தில் ஏற்றப்பெறும் கொடிச்சீலையின் நீளம் தம்பத்தின் உயரத்தைப்போல் இரு மடங்கு உடையயதாக இருக்க வேண்டும். அதன் ஒன்பதில் ஒருபாகமாக எடுத்த சதுரத்தில் மேலந்தத்திலிருந்து அந்த ஆலய மூர்த்தியின் வாகனம் படத்தின் மையத்தில் வரையப்பெறும். அதன் முதுகில், அவ்வாலய மூர்த்தியின் அஸ்திரதேவர் வரையப்பெறும். இது ஆன்மா மலபரிகாரம் அடைந்ததைக் குறிக்கும். இவற்றைவிட சூரிய சந்திரர்களும், அஷ்ட மங்கலப் பொருள்களும் வரையப் பெற்றிருக்கும்.
சித்தாந்தக் கருத்துக்கள்:
இப்படம் தெளிவாகத் தெரியும் வண்ணம் மேற்புறத்தில் குறுக்குச் சட்டம் ஒன்று கட்டப்பெற்று அதன்மேல் கொடியேற்ற உதவும் கயிறு கட்டப்பெறுவதற்கமைவாக மேற்பாகம் முடிச்சாக அ,ஐக்கப் பெறும். அம்முடிச்சு பிரம்மக் கிரந்தி எனப்பெறும். இதில் இணைக்கப்பெற்று கொடியை ஏற்றப் பயன்பெறுகின்ற மஞ்சட்கயிறு ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பிக்கும் திருவருட்சக்தியாகும். கொடித்தம்பம் பதியாகிய இறைவனையும், கொடிச்சீலையிலுள்ள நந்தி (அல்லது அவ்வாலய மூர்த்தின் வாகனம்) பக்குவமடைந்த ஜீவான்மாவாகிய பசுவையும் குறிக்கும். இடையேகாணப்பெறும் தற்பைக்க்யிறு பாசமாகிய மும்மலங்களாகும். பக்குவான்மாவை வழிநடத்தும் திரோதான சக்தியை க் கொடிச்சீலை குறிக்கின்றது.
ஆன்மாவைப் பதிந்து நிற்கின்ற பாசமலங்கள்; ஆன்மா பக்குவமடைந்து திருவருட்டுணையால் இறைவனைச் சேரும்போது வலிகுன்றி வாளாவிருக்கும். (இல்லாமல் போவிடுவதில்லை) இடையே அங்கிருக்கும் தர்ப்பைக் கயிறு காட்டுகின்றது.
கொடியேற்றியதும், திருவருட் சக்தியாகிய நூற்கயிறும்,பாசமாகிய தர்ப்பைக் கயிறும், திரோதான சக்தியாகிய கொடிச்சீலையும் அதில் வரையப்பெற்றுள்ள ஆன்மாவாகிய நந்தியும் தம்பத்தோடு சுற்றப்பெற்று அதனோடு ஐக்கியமாகி மறைய, இறைவனை விட வேறாக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை தெளிவாகின்றது.
பூர்வாங்கக் கிரியைகள்:
மஹோற்சவ ஆரம்ப தினமாகிய துவஜாரோகண தினத்திற்கு (கொடியேற்ற நாளுக்கு) முதல் நாள் மாலையிலே சில பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகிவிடும். ஆசாரிய வரணம் முதல் அங்குரார்ப்பணம் வரையிலான சிரியைகள் முதல் நாளிலே நடைபெரூவது நன்று.சில இடங்களில் மிருத் சங்கிரகணம், அங்க்ரார்ப்பணம் இரண்டையும் கொடியேற்றும் நாளிலே செய்தலும் உண்டு

