Monday, February 7, 2011

எல்லாப் பொருளும் இறைவனுக்கே

எல்லாப் பொருளும் இறைவனுக்கே
உலகம் எனும் வீட்டில், வாடகைக்கு குடியிருக்கவே நாம் வந்துள்ளோம். இங்குள்ள பொருட்களில், நமக்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்; இறைவனுக்கு கொடுக்க வேண்டியதில், முறைப்படி அவனுக்கு அர்ப்பணித்த பிறகு வேண்டுமானால், எடுத்துக் கொள்ளலாம். ஆக, இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அத்தனை பொருட்களும், இறைவனுக்கே உரியது என்ற தத்துவத்தையே கழற்சிங்கர் என்ற மன்னரின் வரலாறு உணர்த்துகிறது. அவரது குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில் நடத்தப்படும்.
பல்லவ நாட்டை ஆண்ட கழற்சிங்கருக்கு, அழகே வடிவான பட்டத்தரசி இருந்தாள். சிவபக்தரான கழற்சிங்கருக்கு, திருவாரூர் தியாகராஜப் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வெகுநாளாக இருந்தது; அந்த ஆசை, ஒருநாள் நிறைவேறியது. மன்னர் தன் ராணியுடனும், படை பரிவாரங்களுடனும் திருவாரூருக்கு வந்தார். அங் குள்ள புற்றிடங்கொண்டார் சன்னதிக்குச் சென்று, இறைவனை மனதார வணங்கினார். தியாகராஜர் சன்னதிக்குச் சென்று, தன் ஆசையை நிறைவேற்றி வைத்தமைக்காக நன்றி சொன்னார்.
திருவாரூர் கோவில் அளவில் மிகப்பெரியது. அந்தக் கோவில் முழுமையும் சுற்றிப் பார்க்க ஆசை கொண்டாள் ராணி. தன் தோழியருடன் அவள் சன்னதிகளைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில், சிவப்பழமாய் அமர்ந்திருந்த தொண்டர்கள் பலர், சுவாமிகளுக்கு மலர் மாலை தொடுத்துக் கொண்டிருந்தனர். மிகுந்த பயபக்தியுடன், “ஓம் நமசிவாய, சிவாயநம’ என்ற நாமங்களைச் சொல்லியபடி, பூ கட்டிக் கொண்டிருந்த அவர்கள் இருக்குமிடத்தை ராணி அடைந்தாள்.
மலர்களின் மணம் ராணியை மிகவும் கவர்ந்தது. அங்கு கிடந்த மலர் ஒன்றை எடுத்து, முகர்ந்து பார்த்தாள். அவ்வளவு தான்! மாலை கட்டிக் கொண்டிருந்த ஒருவர், ஆவேசமாக எழுந்தார்.
“ஏ பெண்ணே… உனக்கு அறிவிருக்கிறதா? இறைவனுக்கு தொடுக்கும் மலர்களை முகர்ந்து பார்க்கக் கூடாது என்ற சாதாரண விஷயம் கூடவா உனக்குத் தெரியாது! நீ எப்படி நாடாளும் ராஜாவுக்கு மனைவியாக இருக்க முடியும்?’ என்று ஆத்திரத்துடன் சொன்னதுடன், கத்தியால், அவளது மூக்கை சீவி விட்டார். அவரது பெயர் செருத்துணையார்; மிகத்தீவிரமான சிவபக்தர்.
அலறித் துடித்தாள் ராணி. கோவிலின் இன்னொரு பகுதியில் நின்ற ராஜாவுக்கு விஷயம் தெரியவந்தது. அவர் வாளை உருவியபடி, மலர் கட்டுமிடத்திற்கு வந்தார். வலி தாங்காமல், கீழே விழுந்து புரண்டு கொண்டிருந்தாள் ராணி. தோழிகள் செய்வதறியாது ஓலமிட்டனர்.
என்ன நடந்தது என்பதை மூக்கை வெட்டிய செருத்துணையாரிடமே கேட்டார் கழற்சிங்கர். அவர் நடந்ததைச் சொன்னதும், “அப்படியா… எம்பெருமானுக்குரிய பொருளை அவருக்கு படைக்கும் முன் பயன்படுத்திய இவளுக்கு இந்த தண்டனை போதாது…’ என்றவர், வாளால் அவளது கையையும் வெட்டிவிட்டார்.

அப்போது வானில் ஒளி பிறந்தது. பார்வதியுடன், சிவபெருமான் காட்சி தந்தார். அவர்களது பக்தியின் பெருமையை வெளிப்படுத்தவே, இவ்வாறு திருவிளையாடல் புரிந்ததாகச் சொன்னார். ராணியும் ஏதும் நடக்காதவள் போல் எழுந்தாள்.
இந்த நிகழ்ச்சி மூலம் எல்லாப் பொருளும் இறைவனுக்குத்தான் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தப் பொருளாயினும், முதலில் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டோ, அதை நமக்கு தந்த அவனுக்கு நன்றி சொல்லி விட்டோ பயன்படுத்த, இந்த நன்னாள் முதல் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வோம்.

No comments:

Post a Comment