Saturday, February 5, 2011

இதுதான் வாழ்க்கை… இதுதான் உலகம்

இதுதான் வாழ்க்கை… இதுதான் உலகம்
நான் பார்த்தவரை உலகத்தில் உள்ள அத்தனை பேரும் மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்பும் கேள்வி இதுதான். “ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறான்” இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் புத்தமதத்தில் கூறப்படுகின்ற ஓர் சின்னக் கதையை அவர்களிடம் சொல்லுவது வழக்கம்.
அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையடப் போகிறான். அப்போது “என்னைக் காப்பாற்று, காப்பாற்று” என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கத்துகின்றது.
”உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய், நான் மாட்டேன்” என்று முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை ”நான் உன்னை சத்தியமாகச் சாப்பிடமாட்டேன், என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகின்றது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கின்றான்.
வலையில் இருந்த முதலையின் தலை வெளிப்பட்ட உடனேயே அது சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. ”பாவி முதலையே இது நியாயமா?” என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க ”அதற்கென்ன செய்வது, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.சிறுவனுக்கு சாவதைப் பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால் நன்றி கெட்டத் தனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முதலையின் வாய்க்குள் மெல்லப் போய்கொண்டிருக்கும் சிறுவன் மரத்தில் இருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் ”முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகமா?, இதுதான் வாழ்க்கையா?”அதற்குப் பறவைகள் “எவ்வளவோ பாதுகாப்பாக, மரத்தின் உச்சியில் கூடு கட்டு முட்டையிடுகின்றோம், ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்று விடுகின்றன. அதனால்தான் சொல்கின்றோம் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம், முதலை சொல்வதுதான் சரி”.
ஏரிக்கரையில் மேய்ந்துகொண்டுருக்கும் கழுதையைப் பார்த்துச் சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான் ”நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான்.
இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது” என்று முயல் சொல்ல, முதலைக்குக் கோபம் வந்து விட்டது.
சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ”ஆஹா வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை” என்றது முயல்.
பெரிதாகச் சிரித்த முதலை “நான் முட்டாள் இல்லை. சிறுவனை விட்டால் ஓடி விடுவான்” என்று சொல்ல முயல் “புத்தி இல்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே”. என்று நினைவுபடுத்த… முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து ”நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த..” சிறுவன் ஓடுகிறான்.
முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியத, அதன் நினைவுக்கு வந்தது !
சிறுவன் தப்பி ஓடிவிட்டான் .அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது – ”புரிந்ததா… இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !”
சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர… அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள்.
அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..
சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.



No comments:

Post a Comment