ஆசார்ய வரணம்:
வரணம் என்பது வரிதல். மஹோற்சவக் கிரியைகள் நடத்துவதற்குரிய குருவினை வரிதல், அதாவது நியமித்தல் என்பதே இக் கிரியையின் பொருள் (நியமித்தல் என்பது அதிகார தோரணையில் கட்டளையிடுதல். ஆனால் வரிதல் என்பது அக்காரியத்தை செய்யும்படி வேண்டுதல்).
ஆலய தர்மகர்த்தா, உபயகாரர் ஆகியோர் குருவின் இல்லத்திற்கு மங்கலப் பொருட்கள் சகிதமாக, மங்கள வாத்தியங்களுடன் செல்வர். சாயங்கால சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களை முடுடித்து ஆசார்ய லட்ஷணத்துக்கமையத் தம்மை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பிரதான குருவையும், சாதகாசாரியர் உதவியாளர் யாவரையும் வணங்கி வீதிவலமாக ஆலயத்திற்கு அழைத்து வருவர்.
மண்டபத்திலே அமர்ந்து விநாயகரைத் துதித்து ஆசமனம், பிணாயாமம், சங்கல்பம் முதலியன செய்தவுடன் உபயகாரர் நமஸ்கரித்து மஹோற்சவத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு வேண்டுவர்.
ஆரம்பக் கிரியைகள்:
குருவை அழைத்து வந்ததும், சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, சமளீகரணம், சாமான்யார்க்கியம், புண்ணியாகவாசனம் என்பவற்றைச் செய்வர்.
அநுஜ்ஞை:
அநுஜ்ஞை என்பது அனுமதி பெறுதல் ஆகும். ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி அதில் தேங்காய், வாழைபழம், வெற்றிலை பாக்கு, சந்தணம், மஞ்சள், நாணயம், புஷ்பம், பத்திரம், தர்ப்பை என்பனவற்றை வைத்து அவற்றைப் புண்ணியாக தீர்த்தத்தினால் தூய்மைப்படுத்தி அவற்றுக்குப் பூசை நிகழ்த்துவர்.
அங்கு வந்திருக்கும் பிராமணோத்தமர்களிடமும், விக்கினேஸ்வரப் பெருமானிடமும், மூலமூர்த்தியிடமும், அஸ்திரதேவரிடமும், உற்சவமூர்த்தியிடமும் சென்று பூஜை செய்து மஹோற்சவத்தை நன்முறையில் நடத்த அனுமதியும் ஆசியும் தந்தருளுமாறு வேண்டுவர்.
கிராம சாந்தி:
ஆலயம் அமைந்துள்ள கிராமத்திலுள்ள தீய சக்திகள், துஷ்டதன்மைகள் முதலியவற்றால் பெருவிழாவிற்கு இடையூறு ஏற்படாமல் மங்கலம் உண்டாகும்படி காவற் தெய்வமாகிய வைரவப் பெருமானுக்கு விஷ்ட பூசி, ஓமம், பலி என்பன செய்தலே கிராம சாந்தியாகும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு பகைகள் முதலியவற்றால் ஏற்படும் தீமைகளும்; அஸ்ரீஅர், இராட்சசர், பூதர், பைசாசர் என உருவகப் படுத்தப் பெறுகின்றன. எவையானாலும் தீயனவற்றை ஒழிப்பதே கிராமசாந்தி.
இதைப் புரிந்துகொள்ளாத பலர்; மஹோற்சவத்திற்கு முதல் நாள் பேய், பிசாசுகளை கட்டி வைப்பதாகவும்; கொடியிறக்க நாளில் அவிழ்த்து விட்வதாகவும் கூறுவர். இக் கிரியைகளின் போது சிறுவர்களை அருகே வரக்கூடாது எனப் பயமுறுத்துவர். சிலர் இக் கிரியைகளைத் தரிசிக்காமல் விலகிக் கொள்வதுமுண்டு.
தெய்வ காரியங்களீல் இப்படிப் பயப்படும்படியான கிரியைகள் எதுவுமில்லை என்பதை யாவரும் உணர்ந்து இக் கிரியைகளின் உட்பொருளை அறிய முற்பட வேண்டும். கிராமசாந்திமூலம் கிராமத்தின் காவலை உறுதிப்படுத்த வைரவரிடம் வேண்டுதல் நடத்துவது போலவே மஹோற்சவ இறுதியில் வைரவரை மகிழ்விக்கும் வகையில் வைரவர் மடை நடாத்துவதும் கவனிக்கத்தக்கது.
ஆலயத்தின் கிழக்கு, மேற்கு அல்லது நிருதி திசையில் ஒரு தற்காலிக மண்டபம் அமைத்து வைரவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பம் வைத்து ஒழுங்கு செய்தபின் அஸ்திரதேவரை மங்கள வாத்திய சகிதம் வீதி வலம் வரச்செய்து அங்கு எழுந்தருளச் செய்வர். கும்பங்களை மட்டுமின்றி யந்திரங்களை வைத்து அவற்றிலும் வைரவர் முதளானோரை ஆவகனம் செய்து பூசைகள் நிகழ்த்துவர். ராட்ஷசர் முதலானோருக்குப் பலி உருண்டைகள் வழங்கித் திருப்தி செய்தபின் வைரவரை அக்கினியிலும் ஆவாகனம் செய்து அன்னம், வடை முதலியனவும் ஆகுதியாக இடுவர். பலிப் பொருளான நீற்றுப் பூசனிக்காய், கத்தி ஆகியவற்றையும் பூஜித்து பசுகாயத்ரியை உச்சரித்து, நீற்றுக்காயை வெட்டிப் பலி கொடுத்து அதன் உட்பாகத்தை ஓமம் செய்வர். பூர்ணாகுதி கொடுத்தபின் சக தேவர்களுக்கும் தாம்பூலம் நைவேத்தியம் செய்து நீராஜனம் செய்தபின் சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளிவிப்பர். இதன் பின் வலம் வந்து கைகாகளைச் சுத்தம் செய்தபின்னர் ஆலயத்தினுள் செல்லுதல் மரபு.
பலி கொடுக்கும்போது சொல்லப் பெறும் மந்திரத்தின் பொருள் “ஆபத்துகளை நீக்கும் வடுக வைரவரே”, எல்லோரையும் காப்பவரே, எல்லாப் பயங்களையும் போக்குபவரே, வெப்பசுரம், குளிர்சுரம் முதலிய கொடிய நோய்களை நீக்குபவரே, புத்திர லாபத்தைத் தருபவரே, எல்லா உயிரினங்களையும் காத்தருளும், எல்லாக் கெட்ட பிராணிகளையும் அழித்தருளும். இந்த பலியினை ஏற்றருள்க”
வாஸ்து சாந்தி:
நிலத்தில் உள்ள குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்பெறுவது வாஸ்து சாந்தி என்னும் கிரியை. பூமிக்கு அதிபதி பிரமாவை மகிழ்வித்து வழிபாடியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம்பெறுகிறது. வாஸ்து சாந்தி ஆலய மண்டபத்திலே செய்யப் பெறுகின்றது.
வாஸ்து சாந்திக்குரிய வாஸ்து மண்டலம்; நெல்லினை மேடையாகப் பரப்பி அதன்மேல் வாழையிலை இட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி அதன்மேல் எள்ளினால் அல்லது அரிசி மாவினால் கோடுகள் வரைந்து அமைக்கப்பெறும். இவ் மண்டலம் இரு வகையாக அமைக்கப் பெறும். ஆண் தெய்வங்களுக்கு உரியது மண்டூகபத வாஸ்து சாந்தி மண்டலம். பெண்தய்வங்களுக்குரியது பரமசாயிபத வாஸ்து சாந்தி மண்டலம். சக்தி அம்சமான முருகனுக்கும் இதுவே உரியது.
இம் மண்டலத்துக்கு ஈசான திக்கில் காயத்திரி, சாவித்திரி ஆகிய இரு சக்திகளுடன் கூடிய பிரம்மவிற்கும், சிவம் வர்த்தனிக்கும், மண்டலத்துக்கு கிழக்கில் புண்ணியயாக வாசனத்துக்கும் கும்பங்கள் வைத்து அதன் முன் ஓமகுண்டம் அமைக்கப் பெற்றிருக்கும்.
இங்கும் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முதலிய பூர்வவாங்கக் கிரியைகளைச் செய்து சிவம் வர்த்தனியையும், பிரம்மாவையும் கும்பத்தில் பூஜித்து மண்டலத்தில் வாஸ்து புருசனையும் பிற தேவதைகளையும் பூஜித்து நெற்பொரியினால் பலிதானமும் கொடுத்து முறைப்படி அக்கினி காரியமும் செய்வர்.
இங்கு கிராமசாந்தியைப் போலவே நீற்றுக்காயொறைப் பலியிடுவர். அதன் பின் வைக்கோல், தர்ப்பை முதலியவற்றால் மனித உருவாகச் செய்யப்பெற்ற வாஸ்து புருசனைப் பூஜித்துப் அக்கினியில் பொருத்தி எரிமூளச் செய்தபின் அவ்வுருவத்தை ஆலய மண்டபங்கள், வீதிகள் முதலிய இடங்களில் இழுத்து வந்து ஈசான திக்கில் போட்டு விடுவர். இவ்வுருவத்தின் பின்பாக வாஸ்து கும்ப நீர் தெKஇத்துச் செல்வர். வெட்டிய நீற்றுப் பூசணிக்காயையும் இதனுடன் எடுத்துச் சென்று போட்டுவிடுவர். இவற்றைக் கொண்டு சென்றவர்கள் நீராடிவிட்டு ஆலயத்தினுள் வருதல் வேண்டும். (கை கால்களையாவது நன்கு சுத்தம் செய்தல் அவ்சியம்)
மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்:
ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய மண்ணை மந்திர சகிதமாகப் பெறுவதே மிருத்சங்கிரகணமாகும் (மிருத் – மண்; ச்ங்கிரணம் – சேகரித்தல்). ஆலயத்தின் ஈசானம், மேற்கு, வாயு அல்லது வடக்குத் திசையில் இது செய்யப் பெறும். அஸ்திர தேவரையும் எழுந்தருளச் செய்து மங்கள வாத்திய சகிதம் குரு இங்கு வந்து சேருவார். அஸ்திர தேவரையும், அதற்கு முன் (கிழக்கே) சப்தவாரிதி கும்பத்தையும் ஸ்தாபிப்பர். அதற்கு கிழக்கே நவபதம், அதற்கும் முன் அஷ்டதள பத்மம் (எட்டிதழ் கமலம்); அதற்கு முன் நாற்கோணம் என்பனவற்றை அரிசிமாவினால் அமைப்பர். நாற்கோணத்தில் மண்வெட்டி ஒன்று கூர்ச்சம், மாவிலை என்பன கட்டப்பெற்றதாக வைக்கப் பெற்றிருக்கும்.
பூர்வாங்க கிரியைகளை நிறைவேற்றியபின், கும்பத்திலே ஏழு சமுத்திரங்களையும், நவகோஷ்டத்தில் பிரம்மாவையும் எட்டு மண்டல தேவர்களையும், பத்மத்திலே அட்டதிக்குப் பாலகர்களையும் பூமிதேவியையும் பூஜிப்பர். மண்வெட்டியின் குற்ற நீக்கத்திற்காக தைலம், பால், தயிர்,இளநீர் என்பனவற்றால் அபிஷ்கித்த பின் மும்முறை மண்ணை வெட்டி ஒரு தட்டிலிட்டு பட்டினால் மூடுவர். சப்தரிஷி கும்ப ஜலத்தினால் மண் எடுத்த இடத்தை அபுஷேகம் செய்து நவதானியமிட்டு சமதளமாக்குவர்.
“தெய்வ காரியத்தின் பொருட்டு இங்கே மண் எடுக்கிறேன் என்னை மன்னித்து எனக்கு அனுமதி தருக” என்று பூமாதேவியைப் பிரார்த்தனை செய்வதும் மண்வெட்டிய இடத்தை மீண்டும் சமதள்மாக்கி அங்கு நவதானியம் இட்டு ஏழுகடல் நீரினால் (சப்தவாரிதி கும்பம்) நீராட்டுவது முதலிய அம்சங்களில் காணப்பெறும் இயற்கை நேயமும் மனித மேம்பாட்டுணர்வுகளும் கவனிக்கத்தக்கன. மேலும் இங்கு ஓதப்பெறும் பூசூக்தம், ஓஷதி சூக்தம் முதலிய வேத மந்திரங்கள் அற்புதமான உட்பொருள்கள் கொண்டவை இயற்கையைப் போற்றித் துதிப்பவை.
யாகசாலையின் பின் வாயுதிக்கிலே (வட-மேற்கு) கார்த்திக, உரோகினி சகிதமாக அமிர்தேஸ்வர கும்பம் வைத்து (அமிர்தேஸ்வரன் – சந்திரன்) சுற்றிவர துவாதசாத்தியர்களுக்கு (பன்னிரு சூரியர்) பன்னிரண்டு சிறிய மண்சட்டிகளும் வைக்கப் பெற்றிருக்கும். மிருத்சங் கிரகணத்தில் எடுத்துவந்த மண்ணினால் இவை நிரப்பப் பெற்று வில்வம், அரசு, மாவிலை இவற்றால் அலங்கரிக்கப் பெறும்.
பூர்வாங்கக் கிரியைகளை அடுத்து சந்திரனையும், பன்னிரு சூரியர்களையும் பூஜித்தபின் தூய்மையான பாத்திரம் ஒன்றிலே பசுப்பால் விட்டு அதில் அதில் நவதானியத்தை இட்டு பூஜித்து உரிய மந்திரங்களுடன் பாலிகைகளில் (மண்சடிடிகள்) அதனை விதைப்பர். சந்திரகும்ப நீரை இவற்றிற்கு வார்த்து மீண்டும் கும்பத்தை நீரால் நிரப்பி ஸ்தாபிப்பர். இவ்வங்குரார்ப்பண முளையானது பசுமையாக நன்கு செழித்து வளர்ந்தால் கிராமம் சிறக்கும் என்பது ஐதீகம் (அங்குரம் – முளை).
இவற்றுடன் முதல் நாள் கிரியைகள் நிறைவு பெறும். மறுநாள் காலை ரட்ஷாபந்தனத்துடன் துவஜாரோகண விழா ஆரம்பமாகும்.
ரட்ஷாபந்தனம்:
ரட்ஷா என்பது காப்பு. காவலுக்காக கட்டப்பெறுவது. காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறுதற்கும், அக்கருமமன்றி வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்பு கட்டப் பெறும்.
சிவாச்சாரியாரும், தர்மகர்த்தாவும் ரட்ஷாபந்தனம் செய்துகொண்டபின் உற்சவம் முடியும் வரை ஆலயச் சூழலை விட்டு அப்பாற்செல்லலாகாது. இக் கால எல்லையில் அவர்களின் உறவினரால் ஏற்படும் ஆசௌசம் (துடக்கு) முதலியன அவர்களைத் தீண்டா.
காவலுக்காக கட்டப் பெறும் காப்பு மூர்த்திகளுக்கும் கட்டப் பெறுவது வழக்கம். எல்லா உலகங்களையும் காக்கும் அவருக்கே காவலா என ஐயுறலாம். சகல பிரஞ்சங்களும் இறைவனுள் அடங்கும். அவருள் அடங்கிய அனைவருக்கும் காவல் செய்யும் காரணமாகவே அத் திருவுருவங்களுக்கு காவல் செய்யப் பெறுகின்றது. மேலும் தன் குழந்தைகளின் நோய் தீரத் தான் மருந்துண்ணும் தாய் போல நமக்காக இறைவன் காப்புக்கட்டும் பாவனையும் இதில் தொனிக்கிறது.
“கங்கணம் கட்டுதல்” என்ற மரபுச் சொற்றொடர் இங்கு நோக்கற்பாலது. ஒரு காரியத்தை விடாது முயன்று செய்துமுடிக்கத் தீர்மானிப்பதைக் கங்கணம் கட்டுதல் என்று சொல்லுவர். கங்கணம் என்பது காப்பு. எடுத்தகாரியத்தை நிறைவேற்றி முடிக்கும் ஆயத்தம் கொள்வது இக்கிரியையின் நோக்கம் எனவும் கொள்ளலாம்.
ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை-பாக்கு, பழம், மாவிலை, விபூதி என்பனவும்; ரட்ஷா சூத்திரம் (மஞ்சள் பூசிய காப்புக்கயிறும்) வைக்கப் பெற்றிருக்கும்.
துவஜாரோகண் தினத்தன்று காலையில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்கள் யாவும் நிறைவேற்றிய சிவாச்சாரியார்; வழமையான நித்திய பூஜைகள் யாவும் முடித்துப் பூர்வாங்க கிரியைகளையும் செவ்வனே நிறைவேற்றிய பின் ரட்ஷாபந்தன் பொருகளைப் பூஜிப்பர். இதன்பின் மங்கள வாத்தியங்கள் முழங்க; சிவாச்சாரியார் தனது வலக்கை மணிக்கட்டில் ரட்ஷை நூலைக் கட்டி விபூதியால் முடிச்சிலே காப்பிட்டுக் கொள்வார். இதன் பின் சகல மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப் பெற்றும். இதனைப் பெரும்பாலும் ஸ்நபன கும்ப பூஜையின் பின் அபிஷேகம் செய்யும் போது செய்வதே வழக்கம்.
ஸ்நபன கும்ப பூஜைகள்:
துவஜாரோகணத்திற்குரிய கொடிப்படம், தம்பம், அஸ்திரதேவர், நந்தி, பலிபீடம் முதலியவற்றுக்கும், மூலமூர்த்துகளுக்கும் விசேஷ அபிஷேகங்கள் செவதற்காக ஸ்நபன கும்பங்கள் மண்டபத்திலே வைக்கப் பெறும். கொடிச்சீலைப் படத்திலுள்ள அஸ்திர தேவப் பிரதிஷ்டைக்கும், நந்திக்கும், பலிபீடத்திற்கும் கும்பங்கள் வைக்கப் பெறும். இவற்றைவிட; சாந்திகும்பம், யாகேஸ்வரன், யாகேஸ்வரி (சிவம் வர்தனி) கும்பங்கள் என்பனவும்; ஓமகுண்டமும் தயாராக அமைக்கப் பெற்றிருக்கும். மண்டபத்தின் ஒரு புறத்திற் கொடிப்படம் கட்டப் பெற்றிருக்கும்.
கும்பங்கள் யாவற்றுக்கும் பூஜைகள் செய்து அக்கினி காரியம் செய்வர். கொடிப்படத்திற்குப் புண்ணியாகநீர் தெளித்து பிம்பசுத்தி செய்தபின் அதிலுள்ள நந்திக்கு நயோன் மீலனம் (கண் திறத்தல்) செய்யப் பெறும். ரட்ஷாபந்தனமும் கொடிப்படத்திற்குச் செய்யப் பெறும்.
பூர்வசந்தானமும் பச்சிமசந்தானமும்:
கொடிச்சீலைப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் இரண்டையும் பிரதிஷ்டை செய்தற் பொருட்டு (அதாவது அங்கு தெய்வ சாந்தியத்தை ஏற்படுத்துவதற்காக) இரண்டு வகை ஜிரியைகள் செய்யப் பெறுகின்றன. முதலில் பசுபோதத்தை நீக்குவதற்காகச் செய்யப்பெறுவது பூர்வ சந்தானம். இதன் பின் அக்கினியிலும், கும்பத்திலும் பூஜித்த தெய்வ சாந்நித்தியத்தைப் படத்திலே ஒடுக்குவது பச்சிம சந்தானம்.
அக்கினி கும்பத்திலிருந்து கும்பம், படம், மூர்த்தியின் திருவுருவம் என்பவற்றை இணைக்கும் வகையில் இடப்பெறும் நூல் நாடீசந்தானம் எனப்பெறும். இந்நூலின் வழியாக தெய்வ சாந்நித்தியத்தை அக்கினியில் இருந்து படத்திற்கு எழுந்தருளச் செய்வர்.
திருவுருவத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து; பிரம்ம பாகம் (கீழ்ப்பகுதி), விஷ்ணு பாகம் (மத்திய பகுதி), ருத்திர பாகம் (மேற்பகுதி) என்று பாவித்து மும்முறை ஸ்பர்சாகுதி செய்வர். ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்னும் தத்துவங்களையும் அவற்றின் அதிபதிகளையும் பிருதுவி முதலிய அஷ்ட மூர்த்திகளையும், அவற்றின் அதிபதிகளையும் இங்கு பூஜிப்பர். இவ்விதம் பிரதிஷ்டைகள் நிறைவேறியதும் அக்கினியில் பூர்ணாகுதி கொடுத்து ரட்க்ஷை (கரிப் பொட்டு) எடுத்து கும்பங்கள் படம் யாவற்றுக்கும் இடப்பெறும்.
அபிஷேக ஆராதனைகள்:
அதன் பின் கும்பங்களை வீதிவலமாக கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் என்பன நிறைவேற்றித் தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். உற்சவ மூர்த்திக்கு (எழுந்தளுளி மூர்த்தி) விசேட பூஜைகள் நடத்தி எழுந்தருளுவித்து கொடித்தம்பத்தை பார்த்த வண்ணம் வடக்கு முகமாக இருக்கச் செய்வர்.
பேரீதாடனம்:
நாததத்துவமே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மூலகாரணம். நடராஜ மூர்த்தியின் வலக்கரமொன்றில் இருக்கும் உடுக்கிலிருந்து பிறக்கும் ஓசையே ஒலிகள், மொழிகள், இசைகள் என்பனவற்றிற்கும் சகல சிருஷ்ட்டிக்கும் ஆதாரமாக இருக்கின்றது. சரஸ்வதி வீணை வாசிப்பதும், கண்ணன் வேய்ங்குழல் ஊதுவதும், நாரதர் தம்புரா இசைப்பதும், நடராஜ தாண்டவத்தின் போது மகாவிஷ்ணு தாளம் கொட்டுவதும், நந்தி மத்தளம் வாசிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.
இங்ஙனம் படைத்தல் தொழிலைக் குறிக்கும் கொடியேற்ற விழா ஆரம்பத்தில் நாத தத்துவத்தை பேரீ எனப்பெறும் மேளத்தில் பூஜித்து, மந்திர சகிதமாக குரு; மேளத்தில் ஒலியெழுப்பி சகல தேவர்களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டுதலே பேரீதாடனமகும்.
மேளம் அடிக்கும் கம்பினைச் சிவசக்தி ரூபமாகப் பாவனை செய்து சிவாச்சாரியார் அதனை எடுத்து வேதமந்திரங்களைக் கூறீ முறையே ஒருமுறை, இருமுறை, மும்முறை என்ற வகையில் மேளத்தை அடித்துப் பின்னர் “முத்துமாரி அம்பாளின் மஹோற்சவ விழாவை நடத்துவதற்காக சகல தேவர்களையும் இங்கு அழைக்கிறேன். சகல மங்கள் வாத்தியங்களையும் இப்போது ஆரம்பித்து வைக்கிறேன்” என்று பிரார்த்திப்பார். பேரீதாடனம் என்னும் இக்கிரியை சில இடங்களில் கும்பபூஜை ஆரம்பமாகும் போதெ செய்யப்பெற்று விடுவதுண்டு.
துவஜஸ்தம்ப ஆவாகணம்:
அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு வேதங்களையும் தம்பத்தில் பூஜித்து ரட்ஷாபந்தனம் செய்து சாந்தி கும்பத்தினால் அபிஷேகம் செய்யப் பெறும். ஆலய மூலமூர்த்தியைத் தம்பத்திலே ஆவாகனம் செய்து எழுந்தருளிவித்து ஏற்கனவே ஸ்தாபித்து வைத்த ஸ்நபன கும்பங்களால் அபிஷேகம் செய்வர்.
இதன் பின்னர் கொடிப்படத்தை வீதிவமாகக் கொண்டுவந்து கொடியிலிணைக்கப்பெற்றுள்ள மஞ்சட் கயிற்றைத் தம்பத்தின் நுனியிலிணைத்துப் படம் தெரியும்படியாகக் கட்டி வைத்துப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் ஆகியவற்றுக்கென ஸ்தாபித்த கும்பங்களினால் புரோக்ஷித்து, அபிஷேகம் செய்யும் பாவனையிற் கண்ணாடியைப் படத்திற்கு முன் பிடித்து அதில் அபிஷேகம் செய்வர். தம்பத்திலும், அதைச் சுற்றிலும் சகல தேவர்களையும் பூஜிப்பர்.
சமஸ்த தேவதாவாஹனம்:
சகலவிதமான தேவர்களையும் பெயர் சொல்லி அழைத்து மஹோற்சவ காலத்தில் தத்தம் பரிவாரங்கள் குழு எழுந்தருளுமாறு அழைப்பதே சமஸ்ததேவதா ஆவாகனம். எல்லா வாத்தியங்களையும் நிறுத்திவிட்டு சாதகாசிரியர் இசையோடு இதை வாசிக்கும்போது கேக்க இனிமையாக இருக்கும்.
துவஜாரோகணம் (கொடியேற்றம்):
சிவாச்சாரியார் சங்கல்பம் செய்து நவக்கிரகங்களை மகிழ்விக்கும் வகையில் தானம் வழங்கி, நடைபெறவுள்ள காரியம் தடையின்றி நிகழும் பொருட்டு யாத்ரா தானம் வழங்கி, மூலவருக்குப் பஞ்சாராத்திரிகம் காட்டி வணங்கி விநாயகரை நினைத்துத் தேங்காய் உடைத்துவிட்டு ஏகாக்ர சித்தமாக (ஒரே சிந்தனையுடன்) தம்ப நுனியைக் கொடிப்படம் சேரும்வரை மெதுவாக கொடியை ஏற்றுவார். சிவாச்சாரியார் கொடிச்சீலையைப் பற்றி அது ஒழுங்காக மேலேற வகை செய்ய, உதவியாளர் கொடிக் கயிற்றைப் பற்றி மெல்ல இழுத் ஏற்றுவது மரபு. கொடிச்சீலையுள் மஞ்சள் கயிறு மறையும்படி வைத்து அதனைப் பலமாக முறுக்கி, தற்பைக் கயிற்றையும் அதனுடன் சேர்த்துத் தம்பத்தில் வலமாக மூன்று முறையாவது ஐந்து முறையாவது சுற்றப்பெறும். இறுதியில் மூலமூர்த்தியை நோக்கியிருக்குமாறு மேற்குப் பக்கத்தில் பிரம்மக்கிரந்தி முடிச்சு இட்டுப் பட்டுகள், மாவிலை, கூர்ச்சம் என்பனவற்றையும் வைத்து அலங்கரிப்பர்.
துவஜஸ்தம்ப பூஜை:
இதன் பின் தைலக்காப்பு முதல் பன்னீர் ஈறாக சகல விதமான அபிஷேகங்கள் செய்து அலங்கரித்துத் திக்பாலகர் முதலானோருக்குத் தேங்காய்ப் பிரமாணத்தில் அன்ன உருண்டையை பலியாக வழங்கி, நைவேத்திய தூப தீபாராதனைகள் நடத்துவர். அதன் முடிவில் அழகிய சுலோகங்கள் அமைந்த “பணிமாலா” முதலிய தோத்திரங்களைச் சொல்வர்.
மூர்த்திகளின் சிறப்பியல்புகளைத் தாள லயத்தோடு அழ்லிய வாக்கியங்களில் அமைத்துச் சொல்வது தாளம் எனப்பெறும். ஒவ்வொரு மூர்த்திக்கும் இத்தகைய தாளங்களும், அவரவர்களுக்கு விருப்பமான வேதப்பகுதி, தேவாரப்பண், தாளம், வாத்தியம், நிருத்தம், ராகம் என்பனவும் கூறப்பெற்றுள்ளன. அவற்றை உரிய இடங்களில் பயன்படுத்துவர்.
துவஜஸ்தம்ப பூஜையும், தோத்திரமும் முடிந்ததும் கணபதி தாளம் முதலில் சொல்லப்பெறும். அவருக்குரிய வேதம், பண், ராகம் முதலியன இசைக்கப் பெற்றதும்; மூலமூர்த்தியின் வாகனத்துக்குரிய தாளம் (விருஷப தாளம், மூஷிக தாளம், சிம்ம தாளம், மயூர தாளம் முதலியன) இசைக்கப் பெறும். இதன் பின் அஸ்திர தேவருக்கும் சுற்றுப்பலி போடப்பெறும். பலிபீடமும் பூஜிக்கப் பெறும்.
ஆசீர்வாதம்:
ஆலயத்திற்கும், கிராமத்திற்கும், நாட்டிற்கும், ஆலய பரிபாலகர்களுக்கும், எசமானர்களுக்கும்,பக்த ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் சர்வ மங்களமுண்டாகிச் சகல செல்வபோகங்களும் நிறைந்து, இறுதியில் முக்தியின்பம் பெற வேண்டுமென்றும் வாழ்த்தி விண்ணப்பிப்பதே ஆசீர்வாதமாகும்.
ஒவ்வொரு ஆசீர்வாத வாக்கியங்களையும் சிவாச்சாரியர் கூற ஏனைய குருமார்கள் (பிராம்மணோத்தமர்கள்) “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைக் கூறுவர்.
சந்தியாவாஹனம்:
மூலமூர்த்திக்கு நேரெதிராகக் கோபுரவாசலுக்கு அண்மையில் பிரம்மசந்தி எனப்பெறும் ஸ்தானமும், கிழக்கு முதல் ஈசானம் வரையிலான எட்டுத் திசையிலமைந்த ஸ்தானங்களும் நவசந்திகள் எனப்பெறும். இவ்விடங்களில் அந்தந்த சந்திக்குரிய தேவர்களை மகிழ்வித்து அவர்களுக்குரிய வேதம், பண், ராகம் என்பவற்றை இசைத்து மஹோற்சவ காலத்தில் அங்கு சாந்நித்தியமாகி நின்று மூலமூர்த்திக்குச் சேவையாற்றித் திருவிழாக் காலப் பந்தோபஸ்துக்கு அநுசரணையாக இருந்து காவல் புரியும்படி வேண்டுதல் சந்தியாவாஹனத்தில் நடைபெறும்.
தமிழ்வேதம் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் தேவார திருமுறைகளுக்கு எமதுஆலய வழிபாட்டுக் கிரியைகளில் முக்கிய இடம் கொடுக்கப்பெறுவது அவசியம். நவசந்திகளிலும் அந்தந்தத் தேவர்களுக்குரிய பண்முறை அமைந்த திருமுறைகளைப் பாடவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவது அத்துணை சிரமமானதன்று. ஆனால் பெரும்பாலான கோவில்களில் உரிய பண்களுக்கு அமைந்த தேவாரங்களை பாடாமல் நினைவில் வந்த ஏதோவொரு தேவாரத்தைப் பாடுவதைக் காணும்போது மனவருத்தமாக உள்ளது. சில இடங்களில் பண்ணையும் புலப்படுத்தும் ஆற்றலின்றி அப்பண்ணாற் பெயரிட்ட பதிகத்தில் ஒரு பாடலைச் சும்மா படித்தலும் கவலைக்குரியதே.
பத்ததியைக் கவனித்து உரிய தேவாரப் பாடல்களை முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்து முறைப்படி பாடுவதற்கான ஏற்பாடுகளைச் சிவாச்சாரியார்களும், த்ர்மகர்தாக்களும் செய்ய வேண்டும். அதேபோல குறிப்பிட்ட ராகதின் பெயரைச் சொல்ல அதனை நாதஸ்வர வித்துவான் வாசிப்பதும் இங்கு இடம்பெறுகின்றது. ஒரு சில நிமிடங்களுக்காவது ராகத்தை வாசிக்க வைத்து அந்த ராக தேவதையின் சாந்நித்தியத்தை அங்கு நிகழச் செய்வது நன்றாகும்.

