Tuesday, February 8, 2011

தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.
அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.
கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.



No comments:

Post a Comment