Friday, February 11, 2011

சைவ நாற்பாதங்கள்

சைவ நாற்பாதங்கள்
சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாக சைவ சமயம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு மார்க்கங்களுமாகும்.
நாம் மனிதப் பிறவி எய்தியதன் நோக்கம், இறைவன் நமக்குக் கொடுத்தருளிய உடம்பு, அறிகருவிகள், உலகம், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு, இறைபணி நின்று, முத்தி அடைவதே ஆகும். முத்தியடைவதற்கு மெய்யுணர்வாகிய ஞானத்தைப் பெறுதல் வேண்டும். அந்த ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனமாகச் சரியை, கிரியை, யோகம் என்பவற்றைச் சைவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டும் சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் எனத் தனித்தனியே நான்கு பாதங்களை உடையன. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் நாம் இறைவனை அடைவதற்குரிய சாதனங்களாதால் இவை சைவ சாதனங்கள் என்றுஞ் சொல்லப்படும். நம் புற வாழ்வையும் அக வாழ்வையும் நெறிப்படுத்தி, ஈற்றில் வீடுபேற்றைத் தரும் சாதனங்களே இவை. ஆகவே இவற்றிடையே ஏற்றத்தாழ்வு கூறுமுடியாது.
முத்தியில் நாட்டமுடையவர்கள் இவற்றுள் எதனைப் பின்பற்றி ஒழுகினாலும் அது முடிவிலே ஞானத்துக்கு இட்டுச் சென்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பரமுத்தியை நல்கியே விடும். ஞானத்தை நாம் ஒரு கனிக்கு ஒப்பிட்டால், சரியையை அரும்பு என்றும், கிரியையை மலர் என்றும், யோகத்தைக் காய் என்றும் கூறலாம். அரும்பாகத் தோன்றியது, இடையூறு ஒன்றுமில்லாது விட்டால் அது படிப்படியாக வளர்ச்சியடைந்து கனியாக மறுவது இயல்பு. அது போலவே சரியை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள், அவமரணம் போன்ற இடையூறுகள் நேராவிட்டால் படிப்படியாக பக்குவம் முதிர்ந்து, ஞானத்தை அடைந்து முடிவிலே மேலான வீடுபேற்றை அடைவது உறுதி.
இவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கு மார்க்கங்களாக அடியார்களால் அனுசரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் விரிவடைந்து பதினாறுபடிகளாய் அமையும். இப்படிகள் ஒவ்வொன்றும் உபாய மார்க்கம், உண்மை மார்க்கம் என இவ்விரண்டாக நோக்க முப்பத்திரண்டாகக் கொள்ளப்படுகிறது.
உபாய மார்க்கம் என்பது உலக வாழ்வில் நின்றபடி இறையருளை வேண்டி ஏதாவது வழிமுறையைப் பின்பற்றி ஒழுகுதலாகும். உண்மை மார்க்கம் என்பது உலகப்பற்றை மெல்ல மெல்ல விட்டவர்கள் அம்மார்க்கங்களிலேயே தமக்கேற்ற ஒரு வழியைப் பின்பற்றி இறையருளை நாடி நின்று வேறு பயன் கருதாது ஒழுகுதலாகும். இவ்வாறான மார்க்கங்களில் நின்று ஒழுகிய பெரியார் சரிதைகளைப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

சரியை

சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்

அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்

பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி

தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.
 சரியைத் தொண்டுகள்
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.
கிரியை

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்
திருஞானசம்பந்த நாயனார், சண்டேஸ்வர நாயனார்.

யோகம்
யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவாறே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்தமுடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.


யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
 கிரியைநெறியில் நின்று முத்திபெற்வர்கள்
திருமூலர், பெருமிழைலைக்குறும்பர், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் இந்நெறியில் நின்று முத்திபெற்றோராவர்.


ஞானம்
ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய

பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்

குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்

தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.
ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை 'சீவன் முத்தி்' எனப்படும். 'சீவன்முத்தர்' உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.
நம்முடைய சமய குரவர்களுள் மாணிக்கவாசகர் ஞானமார்க்கத்தில் நின்று பரமுத்தி பெற்றவர். அவர் சீவன்முத்தராய் இருந்த நிலையில் தாம் பெற்ற அனுபவத்தைச் 'சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்' என்று தமது ஞானகுருவைப் புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசு நாயனார் ஞானநெறியில் தாம் பெற்ற அனுபவத்தைப் பாடியுள்ளதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்
உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
 கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.










No comments:

Post a Comment