கட்டியம்:
சுவாமி வீதிவலம் வர ஆரம்பிக்கும்போது சொல்லப்பெறும் வரவேற்பு இது. அரசர் கொலுமண்டபத்துள் பிரவேசிக்கும் போது கட்டியக்காரன் பராக் சொல்லி அறிபிப்பது போன்றதே இதுவும். இதற்கெனக் கட்டியப் பொல்லும் ஒன்று செய்யப்பெற்று அதனை ஒருவர் சுவாமிக்கு முன் தாங்கிவருதல் சில இடங்களில் உண்டு. சுவாமி வீதிவலம் வருவத்ற்காகப் புறப்படுகிறார் என்றும், இன்ன இன் தேவர்கள் சமுகமளிக்கிறார்கள் என்றும் தனிதனியே அறிவிக்கப் பெறும்.
விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக எல்லத் தெய்வங்களையும் கூறி அவர்களின் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுக் கோபுர வாசலில் வைத்துச் சொல்லுதல் கட்டியத்தில் இடம்பெறும். வீதிவலம் முடிந்து திரும்பும் போதும் அதே வாக்கியங்கள் சொல்லப் பெற்று இன்னார் வீதியுலா முடிந்து மீண்டும் வருகிறார் என்றும் அறிவிக்கப்பெறும்.
யாக பூஜை:
ஆலயத்தின் ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும்.
துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) மூலமூர்த்திக்குரிய ஸ்நபன கும்பங்கள் வைக்கப் பெற்றிருக்கும். வேதிகையின் மேற்குப் புறத்தில் ஓமகுண்டம் இருக்கும். நான்கு திக்குகளிலும் வாசல்கள் விட்டுப் பரிவார கும்பங்கள், யாகேஸ்வரன், யாகேஸ்வரி கும்பங்கள் புண்ணியாஹ கும்பம் முதலியன அமைந்திருக்கும்.
யாகமண்டப அமைப்பானது எல்லா ஆலயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆயினும் பரிவார கும்பங்களில் ஆவாகனம் செய்து பூஜிக்கப் பெறும். தேவர்கள் மூலமூர்த்திக்கு ஏற்ப மாறுபடும். பிரதிஷ்ட மகாகும்பாபிசேகம், சங்காபிஷேகம் என்பனவற்றுக்கு அமைக்கப் பெறும் யாக மண்டபத்திற்கும் மஹோற்சவ யாக மண்டபத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.
தத்துவ உட்பொருள்:
மஹோற்சவம் முப்பொருள் தத்துவத்தை விளக்குகின்ற வகையை முன்பு பார்த்தோம். ஐந்தொழில் விளக்கமாக இது அமையும் விதத்தை இப்போது பார்ப்போம்.
வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பேரீதாடனம், ரக்ஷாபந்தனம், துவஜாரோகணம், திருக்கல்யாணம் என்பன படைத்தலைக் குறிக்கும். வாகனோற்சவம், பலிதானம் என்பன காத்தலைக் குறிக்கும். வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா என்பன அழித்தலைக் குறிக்கும். சூர்ணோற்சவம், அங்குர விசர்ஜனம், துவஜ அவரோகணம், மௌனோற்சவம், ரக்ஷபந்தன விசர்ஜனம் என்பன மறைத்தலை குறிக்கும். சண்டேஸ்வர உற்சவம், ஆசார்ய உற்சவம் என்பன அருளலைக் குறிக்கும்.
வேட்டைத் திருவிழா:
இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துஷ்ட மிருகங்களைக் கொன்றொழித்து மக்களைக் காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலக் கைக்கொண்டிருந்தனர். இதேபோல் எம்மைத் துண்புறுத்தும் மும்மகங்கள், அறுபகைகள் (அசுரத் தன்மை) போன்றவற்றையும், கொடிய நோய்கள் என்பவர்றையும் வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத் திருவிழாவை மேற்கொள்வதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலோ அல்லது வேரு ஆலயங்களிற்குச் சென்று (மிருகங்களின் உருவங்களை வைத்து) அங்கு அஸ்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காய் பலியிடுவது வழக்கம்.
தேர்த்திருவிழா:சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பெற்ற தேரானது அழித்தலைக் குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன. அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுலிறது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருள வைத்திருக்க வேண்டும். தேர் சரியான பாதையிலே ஓடுவதற்கிசைவாகச் சறுக்குக் கட்டைகள் போட்டு அதனைக் கட்டுப்படுத்துவதுபோல நமதுவாழ்க்கையையும் நக்வழிகளில் நெறிப்படுத்த வேண்டும். மேலே கோபுரம்மோல் குவிந்து செல்லும் தேர்க்கலச முடிவிற் குடைநிழல் தெரிகின்றது. மனம் குவிந்து மேலான சிந்தனையுடன் இறைவனைத் தியானித்தால் அவனது அருட்குடை நிழல் நம்மைத் துயர வெளியிலிருந்து பாதுகாக்கும்.
தேர்க் காலிலே தேங்காயைச் சிதற அடித்து நமது துன்ப துயரங்களைச் சிதற வைப்பதையும், வலிய தேங்காய் ஓடு பிரிந்து வெண்ணிற உட்பாகம் வெளிப்படச் செய்து மல நீக்கத்தை உருவகப் படுத்துவதையும் இந்தத் தேர்த் திருவிழாவில் காணலாம்.
இவ்வாறு அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழ்மையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமிய தேரிலே வீற்றிருக்கச் செய்வர். முன்னதாக தேர்த்தட்டு புண்ணியாக வாசனம் செய்து சுத்தம் செய்யப் பெற்றிருக்கும்.
தேரினில் ச்வாமி இருக்கையி யாத்ராதானம் முதலியவற்றை வழ்ங்கி விநாயகரைப் பிரார்த்தித்துத் தேங்காய் உடைத்ததும் தேர் புறப்படும்.
தேர் வீதி வலம் வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தும் வழ்க்கம் எங்கும் உண்டு. உக்கிரமூர்த்தியாக அழித்தல் தொழில் முடிந்து வரும் இறைவனைக் குளிர்விக்கும் பாவனையே இது. சுவாமிக்குப் பச்சை சாத்துவது மட்டுமன்றி சிவாச்சாரியார்களும், உதவியாளர்களுங்கூட அவ்வேளையில் பச்சை வேட்டி சால்வைகளுடன் காணப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சூர்ணோற்சவமும் தீர்த்தத் திருவிழாவும்:
மறைத்தலாகிய தொழிலைக் குறிப்பது சூர்ணோற்சவம். ஆன்மாகளை ஆணவாதி மலங்களில் அழுந்தச் செய்து அநுபவ வாயிலாக இறையுணர்வு பெறச் செய்வத்தே ஆண்டவனின் அருள் நோக்கம்.
“நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல” என்ற ஆன்றோர் வாக்கு நோக்கற்பாலது. துன்பத்தின் பின்னர்தான் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம். உடலைப் பற்றியுள்ள அழுக்குகளோடு மன அழுக்குகளான காமம், குரோதம் முதலியனவற்றையும் நீக்குவதற்கு அடையாளமாகத் திருப்பொற்சுண்ணம் இடித்து இறைவனுக்குச் சாத்தப்பெறுகின்றது. இறைவனை முழுக்காட்டி நாமும் தீர்த்தமாடுகின்றோம்.
சூர்ணம் என்பது தூள். பொன்நிறமான பொடி என்பது பொன்வண்ணச் சுண்ணம் எனக் கூறப்பட்டுப் பின்னர் போற்சுண்ணம் என மருவியது. மஞ்சட்பொடி முதலியவற்றைத் தயார் செய்து வைத்திருந்து சவர்க்காரம் பூசிக் குளிப்பதுபோல முற்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள். அதனையே இங்கு திருப்பொற்சுண்ணத்திற்குப் பயன் படுத்துகின்றோம். தீர்த்தத் திருவிழா அருளலைக் குறிக்கும்.
யாக தரிசனம், மஹாபிஷேகம்:
திருப்பொற்சுண்ணமிடித்து தீர்த்தமாடியபின் சுவாமியை யாக வாசலில் கொண்டுவந்து யாகதரிசனம் செய்வித்துப் பூர்ணாகுதி வழங்குவர். ரக்ஷை தயாரித்து மூர்த்திகளுக்குச் சாத்துவர். உற்சவமூர்த்தியை உரிய இடத்தில் எழுந்தருளச் செய்தபின் யாக கும்பங்களை உத்தாபனம் செய்து பிரதான கும்பங்களை எடுத்துவந்து மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வர். அங்குரவிசர்ஜனம் செய்து முளைப்பாலிகைகளைச் சகல மூர்த்திகளுக்கும் சாத்தி நீராஜனம் நீராஜனம் செய்வதை அடுத்து வழ்மையான வைரவர் பூஜை, சண்டேஸ்வரர் பூஜைகளுடன் தீர்த்தோற்சவம் நிறைவு பெறும். பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதங்களுடன் ரக்ஷையும், முளைப்பாலிகைகளும் வழங்கப் பெறும். அடியார்கள் அவற்றையும் பக்தியோடு தரிசிப்பார்கள்.
கொடியிறக்கம்:
சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு.
கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். (கொடியேற்ற நாளில் சம்ஸ்தேவதா ஆவகனம் செய்து சகல தேவர்களையும் அழைப்பது போல கொடியிறக்கும் போது அவர்களை சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளச் செய்வதே சமஸ்த தேவதா விசர்ஜனமகும்)
நிதானமாக கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியக் கோஷங்களுடன் இறக்கிக் கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும் கொடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து நீராஜனம் செய்வர்.
இதன் பின் உற்சவ மூர்த்தியை வீதிவலம் வரச் செய்வர். கொடியிறக்க நாளில் முதலில் வெளிவீதி வலம் வந்த பின்னரே உள்வீதி வலம் வருதல் முறை. வெளிவீதி வலம்வரும்போது நவசந்திகளிலும் முதலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர்களை மகிழ்வித்த பின் உத்வாகனம் செய்வர்.
இதன்பின் உள்வீதியில் வலம் வரும் போது:
கிழக்கு கோபுர வாசலில் இருந்து தென்கிழக்கு வரை மங்கள வாத்தியமும்;
அங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாராயணமும்; அங்கிருந்து தென்மேற்கு வரை தமிழ் வேதபாராயணமும்;
அங்கிருந்து மேற்குத் திசைவரை சங்கு நாதமும்; அங்கிருந்து வடமேற்கு வரை தவில் தாள வாத்தியமும்;
அங்கிருந்து வடக்கு வரை நாதஸ்வர கீத இசையும் இசைத்து;
அங்கிருந்து வடகிழக்கு வரை மௌனமாகவும்;
அங்கிருந்து வாயில்வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்ப்பர்.
சண்டேஸ்வர உற்சவம்:
இதன்பின் பைரவர், சண்டேஸ்வரர் பூஜைகள் முடித்து சண்டேஸ்வரமூர்த்தியை வீதிவலம்வரச் செய்வர். சண்டேஸ்வரமூர்த்தி சிறிய விக்கிரகமாக அமைந்திருப்பதால் சிறுவர்கள் அதனைத் தூக்கிக்கொண்டு விளையாட்டாக ஓடிவருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. இது தவறான ஒன்றாகும். தலைசிறந்த பக்தராகவும், பக்தகோடிகளின் வழிபாட்டுப் பலனை அனுகிரகம் செய்பவராகவும் உள்ள சண்டேஸ்வரரைப் பணிவுடனும், பக்தியுடனும் கௌரவமாக வீதிவலம் வரச் செய்தல் அவசியமாகும்.
சண்டேஸ்வர உற்சவத்தின் பின் சிவாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷா பந்தனங்களையும் (காப்பு) அகற்றித் தமது கரத்திலுள்ள ரக்ஷா பந்தனத்தையும் நீக்குவார்.
ஆசார்ய உற்சவம்:
மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக அமைவது ஆச்சாரிய உற்சவம். இறைவன்; குரு, லிங்கம், சங்கமம் என்ற மூன்று இடங்களில் நின்று அருள் செய்வதாகச் சாஸ்திரங்கள் பகரும்.
குரு கிரியைகளை நடத்தும் சிவாச்சாரியார், லிங்கம் என்பது பிம்பமாகிய திருவுருவமாகும். சங்கம் என்பது திருவடியார் கூட்டம். சங்கம வழிபாட்டை எடுத்துக் காட்டுவது மஹேசுர பூஜை (அன்னதானம்) ஆகும். மஹோற்சவம் நிறைவு பெற்று மறுநாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது மரபு.
மஹோற்சவ காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துத் திருவருட் பேறினைத் தந்தருளும் குரு மூர்த்தியாகிய சிவாச்சாரியாரைப் பூமாலை முதலியவற்றல் அலங்கரித்து மங்கள வாத்திய சகிதம் வீதிவலமாக அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்து அடியார்கள் யாவரும் அவரை வணங்கி இயன்ற அளவு குருதட்சணை வழங்கி, விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு குருவின் அருளுரையை செவிமடுத்த பின் அவரை விடுதிவரை அழைத்துச் சென்று பின்னர் தமதில்லம் திரும்புவர்.
பூர்வாங்கக் கிரியைகள்:
எந்தக் கிரியையாயினும் ஆரம்பத்தில் பஸ்மதாரணம் (விபூதி தரித்தல்), பவித்திர தாரணம் (தர்ப்பை அணிதல்), பிராணாயாமம், சங்கல்பம், விநாயக வழிபாடு, கலசபூஜை (தீர்த்த பாத்திரத்திற்கு), கண்டாபூஜை (மணிக்கு), தீபபூஜை (திருவிளக்கிற்கு), வருண கும்ப பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை முதலியன வழமையாக இடம்பெறும். இவை பூர்வாங்கக் கிரியைகள் (பூர்வ-ஆரம்ப,தொடக்க) எனக் கூறப் பெறும். பூர்வக்கிரியை வேறு, பூர்வாங்கக் கியை வேறு)
பஸ்மதாரணம்:
விபூதி சிவ சின்னங்களுள் ஒன்று. சைவர்கள் எந்நேரமும் விபூதி அணிந்திருத்தல் அவசியம். “ஆளடையாளத்திற்காகத் திருநீறு இட்டுக்கொள்” என உபநிடதவாக்கியம் கூறுகிறது. நாம் எப்போதும் சிவ சிந்தனையிலிருந்து நீங்காதிருப்தற்கு விபூதி உதவுகின்றது. “வாழ்க்கை நிலையற்றது. நாம் என்றோ ஒரு நாள் சாபராகி விடுவோம்: என்ற எண்ணம் எங்கள் மனத்தில் இருப்பதற்கும் ஒருவகையில் உதவுகின்றது இந்தத் திருநீறு. இந்த எண்ணம் இருக்குமானால் நாம் தீயவற்றை நீக்கி நல்லவற்றைச் செய்ய முயற்சிப்போமல்லவ?

