Monday, February 7, 2011

கடவுள் தத்துவம்

கடவுள் தத்துவம் கடவுள் என்பது யார்? `ஜன்மாத்யஸ்ய யத: - யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ' அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக `ஸ ஈச்வர:, அநிர் வசனீய ப்ரேம ஸ்வரூப:- அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்'.
இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை. அப்பாயானால் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்களா? தத்துவ ஞானியின் `இதுவல்ல, இதுவல்ல' என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா? இல்லை. சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும். நிர்க்குணமும் சகுணமும் ஒருவரே. பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரம்மத்திலிருந்து வேறானவரோ, வேறுபாடு உள்ளவரோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
எல்லாமே இரண்டற்ற ஒன்றேயான பிரம்மம்தான். ஒருமையாகவும் தனிமையாகவும் உள்ள பிரம்மம், மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியமாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரம்மத்தை, குணங்களோடு கூடிய நிலையில் அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய இறைவனாகக் கொள்கிறான்.
இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொருளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. களி மண்ணாகப் பார்க்கும் போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத் தோற்றத்தில் அவை பல்வேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றா நிலையில் மண்ணில் இருக்கவே செய்தன.
மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து நிற்கும்வரை அவை தனித்தன்மை கொண்டவை, வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒரு நாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களி மண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றுதான். அது போன்றே அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப் பற்றி மனித மனத்தினால் உணர முடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே.

No comments:

Post a Comment