Tuesday, February 22, 2011

துருவன் கதை


துருவன் கதை
'உத்தான பாதருக்கு ஸுருசி என்று இரு மனைவியர். ஸுநீதிக்கு துருவன் என்று ஒரு மகனும், ஸுருசிக்கு உத்தமன் என்று ஒரு மகனும் இருந்தனர். உத்தானபாதருக்கு தனது மனைவிகளில் ஸுருசியின் மேலும் மகன்களில் உத்தமன் மேலும் அதிக பாசம். ஒரு நாள் உத்தானபாதரும் ஸுருசியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது உத்தமன் தன் தகப்பனார் மடியில் அமர்ந்து கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் குழந்தை துருவன் அங்கு வந்தான். ஆசையாக அப்பாவின் மடிமேல் அமர்ந்து உத்தமன் போல் தானும் விளையாட நினைத்தான்.
அப்பாவின் மடியில் அமரமுயன்ற துருவனை ஸுருசி தடுத்து, 'நீ என் வயிற்றில் பிறக்காததால் அவர் மடியில் உட்கார உனக்குத் தகுதி இல்லை. நீயும் உனது தகப்பனாரின் மடியில் அமர்ந்து கொஞ்ச வேண்டுமென்றால் நீ என் வயிற்றில் பிறக்க வேண்டும். எனவே காட்டுக்குப் போய், என் வயிற்றில் பிறக்க வேண்டும் என நாராயணனை நோக்கிக் கடுந்தவம் செய். அப்படிச் செய்து ஆசிபெற்று என் வயிற்றில் பிறந்தாய் என்றால்தான் அவர் மடியில் அமரலாம்' எனக் கடுமையாகக் கூறி ஐந்து வயது இளம் குழந்தையான துருவனைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டாள்.
உத்தானபாதரும் இதற்கு உடன்பாடாகப் பேசினார். இதனால் மிகவும் வருத்தப்பட்ட துருவன் தனது தாயாரிடம் சென்று 'ஓ' என்று அழுதுகொண்டே நடந்ததைக் கூறினான். அதற்கு ஸுநீதி 'குழந்தாய்! நீ என் வயிற்றில் பிறந்தது துரதிருஷ்டமே உன் சித்தி கூறியபடி தவம் செய்' என்று கூறி துருவனை சமாதானம் செய்து ஆசி வழங்கி அனுப்பினார்.
துருவன் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த பொழுதிலும், ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் செய்ய உறுதியுடன் கானகம் சென்றான். கானகம் செல்லும் வழியில் நாரத மகரிஷி துருவனை சந்தித்து, விவரங்களை அறிந்தார்.
துருவனை அன்பொழுக அரவணைத்துக் கொண்டு நாரதர், 'குழந்தாய்! நீ மிகச் சிறுவயது பாலகன். கானகத்தில் தவம் செய்வது மிகக் கடினம். குழந்தைகள் புகழ்ச்சி, இகழ்ச்சி என்றெல்லாம் பார்க்கக்கூடாது. எனவே, நீ திரும்பவும் உன் வீட்டிற்குச் சென்று சமத்தான பையனாக இரு' என்று அறிவுறுத்தினார்.
ஆனால் குழந்தை சிறுவன் அசரவில்லை. ஓநீங்கள் முக்காலும் அறிந்த முனிவர். நீங்கள் இப்படிச் சொல்லலாமா? நான் கானகம் சென்று கடுந்தவம் செய்வது என்று உறுதி பூண்டுள்ளேன். இந்த வைராக்கியம் நிலைத்து நின்று நான் தவவேள்வியில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துங்கள்ஔ எனக்கூறிப் பணிந்தான்.
பிரம்மரிஷிக்கு மிகவும் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. அவர் துருவனை அரவணைத்து 'குழந்தாய்! ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் செய்யும்பொழுது 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மகாமந்திரத்தை ஜெபி. எல்லா தேவர்களும் உனக்குப் புலப்படுவார்கள். ஸ்ரீமன் நாராயணனே உன்முன் தோன்றி நீ வேண்டிய வரம் அருள்வார்ஔ என்று கூறி ஆசீர்வதித்தார்.
