Saturday, February 5, 2011

ராமநாமா மகிமை

ராமநாமா மகிமை

ராம, ராம, ராம’ என ஜெபித்தாலே போதும்; எல்லா புண்ணியங்களும் கிடைத்து, முக்தியையும் அளிக்கும் என்று கூறுவர்.
ஒரு சின்ன கதை… காசியிலே ஒரு வணிகன் இருந்தான். அவன் கர்ம வியாதியால் பீடிக்கப்பட்டு, மிகவும் துன்பப்பட்டான். அவனால் தாங்க முடியவில்லை. யார், யாரெல்லாமோ சொன்ன வைத்தியமெல்லாம் செய்து பார்த்தும் கூட வியாதி தீரவில்லை. இனி இருந்து என்ன பயன் என்று மனம் வெதும்பி, கங்கையில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கங்கை கரைக்கு வந்தான். யாராவது பார்த்துவிடப் போகின்றனரோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். இந்த நோயாளியை சிலர் பார்த்து விட்டு அருகே வந்து நின்றனர். அந்தத் துறையில் ஜெப தபம் செய்து கொண்டிருந்தார் பத்மநாபர் என்ற மகான். இவர் கபீர்தாசரிடம் ராம மந்திர உபதேசம் பெற்றவர். தினமும் கங்கையில் நீராடி, ராம நாம மகிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்வார். அந்த நோயாளி அருகில் நின்ற மக்களை பார்த்ததும், என்னவென்று விசாரிக்க அங்கே வந்தார். “என்ன விசேஷம்?’ என்று கேட்டார். நோயாளியும் தன் நோயைப் பற்றி சொல்லி, “என்னால் தாங்க முடியவில்லை; அதனால், கங்கையில் விழுந்து விடலாமென்று வந்தேன்…’ என்று சொன்னான்.
அவனை சமாதானப்படுத்தி, “அய்யா… மானிடப் பிறவி கிடைப்பது அரிது. ஏதோ புண்ணிய வசத்தால் உனக்கு அது கிடைத்துள்ளது. நீயும் ஏதோ புண்ணியம் செய்திருப்பாய்; இனியும் செய்யலாம். ஏதோ கர்ம வினையால் இந்த நோயால் அவதிப்படுகிறாய். கர்மவினை தீர்ந்தால் நோயும் குணமாகும். “ஆகவே, தற்கொலை என்பது வியாதிக்கு மருந்தாகாது. அது மேலும் பாவத்தையே தரும். நான் ஒரு திவ்ய சவுடிதம் தருகிறேன்; உன் நோய் விலகி விடும்…’ என்றார் பத்மநாபர்.
வணிகனும் சற்று சிந்தித்து பார்த்தான். “ஏதோ சவுடிதம் என்கிறாரே… அதுவும் செலவில்லாமல் கிடைக்கிறதே… அதையும் பார்த்து விடலாமே…’ என்று எண்ணினான். கங்கையில் நீராடி, அவனிடம் வந்து, “அய்யா… இந்த காசி நகரம் புண்ணிய பூமி! நீ செய்த புண்ணியம் இங்கு வந்து பிறந்திருக்கிறாய். ஸ்ரீராம தாரக மந்திரத்தை இங்கு மரணமடைபவர்களது செவியில் உபதேசம் செய்கிறான் காசி விசுவநாதன். அவர்கள் முக்தியடைகின்றனர். ஆகவே, நீயும் இந்த ராம நாமத்தை மூன்று முறை சொல்லி, கங்கா தேவியை தியானித்து, கங்கையில் நீராடினால், உன் நோய் நீங்கிவிடும்…’ என்று சொல்லி, ராம நாமத்தை உபதேசம் செய்தார் பத்மநாபர். வணிகனும் அதை ஏற்று, மெல்ல நடந்து கங்கையில் இறங்கி கங்கையை பிரார்த்தித்து, நீரில் மூழ்கி ராம நாமாவை ஜெபித்து எழுந்தான். என்ன ஆச்சரியம்! அவனது கை, கால்கள் சுவாதீனமாகி விட்டன. எவ்வித சிரமும் இன்றி கரையேறி வந்தான். அவனது உடலில் இருந்த நோய், இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் இந்த அற்புதத்தை கண்டு வியந்தனர். “ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே!’ என்று கோஷம் எழுப்பினர்.
இந்த சம்பவத்தை சிலர் ஓடிச்சென்று கபீர்தாசரிடம் கூறினார். கண்களில் நீர்வழிய, “ராம நாம மகிமையை யாரால் அளவிட்டுக் கூற முடியும்? அது உடற்பிணியை மட்டுமல்லாது, பிறவிப் பிணியையே போக்கி விடுமே! ஒருமுறை சொன்னாலே போதுமே! பத்மநாபர் ஏன் மூன்று முறை சொல்லச் சொன்னார் என்பது புரியவில்லையே…’ என்று நினைத்தார் கபீர்தாசர். இதற்குள் பத்மநாபரே அங்கு வந்து கபீர்தாசரை வணங்கினார். “பத்மநாபரே… ராம நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலே போதுமே! ஏன் மூன்று முறை உச்சரிக்க சொன்னாய்? இதில் ஏதும் காரணம் உள்ளதோ?’ என்று கேட்டார் கபீர்.
“சுவாமி… அந்த வணிகன் இதுநாள் வரையில் காசியில் இருந்தும் கூட ஒரு நல்ல குருவை அண்டி உபதேசம் பெறாத குற்றம் போக ஒருமுறையும், அவனது நோய் நீங்க ஒரு முறையும், அவன் ஞானம் பெற்று, பிறவிப்பிணி நீங்க ஒருமுறையுமாக, மூன்று முறை உச்சரிக்க சொன்னேன். “இப்படியாக மூன்று முறை சொன்னதால் ஆகாமிய, பிராப்த, சஞ்சித கர்மாக்களாகிய மூன்று வகையான கர்மங்களும் தொலைகிறது என்பது அடியேனுடைய எண்ணம்!’ என்றார். குறை நீங்கி ஞானம் பெற்று, ராம நாம ஜெபத்தில் ஈடுபடலானான் வணிகன். கபீர்தாசரும், பத்மநாபரும் ராம நாம மகிமையை மனமார புகழ்ந்து பாடிக் கொண்டே சென்றனர். ராமநாமாவை சொன்னாலே புண்ணியம்.

No comments:

Post a Comment