Friday, February 11, 2011

மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வரவேண்டுமா?

மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வரவேண்டுமா?

 மனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம். ஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும். முன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது. காலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றிக்கிட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர். விவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும், குளித்து, நெற்றிக்கு வைத்துக் கொண்டு, சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர். இதுவே, ஆசார, அனுஷ்டானமுள்ள குடும்பம். அப்படிப்பட்டவர்களையும், அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும். பெண்கள் எழுந்ததும், குளியல், வாசல் தெளித்து கோலம் போடுதல், பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என, இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர். இவர்களும் இந்த ஆசார, அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர். விடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம். எந்த வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம். இதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. இப்போது எல்லாமே இயந்திர, நாகரிக வாழ்க்கையாகி விட்டது. காலையில் படுக்கையில் இருந்தபடியே காபி, பிறகு டிபன், காபி.பிறகு, எங்கேயாவது ஓடுவது, உழைப்பது; சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு, தூக்கம். ஆண்கள் தான் இப்படியென்றால், பெண்கள் கூட ஆசார, அனுஷ்டானத்தில் சிரத்தை காட்டுவதில்லை. ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதே இடத்தில் மேலும், மேலும் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவர். அந்த இடம் குப்பை மேடாகி விடும். ஆசார, அனுஷ்டானக் குறைவு குடும்பத்தில் யாரிடமாவது இருந்தாலும் போதும், மற்றவர்களுக்கு அதில் சிரத்தை இல்லாமல் போய் விடும். "தாத்தா குளிக்காமலே சாப்பிடுகிறாரே! நான் மட்டும் ஏன் குளிக்க வேண்டும்?' என்று பேரன் கேட்டால், ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்பாவோ, தாத்தாவோ, பூஜை செய்தால், பேரனும் பக்கத்தில் உட்கார்ந்து, மந்திரம் சொல்வான், மணியடிப்பான், ஊதுவத்தி ஏற்றி வைப்பான். இப்படி, புத்தி அவனுக்கும் செல்லும். நாம் தான் வழிகாட்ட வேண்டும். ஆசார, அனுஷ்டானத்தோடு இருப்பது கவுரவக் குறைச்சல் என்று எண்ணினால், அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்; அவளுடைய "அக்கா'தான் சந்தோஷமாக வாசம் செய்வாள்!

No comments:

Post a Comment