கானகம் சென்ற துருவன் தவம் மேற்கொண்டான். மனதை ஒருமுகப்படுத்தி, தன் இதயக்கமலத்தில் சங்கு சக்கர கதாபாணியான ஸ்ரீமன் நாராயணனின் அழகு உருவத்தை வீற்றிருக்கச் செய்து அருந்தவம் செய்தான். இந்தக் கடுந்தவத்தால் அகில உலகமே ஸ்தம்பித்துவிட்டது.
தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டனர். கருணைக்கடலான ஸ்ரீமன் நாராயணன், தேவர்கள் புடைசூழ துருவன் முன் தோன்றினார். துருவனின் உள்ளத்தில் இருந்த ஸ்ரீமன் நாராயணனின் திருவுருவம் திடீரென்று மறைந்துவிடவே, தன் கண் முன் ஸ்ரீமன் நாராயணன் எழுந்தருளி இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
'பிரபோ! இந்த உலகத்தில் இருக்கும் எல்லா சரீரங்களுக்குள்ளும் மூச்சுக் காற்றாகப் புகுந்து, அவற்றில் இச்சாசக்தி, கிரியாசக்திகளாக மாறி அந்த தேகங்களை உயிரோட்டமுள்ளதாகச் செய்யும் மூலசக்தியாக விளங்கும் ஆதிமூலமே! எல்லா உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும் மும்மூர்த்திகளுக்கும் ஒருமூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே! ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்தமூர்த்தியே உன்னைச் சரண் அடைகிறேன்ஔ என்று பலவாறாகப் போற்றினான்.
ஸ்ரீமன் நாராயணன், துருவனை ஆசீர் வதித்து, 'நீ உன் தாய் தகப்பனிடம் செல், அவர்கள் உன்னை அன்புடன் வரவேற்பார்கள். உன் தந்தையின் ராஜ்ய பாரத்தை ஏற்று நல்லாட்சி நடத்து. அதன் பிறகு எல்லா விண்மீன்களும் சுற்றிவரும் துருவ நட்சத்திரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் விண்ணில் நீ பிரகாசிப்பாய்' என்று அருள் பாலித்தார்.
இதற்கிடையில், வனத்திற்குப் போகும் வழியில் துருவனைச் சந்தித்து, ஆசியும் தவநெறி முறைகளையும் அவனுக்கு வழங்கிய நாரத முனிவர், உத்தானபாதரைச் சந்திக்கச் சென்றார். மகாராஜா உத்தானபாதர், தன்னுடைய மனைவியின் மேலுள்ள அதிகமான பாசத்தால் மதிமயங்கி ஐந்து வயது பாலகனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டோ மே என்று மிக வருத்தத்துடன் இருந்தார்.
நாரதமுனிவரை வரவேற்ற உத்தானபாதரும் அவர் மனைவிகளும் அவர்கள் செய்த தவறைக் கூறி 'மாமுனிவரே! நீங்கள்தான் எங்கள் துயரைத் துடைக்க வேண்டும்' என்று வேண்டினர்.
நாரதமுனிவர் அவர்களைச் சமாதானப்படுத்தி, 'உங்கள் புத்திரனுக்குச் சிறுவயதாக இருப்பினும் இதுவரை யாருமே செய்யாத கடுந் தவம் செய்ய முனைந்திருக்கிறான். யாருமே பெறாத பெரும்பேரைப் பெற்று உங்கள் குலத்தை விளங்கச் செய்வான். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறி ஆசீர்வதித்துச் சென்றார்.
ஸ்ரீமன் நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்ட துருவன், தனது அரண்மனைக்கு வந்து பெற்றோர்களை வணங்கி ஆசிபெற்றான். சிலகாலம் சென்றபின் தகுந்த மனைவியைக் கைப்பிடித்து உத்கலன் முதலிய சிறந்த மக்களைப் பெற்றுத் தன் தகப்பனாருக்குப் பிறகு இராஜ்யத்தை நல்ல முறையில் அரசாண்டு வந்தார்.



No comments:

Post a Comment