Thursday, February 3, 2011

பிரார்த்தனையின் மகத்துவம்


பிரார்த்தனையின் மகத்துவம்
பிரார்த்தனையின் மகத்துவம் அதன் நீளத்திலோ, காலத்திலோ இல்லை. மணிக்கணக்கில் செய்யும் பிரார்த்தனை வெறும் வார்த்தை ஜாலமாக இருந்து விடுவதுண்டு. 'நான் தினமும் அரைமணி நேரம் பிரார்த்தனை செய்வேன்' என்று பிடிவாதமாக பூஜையறையில் உட்கார்ந்து கொண்டு மனதை மட்டும் ஊர்சுற்ற அனுப்பி விடுவதுண்டு. நமக்குத் தேவையென நினைப்பவற்றின் பட்டியலாக நீள்வதுண்டு (அப்புறம் முக்கியமானதை விட்டு விட்டால் என்ன செய்வது?). அப்படியும் எதை எதையோ கேட்டு மிக முக்கியமானதைக் கேட்க மறந்து விடுவதுண்டு.
ஆனால் வாழ்வில் எல்லா சிறப்புகளையும் பெறத் தேவையான ஒரு சிறிய பொருள் பொதிந்த பிரார்த்தனை உண்டு. உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்ட இது "சாந்தி மந்திரம்" என அழைக்கப்படுகிறது. இது மனிதன் மகத்தான, உபயோகமான மாமனிதனாக வாழத் தேவையான அம்சங்களை பரம்பொருளிடம் வேண்டுகிறது.
அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோ மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(உண்மை அல்லாதவற்றில் இருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக
இருட்டில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக
அழிவில் இருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச் செல்வாயாக
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: )

அஸதோ மா ஸத் கமய
தற்கால மனிதன் உண்மை, பொய் இரண்டையும் பகுத்தறியும் திறன் பெற்றிருந்தாலும் அந்தத் திறமையைப் பயன்படுத்த பெரிதாக முயற்சி எடுத்துக் கொள்வதில்லை என்பதை சமூகத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குப் புரியும். உண்மை எதுவென அறிவதில் அவன் காட்டும் அலட்சியம் தான் எத்தனையோ தீமைகளுக்கு அஸ்திவாரமாக உள்ளது.
அடுத்தவர்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்து உண்மையா இல்லையா என்று பெரும்பாலும் நாம் ஆராயப் போவதில்லை. கேள்விப்பட்டதையும், படித்தவற்றையும் அடுத்தவரிடம் சொல்வதற்கு முன் உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நம் மனதினுள்ளும், நாம் வெளியே தெரிவிப்பதிலும் பொய்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றை நம்பவும் ஆரம்பித்து செயல்படும் போது விளையும் அனர்த்தங்களுக்கு அளவேயில்லை.
மேலும் பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு நடக்கும் எதுவும் நீண்டகால நற்பலனைத் தருவதில்லை. எனவே இந்தப் பிரார்த்தனையின் முதல் வரி மிகவும் பொருள் பொதிந்தது. ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உண்மையில்லாததை அகற்றி உண்மைக்கு முக்கியத்துவம் தர உறுதி பூணுவோம். நம் கவனமும், வாழ்க்கையும் உண்மையை நோக்கி செல்வதாக இருக்கட்டும்.

தமஸோ மா ஜ்யோதிர் கமய
அறியாமை, மூடநம்பிக்கை, வெறுப்பு, பொறாமை, பயம் எல்லாமே வாழ்க்கையில் பேரிருட்டை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தான் இன்றைய உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம், வசதிகள் அதிகரித்திருந்தும் தனிமனித வாழ்க்கையில் பெரும்பாலும் இருள் மண்டியே கிடக்கிறது. ஏதோ ஒரு இருட்டில் அழுந்திப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த இருட்டில் இருந்து மீண்டு தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை என்ற ஒளிபடைத்த, அறிவார்ந்த வாழ்க்கை வாழ ஒவ்வொரு தினமும் பிரார்த்தனை செய்வோம். மேலே சொன்ன இருள்கள் நம்மை நெருங்கும் போதெல்லாம் அவற்றை விரட்டும் கவசமாக இந்தப் பிரார்த்தனை நம் மனதில் இருக்கட்டும்.
ம்ருத்யோ மா அம்ருதம் கமய
நமது சொல்லும் செயலும் அழிக்கும் விஷமாக இருக்கிறதா, இல்லை உயிரூட்டி நிறுத்தும் அமிர்தமாக இருக்கிறதா? தீமையையும், வெறுப்பையும் உண்டாக்குகையில் அவை அழிவை ஏற்படுத்தும் விஷமாகிறது. நன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்படி அவை இருக்கையில் அவை நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் அமிர்தமாகிறது.
இந்த இரண்டையும் செய்யும் சக்தி நம்மிடம் இருக்கிறது. பெரும்பாலானோர் மாறி மாறி நம் மனநிலைக்கேற்ப இரண்டையும் செய்கிறோம். ஆனால் ஆக்குவதில் தான் சிறப்பு இருக்கிறது, அழிப்பதில் இல்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக நம்மை நடத்த அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்போம். அழிவுபூர்வமான பாதையை மூடி வைப்போம்.
ஒவ்வொரு நாளையும் இந்தச் சிறிய பிரார்த்தனையுடன் ஆரம்பிப்போம். காலை, மதியம், மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் இந்தப் பிரார்த்தனை செய்து நம்மை நிலைப்படுத்திக் கொள்வோம். உண்மை, ஒளி, ஆக்கம் ஆகியவற்றை நோக்கியே நம் சிந்தனை சொல், செயல் எல்லாம் இருக்கட்டும். இனிமையான சூழல்களில் மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் அப்படியே வாழ இறைவன் நமக்கு உறுதுணையாக இருப்பானாக!


அஸதோ மா ஸத் கமய


தமஸோ மா ஜ்யோதிர் கமய


ம்ருத்யோ மா அம்ருதம் கமய


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


No comments:

Post a Comment