விபூதி பசுஞ் சாணத்தினை நீறாக்குவதால் பெறப்படுகின்றது. பசு சைவர்களின் போற்றுதலுக்குரியது. எல்லாத் தெய்வாம்சங்களும் பசுவில் இருப்பதால் கோமாதா என்றும், காமதேனு என்றும் போற்றி வணங்குகிறோம். அதன் சாணமே நீறாகி வருவதால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. பசுஞ் சாணம் நல்ல ஒரு தொற்று நீக்கி என்றும் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்றும் மருத்துவ ரீதியிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளது. விபூதியிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற நீத்தன்மையை உறுஞ்சும் தன்மையும் விபூதிக்குண்டு. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் உள்ள விபூதியை நாம் ஒரு நற்கருமம் தொடங்குமுன் தரித்துக் கொள்வது அவசியமல்லவா? நெற்றியில் திருநீறு இன்றிச் செய்யும் எக்காரியமும் பலனளிக்காது. அதனால் எந்தக் கிரியையும் ஆரம்பிக்கும் போது விபூதி தரித்தல் அவசியம். அதுவும் மந்திர சகிதமாக தரிக்கும்போது இன்னும் சிறப்பல்லவா? அவ்வேளையில் சொல்லப்பெறும் சுலோகம்:

