Monday, May 30, 2011

சிவனருள் கிட்டும் சோமவாரப் பிரதோஷம்

மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் நாள் முழுவதும் சிவநாமம் ஜெபித்து மாலை வேளையில் ஆலய தரிசனம் செய்வோம்

பிரதோஷம் தோன்றிய கதை

சாகா வரம் பெறுவாதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. அச்சமயத்தில், கடலில் இருந்தும் விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும்.

கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது. விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான். இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.

திரியோதசி நடனம்

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார். இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள்அனைவரும் 'ஹரஹர' என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பினர்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.

மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

அபிஷேகப் பொருட்கள்

இறைவனுக்கும் நந்திதேவருக்கும் தேவையான அபிஷேகப் பொருட்களை வழங்குவதன் மூலம் நற்பலன்களை அடையலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

பிரதட்சண முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

சோமவார பிரதோஷம்

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரக்ஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

No comments:

Post a Comment