Monday, February 14, 2011

குலச்சிறைநாயனார்

குலச்சிறைநாயனார் புராணம்


கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்
குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி
மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி
காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற
கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று
நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களை, உயர்குலம் இழிகுலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல் வணங்கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர்கூடி வரினும், ஒருவர் வரினும், அன்பினோடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்றவர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மந்திரியாராயினவர். அந்தப்பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்திநாயனாராலே திருத்தொண்டத்தொகையிலே "பெருநம்பி" என்று வியந்துரைக்கப்பட்டவர்.



No comments:

Post a Comment