“ஸ்ரீ கரம் ச பவித்திரம் ச ரோக தோஷ நிவாரணம்
லோக வஸ்யகரம் புண்ணியம் பஸ்மம் த்ரைலோக்ய சாதனம்”

பவித்ரதாரணம் (தர்பை அணிதல்):
விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் யாவற்றிலும் அது முக்கிய இடம் பெறுகின்றது. சூழலில் இருக்கும் மாசுக்களை நீக்கித் தூய்ம செய்வதுடன் மந்திர ஒலிகளைக் கிரகித்துச் சேகரித்துப் படிப்படியாக் வெளிவிடுவதில் வல்லது. ஒரு கும்பத்தை உருவாக்கும்Bஓது கும்பத்தினுள்ளேயும் வெளியேயுமாக இரு கூர்ச்சங்களும் ஒரு பவித்திரமும் தர்ப்பையால் செய்யப்பட்டு அங்கு போடப்படுகின்றன. தெய்வ சக்தியைக் கும்பத்தில் தேக்கிவைக்க அவை உதவுகின்றன. அதேபோலக் கிரியைகளில் ஈடுபடும் நாம் நமக்கு மனத்தூய்மை, மனத்தெளிவு, மன ஒருமைப்பாடு என்பனவை ஏற்பட்டுக் கிரியைகளில் மனமொன்றி நிற்பதற்காகப் பவித்திரம் அணியப் பெறுகின்றது. அதிக சக்திச் செறிவும் சிறப்பான அதிர்வுகளும் தர்ப்பையில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

