Tuesday, March 1, 2011

ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?

ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?ஜோதிடத்தைப் பொறுத்தவரை 5ஆம் இடம் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். அதனை பிரதானமாக வைத்துதான் கஷ்ட நஷ்டங்களை சந்திப்பது, வாழ்க்கையில் முன்னேறுவது, மேன்மையடைவது உள்ளிட்டவற்றை கணிக்கிறோம்.
தாய்மாமன் உறவு வகையைக் குறிப்பதும் இந்த 5ஆம் இடம்தான். 5ல் ராகு, செவ்வாய், சனி உள்ளிட்ட கிரகங்கள் இடம் பெற்றிருந்தால் ஆழமான சிந்தனைகளை அவர்களால் தேக்கி வைக்க முடியாது. படித்த கருத்துகளை சீக்கிரமே மறந்து விடுவர். நினைவாற்றல் குறைவாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் பாவகிரகங்களால் பார்க்கப்படாமல் நன்றாக இருந்து, ஐந்துக்கு உரியவனும் நன்றாக இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் 5இல் இருநதால் பழிவாங்கும் குணம் மேலோங்கும். யாரால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் காத்திருந்து பழிவாங்கும் நிகழ்வுகளும் 5இல் உள்ள செவ்வாய் காரணமாக நிகழும். 5இல் சூரியன் இருந்தால் அரசு அதிகாரிகளைப் பகைத்துக் கொள்வார்.
ஐந்தாம் இடம்தான் குழந்தை ஸ்தானமாகவும் கொள்ளப்படுகிறது. 5இல் பாவ கிரகங்கள் இருந்து, ஐந்துக்கு உரியவனும் பாவிகளுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு குழந்தை இருக்காது. ‘சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்ததியாகப் பிறக்கும்’ என்று கூறுவது கூட ஐந்தாம் இடத்தைக் குறிப்பதுதான் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சில ஜாதகங்களை மேலோட்டமாகப் பார்த்தால் பிரம்மாண்டமான ஜாதகம் என்று கூறத் தோன்றும். ஆனால் 5ஆம் இடத்திற்கு உரிய கிரகம் மோசமான நிலையில் இருக்கும். இது போன்று இருக்கும் போது சிறப்பான வளர்ச்சியை அந்த ஜாதகர் எதிர்பார்க்க முடியாது.
பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் எல்லாம் சிறப்பாக உள்ளனர். ஆனால் இவர்தான் முன்னேற முடியாமல் தவிக்கிறார் என்று சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு காரணம் 5ஆம் இடம் சிறப்பாக இல்லாததே. எனவே, 5ஆம் இடம் கெட்டுப் போகாமல் சிறப்பாக இருந்தால் எதிலும் வெற்றி கிட்டும்.
சொந்தத்தில் பெண் அமைவது: ஒரு சிலருக்கு 5ஆம் இடத்திற்கு உரிய கிரகம் ஐந்திலேயே ஆட்சி பெற்றிருப்பார். அந்த ஜாதகருக்கு அலையாமல் திருமணம் முடியும். அதாவது சொந்தத்திலேயே பெண் கிடைக்கும். அப்படி சொந்தத்தில் இல்லாவிட்டாலும், அவர்கள் பார்க்கும் முதல் ஜாதகமே வாழ்க்கைத் துணையாக அமையும்.

No comments:

Post a Comment