Sunday, February 6, 2011

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ?

கடவுள் பக்தியால் பலன் கிடைக்குமா ?

நாம் விரும்பியது கிடைத்தால் சந்தோஷம்; எதையாவது இழந்தால் துக்கம். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி; யாராவது இறந்து விட்டால் துக்கம். இதெல்லாம் எத்தனை நாளைக்கு? காலத்தால் மறக்கக் கூடியவை தான். “உறவினரின் மரணத்துக்காக அழாதே; கடவுளின் தரிசனத்துக்காக அழு…’ என்றனர். கடவுளின் தரிசனம் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதுடன், பிறவியே இல்லாத முக்தி நிலையை அளிக்கும்.
துளசிதாசர் ஒரு ராம பக்தர். கங்கா தீரத்தில் உலவிக் கொண்டிருந்தார். ஒரு மயானம் குறுக்கிட்டது. அங்கு ஒரு இளம்பெண், இறந்து போன தன் கணவனது அருகில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். தாசரைக் கண்டதும் ஓடி வந்து வணங்கி, “என் கணவர் போன இடத்துக்கு, நானும் செல்ல வழி காட்டுங்கள்…’ என்றாள்.
“அவளிடம், மோட்சத்தை உண்டாக்கிய அந்தக் கடவுள் இவ்வுலகிலும் இருக்கிறான்…’ என்றார் துளசிதாசர். அதற்கு அவள், “நான் மோட்சத்தை விரும்பவில்லை; என் கணவர் அருகில் இருக்க விரும்புகிறேன்…’ என்றாள். “நீங்கள் வீட்டுக்குப் போங்கள்… இன்னும் ஒரு மாதத்தில், உங்கள் கணவர் திரும்பி வந்து விடுவார்…’ என்றார் துளசிதாசர். அவளும் போய் விட்டாள். அன்று முதல் அந்த பெண்ணின் வீட்டுக்கு போய், “உலகம் மாயை, அநித்யமானது!’ என்று பக்தியின் பெருமைகளைப் பற்றி உபதேசித்தார் தாசர். அவளுடைய மனதில் துக்கம் மறைந்து, பக்தி குடி கொண்டது. சதா காலமும் ராமனையே தியானித்து, மற்றவைகளை மறந்தாள்; துக்கமும் போய் விட்டது.
மாதக் கடைசியில் அவளுடைய சிநேகிதி இவளிடம் வந்து, “உன் கணவர் திரும்பி வந்து விட்டாரா?’ என்று கேட்டாள். “ஆம்!’ என்றாள் அவள். “எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டாள் சிநேகிதி. தன் நெஞ்சில் கை வைத்து, “அவர் என் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்!’ என்றாள் அந்த பெண். பக்தி மேலீட்டால் கணவன் போன துக்கத்தை மறந்து, நெஞ்சில் கடவுளுக்கு இடமளித்து விட்டாள். கடவுளைப் பற்றிய ஞானத்தை அவளுக்கு தாசர் உபதேசித்து விட்டதால், அவளும் உலக விஷயங்களிலிருந்து விடுபட்டு, ஞானம் ஏற்பட்டு கடவுளிடம் மனதை வைத்து, காலங்கழித்து முக்தியடைந்தாள் என்று ஒரு கதை உண்டு.
பிறவி என்பது, கர்ம வினையை அனுபவிப்பதற்காக ஏற்பட்டது. அதை அனுபவித்ததும், அவரவர்கள் போக வேண்டியது தான். வந்த காரணமும் தெரியாது; போன காரணமும் தெரியாது. ஞானம் வந்து விட்டால், ஏதோ வந்தான், போனான் என்றிருப்பர்; அது இல்லையேல், அழுது புலம்பிக் கொண்டிருப்பர். அழுது புலம்பினால் போனவன், வருவானா? நாமும் ஒருநாள் இப்படிப் போக வேண்டியவன் தானே என்று, மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

No comments:

Post a Comment