நமது மோதிரவிரல் மிகச் சிறப்பான ஓரிடம். நமது உடலில் சில இடங்கள் நரம்புகளின் சந்திப்புகளாகவும், பல உணர்வுகளைத் தூண்டல் செய்யக்கூடிய இயல்புடையவைகளாகவும் உள்ளன. இந்த இடங்களில் அதற்குரிய ஊசிகளை முறைப்படி ஏற்றுவதன் மூலம் உடல் நோய்களை நீக்கி ஆரோக்கியம் ஏற்படுத்தும் சீன வைத்திய முறைகயாகிய “அக்யூபன்சர்” முறையை இப்போது பலரும் அறிவர். இதனை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோகள் இத்தகைய இடங்களில் துளையிட்டு தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களினால் ஆன நகைகளை அணிந்தும், பலன் பெற்று இருக்கின்றனர். செடில் காவடியும், இத்தகைய ஒன்றே. கழுத்திலும், மணிக்கட்டிலும் நகைகளை அணிவதன் மூலம் இத்தகைய நற்பலன்களைப் பெறமுடியும் என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மோதிர விரலின் அடிப்பகுதி இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு இடமாகவும் தர்ப்பை நாம் முன்னரே பார்த்தபடி நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் இருப்பதனால் சங்கல்பம் செய்வதன் ஓரங்கமாகப்ப் பவித்திரம் அணிதல் நடைபெறுகின்றது. இந்நேரத்தில் தர்பையினால் ஆன ஆசனத்தில் இருக்கும்படியும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வசதி குறைவுகள் காரணமாக பாவனையாக இரு தர்ப்பைகளைக் காலின் கீழ் போட்டுவிட்டு அமரும்படி கேட்கப்பெற்றுகிறார்க. அதேபோலக் கைவிரலில் பவித்திரம் அணிந்தபின் மலர்களுடன் சில ர்கர்ப்பைகளை உள்ளங்கைகளுக்குள்ளே இட்டுக்கொண்டுதான் சங்கல்பம் ஆரம்பமாகின்றது. தர்ப்பை அணியும் போது சொல்லப் பெறும் மந்திரம்:

“ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ

வித்யாபலம் தைவபலம் ததேவ கஊரீபதே தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”
கௌரீ பதியாகிய சிவபிரானே உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) நாள், லக்னம் என்பன சுலபமானவையாகவும் தாரை, சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் சுகம் செய்வனவாகவும் கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு):
யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். அலைபாயும் மனத்தினால் நாம் இறைவனை வழிபடுதல் இயலாது.
மனம் இறைவன் மீது லயித்து நமது சிந்தனை ஒருங்கு குவிக்கபடும் போதுதான் பிரார்த்தனைகள் பலனளிக்கும். அதற்கு வழிவகுப்பதே பிராணாயாமம். புறச்சிந்தனைகளை ஒதுக்கி மனத்தை அகவயப்படுத்தி இறைநினைவைக் கிளரவைத்து நாம் இப்போது மற்றெல்லாவற்றையும் மறந்து இக்கிரியைஅயில் ஒன்றுபடப் போகிறோம் என்ற உணர்வோடு இந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். இப்போது சாதாரணமாக நமக்காகக் கிரியைகளைச் செய்யப் போகின்ற அர்ச்ச்கரே பிராணாயாமத்தில் ஈடுபடுவது வழக்கம்.

“ஓம்பூ: ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம்.

ஓம் த்த்சவிதுர்வரேண்யம். பர்க்கோ தேவஸ்ய தீமஹீ. தியோ யோ த:: ப்ரசோததயாத்.

ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரம்ம பூர்புவஸ்வரோம்.
சுவாசக் கட்டுப்பாடாகிய பிராணாயாமம் பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தில் தொடங்கி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனப்படும் ஏழுலகங்களையும் கூறி அதன் பின் காயத்திரி மந்திரத்தைச் சொல்லி நிறைவு பெறுகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள்; எந்த ஒளிக்கடவுள் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை மனதில் தியானிப்போமாக.

விநாயகரைத் துதித்தல்
எக்காரியமும் விநாயகர் வழிபாட்டோடு தொடங்குவது நமது பாரம்பரிய மரபுமுறைப்படி அமைவதாகும்.இது விக்கினங்கள் இன்றி நமது கருமம் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நெற்றியிலே குட்டுகின்றோம். ஏன் குட்டி வணங்க வேண்டும் என்பதற்குக் கயமுகாசுரன் கதையும், அகத்தியர் கதையும் காரண விளக்கங்களைத் தருகின்றன. என்றாலும் முன்னர் குறிப்பிட்டவாறு நமது உடலில் சில இடங்களில் சில முக்கிய இயல்புகள் இருக்கின்றன. அவ்வையில் நெற்றியின் இரு மர்ங்கிலும் குட்டும் போது அமிர்த கலசங்கள் கலங்கி உடலை நனைக்கின்றன.என்று ஞானியர் கூறுவர். இவ்வாறான செயல்பாடுகளில் நமது உடலின் கருவிகள் (அங்கங்கள்) ஈடுபட; வாய் மந்திரங்களையோ திருமுறைகளையோ கூற மனம் இறைவனின் திருவுருவையும் அவரது கருணைச் செயல்களையு நினைக்க அவ்வேளையில் நமது ஆன்ம ஈடேற்றத்தின் முதல் நிலையாகிய ஒருமைப்பாடு சித்திக்கத் தொடங்குகிறது.
திரிகரணங்களாலும் அதாவது; மனம், வாக்கு, காயம் (நினைவு,சொல்,செயல்) இறைவனோடு ஒன்றிநிற்றல் எனப்படும் நிலை இதுவே. இவ்வேளயில் சொல்லப்பெறும் விநாயகர் வணக்க சுலோகமும் அதனைத் தொடர்ந்து சொல்லப் பெறும் சில மங்கள சுலோகங்களும் இவை:
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்

பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாத்தயே”
வெண்மநிற வஸதிரம் தரித்தவரும், எங்கும் நிறைந்தவரும், நான்கு கரங்களை உடையவரும், மலர்ந்த முகத்தை உடையவருமாகிய விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குதற் பொருட்டுத் தியானிப்போமாக.
“மானசம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம்
ஸ்ரீ சிவஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ஸயஹ”
மனதாலும், வாக்காலும், செயல்களாலும் நாம் செய்துகொண்ட பாவங்கள் சிவனை நினைப்பதால் ஐயமின்றி அழிந்துவிடுகின்றன.
“திதிஸ் சிவஸ் ததாவாரோ நக்ஷ்த்ரம் சிவ ஏவச
யோகஸ்ச்ச கரணம் சைவ சர்வம் சிவமயம் ஜகத்”
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என்னும் பஞ்சாங்க உறுப்புக்களாகிய இவ்வுலகிலுள்ள காலவரையறை எல்லாமே சிவமயமாக, மங்கலமாக இருக்கட்டும். என்பனவாம்.
சங்கல்பம்
சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம். அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.
கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.
இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.
“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”
என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.
ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.
இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.
இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,
வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;
இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;
அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;
சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;
சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;
ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;
இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;
மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;
அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;
ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;
அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;
பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;
பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;
சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே;
இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;
பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;
பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;
எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;
நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;
ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;
யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;
ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:
மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.
கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;
மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;
அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;
உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1. நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.
2. அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
3. அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.
4. புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.
5. காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.
6. இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

கலசபூஜை
பூர்வாங்கக் கிரியைஅகளில் அடுத்ததாக நாம் கவனிக்கத்தக்கது கலசபூஜை. கலசம் என்பது பூஜையில் பயன்படுத்தப்படும் நீர்ப்பாத்திரம். அதனுள் இருக்கும் நீர்ப் பூஜையில் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய தேவை சிவாச்சாரியருக்குண்டு. அதனால் அதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துதல் இக்கிரியையின்போது நடைபெறுகின்றது.
கலசம்; சந்தனம், குங்குமம், அட்சதை, புஷ்பம் என்பவற்றால் அலங்கரித்து “கலசஸ்ய முகே விஷ்ணு…” என ஆரம்பிக்கின்ற ஒரு மந்திரம் இங்கே ஜபிக்கப்படுகின்றது. கலசத்தின் வாயில் விஷ்ணுவும், கழுத்தில் ருத்ரனும், அடியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் தாய்த் தெய்வங்களிம், நால்வேதங்களும் குடிகொண்டிருப்பதாகப் பாவனை செய்து அங்கே கங்கை, யமுனை முதலிய சப்த நதிகளையும் வந்து சாந்தித்தியம் செய்யும்படி வேண்டுதல் செய்வதாக இம் மந்திரம் அமைகின்றது.
கல்லிலே கடவுளைக் காணும் பாவனைதான் நமது வழிபாட்டின் அடிப்படை. அதே நிலையில் இந்தக் கலசத்தில் உள்ள நீரின் புனிதமும் மகத்துவமும் இப்போது புரிந்துகொள்ளத்தக்கதன்றோ? விரிந்த நிலையில் கிரியைகள் நிகழும்போது இக் கலசபூஜையின் தொடக்கத்தில் கலசத்தில் நீர் நிரப்பும்போது ஒரு அழகிய வேதமந்திரம் சொல்லப்படுகின்றது. “ஆபோ வா இதகும்..” என்னும் இந்த மந்திரம் தண்ணீரின் மகத்துவத்தைக் கூறுகின்றது.
இந்த உலகம் முழுவதும் தண்ணீரினாலேயே நிலைபெற்றிருக்கின்றது. அமிர்த மயமானது தண்ணீர் என்றும் அழகாக வர்ணிக்கின்றது இந்த வேதமந்திரம்.
கண்டா பூஜை
கண்டா என்பது மணி. மணியோசை மங்கலமானது. மங்கலநிகழ்வுகளைலும், பிரார்த்தனைகளைலும் மணி அடிக்கப்படுகின்றது. கிரியைகளின் ஆரம்பத்தில் கைமணிக்குச் சந்தண, குங்கும அலங்காரங்கள் செய்து, அதன் மேற்பகுதியிலிருக்கும் இடபத்தின் அங்கங்களில் பிரமா முதலிய தேவர்களும், மணியின் நாக்கிலே சரஸ்வதியும், அதன் வாய்ப்பகுதியில் நாதத்துவமும் இருப்பதாகப் பூசித்தபின்ல் “தேவர்கள் வருவதற்காகவும், அசுரர்கள் அகலுதற்காகவும் இந்த மணியை அடிக்கிறேன்” என்ற சுலோகத்தைச் சொல்கிறார்கள்.
தீபபூஜை
தீபம் மஹால்ச்ட்சுமியின் வடிவம். தீப ஒளி இருக்குமிடம் தெய்வீகமானது. பூரணை நாட்களிற் பெண்கள் பலர் சேர்ந்து திருவிளக்குப் பூஜை எனத் தீபபூஜை செய்யும் மரபும் இப்போது உண்டு. சாதாரண்மாகக் கிரியைகளின் ஆரம்பத்தில் லட்சுமிகரத்தை வேண்டி சிவாச்சாரியர் குத்துவிளக்கிற்குச் சந்தனம், குங்குமம் இட்டுப் புஸ்பம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
“எமது எதிரிகள் தொல்சிந்துபோய் சுபம், மங்களம், ஆரோக்கியம், செல்வம் ஆகியன விருத்தியாவதற்காக இந்த மங்கள் ஜோதியை வணங்குகிறேன்” எனப் பிரார்த்திக்கப்படுகின்றது.

