Monday, February 7, 2011

சிவ சக்தி

சிவ சக்தி

சிவம் இல்லையெனில் சக்தி இல்லை, சக்தி இல்லையெனில் சிவம் இல்லை என்ற நம் கூற்றுக்கிணங்க, இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏன்! இவ்வுலகையும் கடந்து உள்ள அனைத்து அண்ட சராசரங்களும் இத்தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சிவசக்தி என்னும் கூற்றில் உள்ள சக்தியானது தன் ஆற்றலைச் சிவத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது. இவ்விரண்டும் தனித்தனியாக இயங்கயியலாது. இங்ஙனம் சக்தி பெரிது எனினும் அது தனித்து இயங்கினால் ஒரு வரைமுறையில்லாமல் தன் ஆற்றலை வெளிப்படுத்தும், ஆதலால் ஆபத்தையே விளைவிக்கும். சிவம் ஆனது சக்தியின்றி இயங்காது.
எனவே சக்தியின் ஆற்றல் பயனுள்ளதாகவும், சிவம் இயங்கவும் வேண்டுமென்றால் சக்தியானது சிவன் மூலமாகவே தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எவ்வுலகத்திலும் சக்தியின்றி எந்த ஒரு செயலும் இயங்காது. அச்சக்தி, சிவத்தின் மூலம் இயங்கி, சிவத்தையும் இயக்குகிறது.
இதையே சிவத்தினுள் எல்லாம் அடக்கம் (எல்லாம் சிவமயம்) என்பார்கள். சிவசக்தியை விளக்க வேண்டுமானால் நிறைய விசயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். விஞ்ஞானம் வழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சிவசக்தியைப் பற்றி நிறைய விளக்கலாம்.
ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் நியூட்ரான், புரோட்டான் என்ற இரு துகள்கள் உள்ளன. இதில் நியூட்ரான் சக்தியாகவும் புரோட்டான் சிவமாகவும் செயல்படுகின்றன. இங்கு நியூட்ரான் சக்தி மிக்கதாகவும் புரோட்டான் பாதுகாப்பு வளையமாகவும் உள்ளது. இவ்விரண்டும் சேர்ந்திருந்தால் பயனுள்ள சக்தியாக செயல்படுகிறது. இதில் நியூட்ரானைத் தனியாகப் பிரித்து எடுத்தால் அது அழிவுசக்தியாக மட்டுமே செயல்படும்.
புரோட்டான், நியூட்ரான் ஆகிய இவ்விரண்டுக்கும் வெளியே எலெக்ட்ரான் என்றழைக்கப்படும் பல துகள்கள் சுற்றிக் கொண்டிருக்கும். இவற்றை மனித சமூகத்துக்கு இணையாகக் கொள்ளலாம். எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இம்மூன்று துகள்களைப் பொறுத்தும்தான் அணுவின் செயல்பாடு அமைந்திருக்கிறது. அது போல, சமூகம், சிவம், சக்தி என்று மூன்று அம்சங்களின் அடிப்படையில்தான் இவ்வுலகின் செயல்பாடு அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment