Tuesday, March 1, 2011

ராகு, கேது பரிகார பூஜையை அமாவாசை தினத்தன்று செய்யலாமா?

 ராகு, கேது பரிகார பூஜையை அமாவாசை தினத்தன்று செய்யலாமா? அமாவாசை திதியைப் பற்றி நாம் பலமுறை விரிவாக விவாதித்துள்ளோம். மாதுர்க்காரகன் (சந்திரன்), பிதுர்க்காரகன் (சூரியன்) ஆகிய இருவரும் ஒரே நேர்க்கோட்டில் இணையக் கூடிய நாளே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதனை அறிவியலும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதேபோல் கிரகங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் சூரியன் ஆதிக்கமுள்ள கிரகங்கள் ஒரு அணியாகவும், சந்திரன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கிரகங்கள் மற்றொரு அணியாகவும் ஜோதிட சாஸ்திரம் பிரித்துள்ளது.
கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய 6 வீடுகளும் சந்திரனுடையது என்றும் சிம்மம் முதல் மகரம் வரையுள்ள 6 வீடுகள் சூரியனுடையது என பழங்கால ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இந்த இரு வேறு சக்திகளும் (சூரியன், சந்திரன்) ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.
இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொண்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.
எனவே, ராகு-கேது பரிகாரம் மட்டுமல்லாது, மற்ற வகைப் பரிகாரங்களும் செய்வதற்கு அமாவாசை திதி ஏற்றதாகும்.

No comments:

Post a Comment