Monday, February 14, 2011

மூர்க்கநாயனார்

மூர்க்கநாயனார் புராணம்

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

தொண்டைநாட்டிலே, திருவேற்காட்டிலே, வேளாளர் குலத்திலே தலைமைபெற்ற ஒருவர், தினந்தோறும் சிவனடியார்களை, சிவனென வணங்கித் துதித்துத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்பவரும், அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுப்பவருமாய் இருந்தார். இப்படியிருக்கு நாளிலே, அடியார்கள் அநேகர் எழுந்தருளி வருகின்றமையால் அவர் தம்மிடத்துள்ள திரவியங்களெல்லாஞ் செலவாகிவிட; அடிமை நிலம் முதலியனவற்றை விற்றும், மாகேசுரபூசையை வழுவாது மனமகிழ்ச்சியோடு செய்து வந்தார். அதன்பின், மாகேசுரபூசைச் செலவுக்குப் பொருள் இன்மையாற் கலவைகொண்டு, தம் முன்னே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க நினைந்து, அவ்வூரிலே சூதாடுவோர் இல்லாமை பற்றி அவ்வூரை அகன்று, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, சூதாடலால், வரும் பொருளினாலே தம்முடைய நியதியை முடித்து, சிலநாளிலே கும்பகோணத்தை அடைந்தார். அங்கே சூதாடிப் பொருள்தேடி மாகேசுரபூசை செய்தார். சூதிலே முதலாட்டத்திலே தாந்தோற்று, பின்னாட்டங்களிலே பல முறையும் வென்று, அதனாலே பொருள் ஆக்கி சூதிலே மறுத்தவர்களை உடைவாளை உருவிக்குத்தி, நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினாலே வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கள் கொள்ள; தாந்தீண்டார் அடியார்கள் திருவமுது செய்தபின் தாங்கடைப்பந்தியிலே அமுது செய்வாராயினார். இவர் இப்படிச் சிலகாலம் மாகேசுரபூசை செய்து கொண்டிருந்து, அந்த மகத்தாகிய சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.





No comments:

Post a Comment