வருணகும்பபூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யபூஜை

இவை பூர்வாங்கக் கிரியைகளின் நிறைவாக விரிவாக நிகழும் ஒன்றோடொன்று தொடர்பான கிரியைகள் ஆகும். வருணன் வேதகாலம் முதல் ஆகமக் கிரியை மரபுகளின் காலம்வரை இந்துக்களின் வாழ்க்கையிற் பெறும் முக்கியத்துவமும், அவனது அதிஷ்டானத்திலுள்ள தண்ணீர் இங்கு பெறும் சிறப்பும், புண்யாகவாசனத்திற் சொல்லப்படும் வேத மந்திரங்களிற் காணப்படும் அதியுன்னதமான சமூக விழுமியக் கருத்துகளும் தனியான-விரிவான விளக்கத்திற்குரியன. பசுவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், பசுவின் பயன்களான ஆனைந்து எனப்படும் பஞ்சகவ்வியத்தின் சிறப்பும் அத்தகையனவே. அவை தனியாக விபரிக்கப்படும்.

கும்பபூஜை
ஆலயங்களில் நிகழும் விசேஷ கிரியைகள் எல்லாவற்றிலும் கும்ப முதலிடம் பெறுகின்றது. தமிழர்களின் வாழ்வோடு சிறப்பாக இந்துக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு மங்கலத் திருவுருவமாக நிறைகுடம் அமைந்துள்ளது. இதே நிறைகுடம் கிரியைகளிற் பயன்படுத்தப்படும்போது கும்பம் எனப்படுகின்றது.
நிறைகுடம் ஓர் அடையாளப் பொருளாகவும், மங்கலச் சின்னமாகவும் இருக்க, கும்பம் இறைவனை ஆவாகனம் செய்து வழிபடும் ஒரு பூஜாஸ்தானமாக அமைகின்றது.
உருவமற்ற அருவமான பரம்பொருளை எங்கள் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் திருவுருவங்களாக அமைத்து வழிபடுவது ஒருவகை வழிபாடாகும். உருவமல்லாமலும் அருவமல்லாமலும் இடைப்பட்ட நிலையில் ஒரு குறியீடாக அருவுருவமாகக் காட்சி தருவது லிங்கம். இது சிவபிரானைக் குறித்தலில் சிவலிங்கம் என்பர்.
இதேபோன்ற ஒரு குறியீடாக; எல்லாமூர்த்திகளையும் ஆவாகனம் செய்து வழிபடுதற்குக் கும்பம் உதவுகின்றது. கும்பம் சர்வதேவதா ஸ்வரூபம். அது ஒரு தெய்வீகத் திருமேனியாகப் பாவனை செய்யப்படுகின்றது. மந்திரங்களை அதில் பதித்து இறைவனை அங்கு எழுந்தருளச் செய்து சகல உபசாரங்களும் வழங்கிப் பூஜைகளை நிகழ்த்துவர்.
கும்பம் உருவாக்கப்பட்ட உலோகம் அல்லது மண் உடலாகவும், கும்பத்திற் சுற்றப்படும் நூல் எழுபத்திரண்டாயிரம் நாடிகளாகவும், தண்ணீர் இரத்தமாகவும், உள்ளே இடப்படும் நவரத்தினங்கள் முதலியன எலும்புகளாகவும், தங்கம் அல்லது நாணயம் சுக்கிலமாகவும், தேங்காய் சிரசாகவும், மாவிலை மயிராகவும், கூர்ச்சம் குடுமியாகவும், அதிற் பதிக்கப்படும் மந்திரம் உயிராகவும் கொள்ளப்படவேண்டுமெனச் சகலாகம சங்கிரகம் கூறுகின்றது.
இவ்விதம் அமைக்கப்படும் கும்பங்கள் இருவகை. ஒன்று நவராத்திரி, வரலக்ஷ்மி விரதம் போன்ற பூஜைகளுக்காக வீட்டிலோ ஆலயத்திலோ வைக்கப்படும் கும்பம். பூகைவேளையிற் கும்பத்தில் ஆவாகனம், பூஜை உபசாரம் முதலிய வழிபாடுகள் முடிந்தபின் மூர்த்தியை மீண்டும் ஸ்வஸ்தானத்துக்கு (சொந்த இடத்துக்கு) எழுந்தருளச் செய்து கும்பத்தைக் கலைத்து விடுவர்.
மற்றொருவகைக் கும்பம் அபிஷேகத்திற்குரியது. எங்கும் நிறைந்த பரம்பொருட் சக்தியைச் சிவாச்சாரியார் தமது மனோசக்தியாலும், மந்திர சக்தியாலும் ஆகர்ஷித்துக் கும்பத்திலே ஆவாகனம் செது, அதிற் பூஜைசெய்து தெய்வ சாந்நித்தியத்தை ஏற்படுத்துகின்றார். இதன்பின் இங்கும்பமானது பிம்பம் எனப்படும் திருவுருவத்தில் அபிஷேகம் செய்யப்படும்போது தெவ சாந்நித்தியமும், இறையருட் சக்தியும் அத் திருவுருவத்திலே மேலும் பொலிகிறது. மந்திரங்கள் உருவேற்றப்படும்போது (மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும்போது) அபரிதமான சக்தி உருவாகுவது போலத் திருவுருவத்திலே மீண்டும் மீண்டும் அபிஷேகங்கள் பூஜைகளைச் ச்ய்யும்போது அங்கு அருட்சக்தி மிகுவதில் வியப்பென்ன? இது விஞ்ஞான பூர்வமாகவும் ஏற்புடையதன்றோ!
கும்பம் அமைத்தலிற் பலவகையான முறைகள் உண்டு. ஒரு கும்பம் மாத்திரம் அமைத்து அதில் மூர்த்தியை எழுந்தருளச் செய்து, பூஜை செய்தல் ருத்திர கும்பம்பூஜை எனப்படும். இதனுடன் அஷ்ட வித்தியேஸ்வரர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பரிவாரத் தெய்வங்களுக்கும் வேதிகையில் எட்டுத் திக்கிலும் ஒவ்வொரு கும்பமாக வைத்து; ருத்திரகும்பத்துடன் ஒன்பது கும்பங்கள் வைத்துப் பூஜொத்தல் நவகலச ஸநபன கும்ப பூஜை எனப்படும்.
இதற்குமேல் விரிவாகப் பதினேழு, இருபத்தைந்து, நாற்பத்தொன்பது, எண்பத்தொன்பது, நூற்றெட்டு, இருநூற்றொன்பது, நாநூற்றொனது, ஆயிரம், ஆயிரத்தொன்பது என்ற எண்ணிக்கையிற் கலசங்களை ஸ்தாபித்து வழிபடும் ஸ்நபனாபிஷேகங்களும் ஆகமங்களிற் சொல்லப்பட்டுள்ளன.
தற்போது 108, 1000 என்ற எண்ணிக்கைகளிற் சங்காபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. எனினும் விரிவான ஸ்நபனகும்ப அபிஷேகம் வழக்கில் அதிகமில்லை.
இக் கும்பங்களை ஸ்தாபிப்பதற்காக, ஆசனங்களாக வாழையிலைகளைப் பரப்பி அவற்றில் நெல், பச்சரிசி, பயறு, உழுந்து, எள்ளு, கடலை, துவரை ஆகிய தானியங்களும்; நெற்பொரி, தர்ப்பை என்பனவும் அடுக்காக இடப்படுகின்றன.
இவற்றை ஆசனம்ஹ்களாகக் கொண்டு க்ஷிதி (நிலம்) எனப்படும் பிருதுவி தத்துவம் முதல், குடிலை எனப்படும் சுத்த மாயை ஈறாக முப்பத்தாறு தத்துவங்களையும் இவற்றிலே விரிவாகப் பூஜிப்பர். அல்லது அனந்தர், தர்மர், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம், பத்மம் என ஆறாக வகுத்து ஷடுத்தாசனமாகப் பூஜிப்பதும் உண்டு. முன்னையதை பஞ்சாசன பூஜை என்பர். அனந்தாசனம், சிம்மாசனம்,யோகாசனம், பத்மாசனம்ம் விமலாசனம் என்பனவே பஞ்சாசனம் எனப்ப்டுபவை.
இவ்வாறு ஆசன பூஜைகளின்மூலம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த மெய்ப்பொருளைப் பிரதான கும்பத்திலே ஆவாகனம் செய்வர் (எழுந்தருளச் செய்தல்). ஆவாகனம் செய்த இறைவனை ஸ்தாபனம் (அமருமாறு வேண்டுதல்) சந்நிதானம் (அங்கிருந்து அருள் சுரக்கௌமாறு வேண்டுதல்) சந்நிரோதனம் (பூஜை நிறைவு பெறும்வரை அவ்விதமே நிலைபெற வேண்டுதல்) முதலிய கிரியைகள் மூலம் இறையருளை அங்கு பொலியச் செய்வர். இதன் பின் பாத்தியம் (சுத்திகரித்தற் பொருட்டாகப் பாதங்களிலே நீர் விடுதல்) ஆசமனம் (அருந்துவதற்கு ஒரு துளி நீர் வாயிலே விடுதல்) அர்க்கியம் (பூஜைக்குரிய விசேஷ ஜலம் சிரசிலே ஒருதுளி விடுதல்) முதலிய உபசாரங்களை வழங்கிப் பூஜிப்பர்.
இத்தகைய உபசாரங்கள் ஷோடசோபசாரங்கள் எனப்பதினாறு வகையாகவும் சதுஸ்ஷஷ்டி உபசாரங்கள் என அறுபத்துநான்கு வகையாகவும் கூறப்படுவன.
இவ் உபசாரங்களின் போதும், வேறுபக கிரியைகளின் போதும் பலவகையான முத்திரைகள் சிவாசாரியாரால் பயன்படுத்தப்படும். முத்திரை என்பது அடையாளம். பரதநாட்டியத்திற்போல அநேகமுத்திரைகள் மூலம் பல தத்துவார்த்த உட்பொருள்களை விளக்குவது கிரியைகளில் ஒரு சிறப்பம்சம். மேலும் இவை பாவனைலளாகவும் அமைகின்றன. மந்திரம், பாவனை, கிரியை என்ற மூன்றும் இணைந்ததே நமது ஆலய வழிபாட்டு முறை. பாவனைகளை முத்திரைகள் மூலம் காட்டுவது மரபு. உதாரணமாக வணக்கம் செலுத்தும் பாவனையை நமஸ்கார முத்திரைமூலம் காட்டுவது வழக்கம்.
இவ்வாறு கிரியைகளிற் பயன்படும் முத்திரைகள் மிகப் பலவாயும், ஆழமான கருத்துக்கள் உள்ளனவாகவும் இருப்பதால் அவற்றை இங்கு ஆராய்தல் முடியாது.
பிரதான கும்பபூஜையின் பின் (பஞ்சாசன பூஜையின்பின்) ஆவரண பூஜை செய்யப்படும். பிரதான மூர்த்தியைச் சூழவுள்ள பரிவார கணங்களை ஒவ்வொரு ஆவரணமாக (வரிசையாக, சுற்றுவட்டமாக) பூஜித்தலே ஆவரண பூஜை.
ஸ்நபன கும்ப பூஜையில் ஐந்து ஆவரணங்கள் உள்ளன. முதலாம் ஆவரணத்திற் பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் எனப்படும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து மந்திரங்களும் ஷடங்க மந்திரங்கள் எனப்படுகின்ற ஹ்ருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம் என்ற ஆறு மந்திரங்களுமாகப் பதினொரு மந்திரங்களும் பூஜிக்கப்படுகின்றன. இது எல்லா மூர்த்திகளுக்கும் ஒரேவிதமாகவே அமையும்.
இரண்டாம் ஆவரணத்தில் அஷ்டவித்தியேஸ்வரர்கள் எண்மர் பூஜிக்கப்படுவர். இவர்கள் பிரதான மூர்த்திகளுக்கேற்ப மாறுபடுவார்கள்.
மூன்றாம் ஆவரணத்தில் கணநாதர்கள் எண்மர் பூஜிக்கப்படுவர். இவர்களும் பிரதான மூர்த்திகளுக்கேற்ப மாறுபடுவார்கள்.
நான்காவது ஆவரணத்தில் எண்திசைக் காவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களும் பிரம்ம விஷ்ணுக்களும் பூஜிக்கப்படுவர்.
ஐந்தாவது ஆவரணத்தில் வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், கதை, த்ரிசூலம், பத்மம், சக்ரம் ஆகிய தசாயுதங்களும் பூஜிக்கப்படும்.
இவையாவும் சாதாரண கும்பபூஜையில் இடம்பெறும்.
பொதுவாக, ஸ்நபன கும்பபூஜை நடைபெறும்போது நடுவிலே ஒரு பெரிய குடத்திலே பிரதானமூர்த்தி எழுந்தருளியிருப்பார். அதற்கருகில் இடப்பாகத்திலே சக்திக்குரிய கும்பம் இருக்கும் (விநாயகருக்கு வல்லபாதேவி, சிவனுக்கு மனோன்மணி, வைரவருக்குச் சாமுண்டாதேவி, வீரபத்திரருக்கு பத்திரகாளி, முருகனிக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை, ஐயனாருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலா, விஷ்ணுவுக்கு இருபுறமும் பூமாதேவி-மஹாலக்ஷ்மி) பெண் தெய்வங்களுக்கும் இவ்வாறு சக்தி கும்பம் வைக்கப்படுவது வழக்கம். அதுபீடசக்தி எனப்படும். அதாவது சிவலிங்கத்தில் எவ்வாறு லிங்கமாகிய சிவனுக்கு ஆவுடையாராகிய பீடம் சக்தியாக அமைகிறதோ அவ்வாறே பீடம் என்பது (ஆசனம்) சக்தி வடிவமாகப் பாவிக்கப் படுகின்றது.
இவர்களைச் சூழ்ந்து எண்திசைகளிலும் எட்டுக் கும்பங்கள் இருக்கும். இவற்றில் முன்னர் குறிப்பிட்டதுபோல ஐந்து ஆவரணங்களில் இரண்டாவது ஆவரணமாக அமைகின்ற அஷ்டவித்யேஸ்வரர்கள் பூஜிக்கப்படுவர். சக்தி கும்பத்திற்கும் பிரதான கும்பத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில் முதலாவது ஆவரண தேவர்களான பஞ்ச ப்ரம்ம ஷடங்க மந்திரங்கள் பூஜிக்கப்படுவர். எட்டுக் கும்மங்களுக்கும் அடுத்த ஆவரணங்களாக அதற்கு வெளியில் ஏனைய மூன்று ஆவரணதேவர்களும் மூன்று சுற்று வட்டங்களிற் பூஜிக்கப்படுவர். எனவே, ஸ்நபன கும்ப பூஜையானது பஞ்சாவரண சகித பஞ்சாசன பூஜை எனக் கூறப்படுகின்றது.
ஓர் ஆலயத்திலே பிரதான மூர்த்திக்குரியதாக (உதாரணமாகச் சிவன்) இந்த ஸ்நபன கும்பங்கள் அமைந்திருக்க, அதற்கும் வெளியே நாற்புறங்களிலும் ஏனைய பரிவாரத் தெய்வங்களான விநாயகர், முருகன், வைரவர், சந்தானகோபாலர், நாகதம்பிரான், போன்றவர்களுக்கான கும்பங்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் காட்சியை ஒருகணம் மனக்கண்ணில் நிறுத்திப்பார்த்தாற் சக்கரவர்த்தி ஒருவர் தமது பரிவாரங்கள் புடைசூழ அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கின்ற திருகோலக் காட்சி நினைவுக்கு வரும். அதனால் இங்கு வழங்கப்படும் தேவோபசாரம் என அழைக்கப்ப்டும். உபசார பூஜைகள் ராஜோபசாரம் எனவும் சொல்லப்படலாம்.

