Tuesday, February 8, 2011

ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?

ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமா?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை உடல் ஊனம் என்பது முக்கியமான உட்பிரிவு. ஜென்ம ராசி, நவாம்சம் ஆகியவற்றை மட்டுமே வைத்து உடல் ஊனத்தை கணிக்க முடியாது.
முக்கியமாக அஷ்டவர்க்கம் எனப்படும் பரல்களின் எண்ணிக்கையை வைத்தே உடல் ஊனத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும். உதாரணமாக லக்னத்திற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, லக்னாதிபதி இருக்கும் வீட்டிற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, 6ஆம் அதிபதிக்கு எத்தனை பரல்கள், 8க்கு உரியவருக்கு எத்தனை பரல்கள் என்பது போன்ற தகவல்கள் ஊனத்தை கண்டறிய முக்கியமானவை.
பரல்களை கணித்த பின்னரே இராசி, நவாம்சத்தை கருத்திக் கொண்டு பலன் கூற வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி கிரகயுத்தம் அல்லது அஷ்டங்கம் (சூரியனுடன் சேர்ந்து) அடைதல் அல்லது திதி சூன்யம் தோஷம் அடைந்த ராசிகளில் லக்னாதிபதி அமர்ந்திருந்தாலும் உடல் ஊனம் ஏற்படும்.
பெற்றோரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட புத்திர தோஷம் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே ஏதாவது ஒருவிதத்தில் ஊனமுற்றதாகவே இருக்கும். பொருத்தம் பார்க்கும் போது புத்திர ஸ்தானமான 5வது இடத்தில் இருவருக்கும் பாவ கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து விடுவது சிறந்தது.
புத்திரகாரகன் புதன் மனை சென்றிட புத்திர சூன்யம் என்று செப்பிடு என ஜோதிடப் பாடல் கூறுகிறது. எனவே, புத்திரகாரகன் குரு, புதனின் வீடுகளாகிய மிதுனம், கன்னியில் அமர்ந்திருந்து, புத்திர ஸ்தானாதிபதியும் பலவீனமாக இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கர்ப்பகாலத்தில் தம்பதிகளுக்கு ஏழரைச் சனி நடந்தாலும், சனி தசை அல்லது கேது தசை அல்லது 6ஆம் அதிபதியின் தசை அல்லது 8க்கு உரியவரின் தசை அல்லது 6க்கு உரியவரின் புக்தி நடந்தாலும் குழந்தைகள் ஊனமுற்றதாகப் பிறக்கும்.
ஜோதிடத்தில் ஊனத்தை பொறுத்தவரை வெளி ஊனம், உள் ஊனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் வெளித்தோற்றத்தில் அழகாக, அத்தனை லட்சணங்களும் பொருந்தியவர்களாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள் ஊனம் இருக்கும். சில பெண்களுக்கு கர்பப்பை முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். சூரியன், சந்திரன் பலவீனமாக இருந்தால் இருதயத்தில் ஓட்டை ஏற்படும்.
பொதுவாக உள் ஊனம் ஏற்படுவதற்கு கர்ப்ப காலத்தில் உள்ள கிரக நிலைகள் (கோச்சார கிரகங்கள்) காரணமாகிறது. வெளி ஊனம் என்பது பெற்றோரின் ஜாதகத்தை பொறுத்து ஏற்படுகிறது.
சனி ஓரையில் கர்ப்பம் தரித்தல், அமாவாசை, கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையால் உருவாகும் கருவும் ஊனமுற்றதாக இருக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

1 comment: