Tuesday, February 15, 2011

இறைவன் எங்கு?

இறைவன் எங்கு
இறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலையத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பைகூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.

வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். தினமும் குளிக்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.
அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள் இருக்கிறது. அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.
இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.
ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி.
இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்..



No comments:

Post a Comment