Thursday, April 21, 2011

அன்பிருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்

ஒரு கிராமத்தில் ஏழை குடியானவன் வீட்டு முன்பு மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் வெளியில் வந்து “உங்களைப்பார்த்தால் பசித்திருப்பவர்களைப்போல தெரிகிறது. வீட்டுக்குள் வந்து உணவருந்துங்கள் ” என்று அழைத்தாள்.
அதற்கு அந்த பெரியவர்கள் “ வீட்டில் ஆண்கள் யாரேனும் இருக்கின்றனரா?” என்று கேட்டனர்.இல்லை என்று பதில் கூறிய பெண், “எங்கள் வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கின்றனர். அவர்கள் மாலையில்தான் வருவார்கள் எனவே அதுவரை உங்களால் காத்திருக்க முடியுமா?” என்று கேட்டாள்.பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய மூவரும் வீட்டுத்திண்ணையிலேயே அமர்ந்திருந்தனர்.மாலையில் கணவன் வீடு திரும்பியதும் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து நீங்கள் யாரென்று கேட்டான். அதற்கு அவர்கள், எங்களுடைய பெயர் அன்பு, வெற்றி, செல்வம் என்று கூறினர்.“எங்களில் முதலில் யாரை நீ அழைக்கப்போகிறாய் ?” என்றும் அந்த குடியானவனிடம் கேட்டனர். உடனே குடியானவன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்தான்.நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு முதலில் விருந்து வைப்போம். செல்வம் வந்து நம் வீட்டை நிரப்பட்டும் என்று மனைவியிடம் தெரிவித்தான்.அதைக் கேட்ட மனைவி, வெற்றி மிகவும் முக்கியமானது. எனவே வெற்றியை முதலில் கூப்பிடுங்கள் என்று கூறினாள்.அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மகளோ, “ நீங்கள் இருவரும் அன்பை முதலில் விருந்துக்கு அழையுங்கள் ” என்றாள். மகளின் விருப்பத்திற்கு ஏற்ப குடியானவனும் அவனுடைய மனைவியும், அன்பை விருந்துக்கு அழைத்தனர். உடனே அன்பைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வெற்றியும், செல்வமும் பின் தொடர்ந்து வந்தனர்.இதில் ஆச்சரியமடைந்த குடியானவன், “நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் நீங்கள் மூவரும் வருகிறீர்களே?” என்று கேட்டான்.அதற்கு அவர்கள், “ நீங்கள் செல்வத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வெளியில் தங்கியிருப்போம். ஆனால் நீங்கள் அன்பைத்தானே அழைத்தீர்கள். அன்பு எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கே வெற்றியும், செல்வமும், என்று பின் தொடரும்” என்று பதிலளித்தனர்.அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்.

No comments:

Post a Comment