Friday, February 11, 2011

தீர விசாரிக்காமல் முடிவெடுக்காதே

விசாரிக்காமல் முடிவெடுக்காதே

திருடர்கள் சிலர் காட்டில் இருந்த பிள்ளையார் கோயிலில் கூடித் திட்டம் போட்டனர். அரண்மனையில் திருடினால் பெரும்பொருள் கிடைக்கும் என்பது அவர்களின் எண்ணமாகருந்தது. திட்டம் நிறைவேற்றினால், பிள்ளையாருக்கும் பங்கு கொடுப்பது என்று முடிவெடுத்தனர். அன்றிரவு திருடர்கள், மாகாளம் நாட்டை ஆண்ட மன்னன் பத்திரகிரியின் அரண்மனைக்குள் நுழைந்தனர். பொன்னும், பொருளையும் திருடிக்கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பினர். நள்ளிரவு நேரமாகிவிட்டது. இருந்தாலும், வேண்டிக்கொண்டபடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்றனர். இருட்டில் பிள்ளையார் சிலை இருக்குமிடம் தெரியவில்லை. இருந்தாலும் தட்டுத்தடுமாறி தடவிப்பிடித்து விலையுயர்ந்த மாணிக்க மாலையை அணிவித்தனர். ஆனால், உண்மையில், அங்கு தியானத்தில் இருந்த துறவியின் கழுத்தில் மாணிக்கமாலை விழுந்தது. துறவியின் தாடியைத் தடவிய ஒரு திருடன், அது பிள்ளையாரின் தும்பிக்கை என நினைத்து அவர் கழுத்தில் போட்டு விட்டான். மறுநாள் காவலர்கள் திருடர்களைத் தேடிப் புறப்பட்டனர். தியானத்தில் இருந்த துறவியைக் கண்டு, அரண்மனைக்கு இழுத்து வந்தனர். காரணம் அவர் கழுத்தில் கிடந்த மாணிக்க மாலை தான். துறவியோ கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மவுனம் சாதித்தார். திருடன் அவரே என்று முடிவுகட்டிய மன்னன், கழுமரத்தில் ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிட்டான். ""என் செயலால் ஆவதொன்றுமில்லை'' என்ற பாடலைப் பாடிக் கொண்டே துறவி புறப்பட்டார். தன்னைக் கொல்ல தயாராக இருந்த கழுமரத்தைப் பார்த்தார். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதிசயம் நிகழ்த்திய துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன் பத்திரகிரி. அவனுக்கு சிவதீட்சை வழங்கி தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார். அத்துறவியே திருவொற்றியூரில் முக்தி பெற்ற சிவனடியாரான பட்டினத்தார் ஆவார். சரியாக விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது, புரிகிறதா!




No comments:

Post a Comment