Sunday, May 29, 2011

4 வேதங்கள்

வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்துள்ளனர். "ரிக்' என்றால் "துதித்தல்'. முதல் வேதமான ரிக்வேதம் இந்திரன், வருணன் ஆகிய தேவர்களைத் துதித்துப் போற்றுகிறது. "யஜ்' என்றால் "வழிபடுதல்' . வேள்வி செய்து வழிபடும் முறையை யஜுர் வேதம் குறிப்பிடுகிறது. "ஸாம்' என்றால் "சந்தோஷப்படுத்துதல்' அல்லது "சமாதானப்படுத்துதல்'. இனிமையோடு பாடலாகப் படிக்கும் விதத்தில் இந்த வேதம் அமைந்துள்ளது. ரிக்வேதத்தில் உள்ள பெரும்பாலான துதிகள் சாமவேதத்தில் கானமாக (பாடல்) அமைந்துள்ளன. பிற்காலத்தில் சப்தஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சங்கீதத்திற்கு மூலமாகத் திகழ்வது சாமகானம் தான். இந்த வேதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பலகுறிப்புகள் உள்ளன. பகவத்கீதையில் கிருஷ்ணர், ""வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்,'' என்கிறார். லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை "சாமகானப் பிரியா' என்று போற்றுகிறது. சியாமா சாஸ்திரிகள் மதுரை மீனாட்சியம்மனை "சாமகான வினோதினி' என்று சிறப்பிக்கிறார். சிவனுக்குரிய அஷ்டோத்திரம், "சாமகானப் பிரியாய நம:' என்று குறிப்பிடுகிறது. நான்காவது வேதம் அதர்வனமாகும். "அதர்வன்' என்பதற்கு "அக்னியையும், சோமனையும் வழிபடும் மதகுரு' என்று பொருள். அதர்வன மகரிஷி மூலம் இவ்வுலகிற்கு வந்த வேதம் என்பதால் இப்பெயர். ஆபத்து மற்றும் எதிரிகளிடம் இருந்து காக்கும் மந்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கோபத்தை ஏன் படைத்தான்?
வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். "தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்துபோகட்டும்' என்ற பொருளில், அவ்வை "ஆறுவது சினம்' என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், ""பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும்'' என்கிறது.
மற்றொரு சூக்தம், ""எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும்,'' என கோபத்தைப் துதிக்கிறது.
கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை

1 comment:

  1. பகவத் கீதையில் கோபம் போன்ற தீய குணங்களை விட்டவன் "யோகி" என சொல்கிறது.

    ReplyDelete