Monday, May 30, 2011

தெய்வாம்சம் நிறைந்த இலுப்பை மரம்

இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்துப் பேணும் மரபு உண்டு. இந்தவகையில் திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திருப்பழமண்ணிப்படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்பொழுது விளங்குகிறது.

இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் கொண்டது இலுப்பை மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இந்த மரம் இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

திருவிளக்கெண்ணெய்

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.

இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான். முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே இதனை விடச் சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லையென்றே கூறப்படுகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகும்

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் அரப்பு

எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் இலுப்பை பிண்ணாக்கு அரப்பு எனப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் ஒரு நாள் அரப்பு வைத்து தலையில் முழுகும் மரபு தமிழர்களிடையே உண்டு. இதனால் குளிர்ச்சியும், அமைதியும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் இன்றைக்கு மனிதனின் ஈமக்கிரியை செய்யும்போது இறந்த உடலுக்கு நீராட்டுவதற்காகவே அரப்பு பயன்படுகிறது.

மருத்துவப்பயன் கொண்ட இலுப்பை

இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

இலுப்பைப்பூ

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ. நல்ல சுவை கொண்ட இப்பூவினால் பாம்பு கடித்த விஷம், வாதநோய் குணமடையும். இலுப்பைப்பூவை பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படும். தாகம் தணியும்.

No comments:

Post a Comment