கும்பங்களிலே ந்ழுந்தருளும்படி வேண்டும்போது சில முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன. கும்பத்தை இறைவன் திருவுருவாகப் பாவனை செய்தபின் அந்தத் திருவுருவத்தை மனக்கண் நிறுத்தி இறைவனின் தோற்றப்பொலிவை அங்கங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், ஆடைகள் என்பவற்றுடன் வர்ணித்துக் கற்பனை செய்யும் தியான சுலோகங்கள் உச்சரிக்கப்படுகின்றன. அப்போது கும்பத்தில் இறைவன் திருவுருவம் தோன்றுகின்றது. இதன்பின் அந்தத்தத் தெய்வத்திற்கான வேதமந்திரம், மூலமந்திரம் என்பன உச்சரிக்கப்படுகின்றன. இவை அத் திருவுவத்தினுள் இருக்கும் உயிராகின்றன. எனவே இப்போது அங்கு இறைவன் உயிரோடும் உடலோடும் எழுந்தருளிவிட்டார் என்பது கருத்து.
இவ்வாறு கும்பத்தில் எழுந்தருளிய இறைவனை அக்கினி வளர்த்து அங்கும் எழுந்தருளச் செய்து அங்கிருக்கும் இறைசக்தியை மறுபடி கும்பத்திலுள்ள இறைசக்தியுடன் சேர்த்தபின் அவருக்கு வேண்டிய உபசாரங்களை முன்னர் கூறியபடி பாத்தியம், அர்க்கியம் முதலியனவாகவும் தூபதீபம்முதலியனவாகவும் நைவேத்தியயம், தாம்பூல முதலியனவாகவும் அர்ச்சனை, தோத்திரம் முதலியனவாகவும் திருமுறை, இசை முதலியனவாகவும் வழங்கி மகிழ்வித்தல் நடைபெறுகின்றது.
இதன்பின் சகல மங்கள வாத்திய கோஷங்களுடன் கும்பத்தை ந்ழுந்தருளச் செய்து வீதிவலம் வரச்செய்தபின் மூலவராகவும், பரிவாரத் தெய்வங்களாகவும் இருக்கின்ற இறை திருவுருவங்களில் அபிஷேகம் செய்து அங்கிருக்கும் தெய்வ சாநித்தியம் அதிகரிக்கச் செய்தல் நிகழ்கின்றது. இந் நிகழ்வுக்கு முன்னோடியாக அந்தத் திருவுருவங்களுக்குப் பஞ்சகவ்வியம், பஞ்சாமிதம், பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல் வழக்கம். இவையாவையும் சேர்ந்து இறை திருவுருவத்தைத் தூய்மை செய்தல், குளிர்வித்தல், அருட்பொலிவு கூட்டுதல் என்பனவற்றை ஏற்படுத்துவதுடன் அடியார்களை ஆண்டவனுடன் ஐக்கியப்படுத்துவதுடன் மன ஒருமைப்பாடு, மன அமைதி என்பவற்றை உருவாக்கும் சாதனங்களாகவும் அமைவதை உணரலாம்.
கும்பத்தில் எழுந்தருளிய இறைவனை, அக்னி வளர்த்து அங்கும் எழுந்தருளச் செய்து, அங்கிருக்கும் இறைசக்தியை மறுபடி கும்பத்தில்லுள்ள இறைசக்தியுடன் சேர்க்கும் அந்த நிகழ்வு “அக்கினி காரியம்” எனப்படும்.
எனவே, ஆலயத்திற்குச் சென்றோம், பணத்தைக் கொடுத்தோம், பெயர்-நட்சத்திரத்தைச் சொன்னோம் யாவற்றையும் அர்ச்சகரிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு நடப்பதைச் சிவனே என்று பார்த்திருந்தோம் என்றில்லாமல் அங்கு நடக்கும் கிரியைகளுடன் ஒன்றி லயித்துப் பயன்பெற முயலவேண்டும்.

No comments:

Post a Comment