Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»26- கல்வியைத் தானம் செய்யுங்க

இன்றைய தினம் படிப்பதற்கு, வங்கியில் போய் கடன் வாங்குமளவு நிலை சென்றுவிட்டது. கல்வியை வியாபாரமாக்கி கொள்ளையடிக்கின்றனர். ஆனால்,நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ராட்சதனாகப் பிறப்போம் என்கிறது சாஸ்திரம். யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் படித்தார் ராமானுஜர். தன்னை மிஞ்சிய சீடனாக இருந்ததால், ராமானுஜர் மீது அவருக்குப் பொறாமை. இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னனின் மகளுக்கு பேய்பிடித்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் குணமாக்க பல மந்திரவாதிகளை அழைத்துப் பார்த்தான் மன்னன். எதற்கும் அந்தப் பேய் கட்டுப் படவில்லை. கடைசியாக, யாதவப்பிரகாசரை அழைத்தான். அவர், அந்தப்பெண் முன்னால் அமர்ந்து மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.அப்போது அந்தப் பெண்ணிடம் இருந்த பேய் பேசியது. ""என்னை விரட்ட உன்னால் முடியாது. நீ உன் ஆயுள் முழுக்க இங்கிருந்து மந்திரம் சொன்னாலும் சரிதான்...நான் விலகமாட்டேன். அது மட்டுமல்ல, நான் நினைத்தால் உன்னை இங்கிருந்து
விரட்டவும் முடியும், நான் ஒரு ராட்சதன், என்னிடம் விளையாடாதே,'' என்றது.
யாதவப்பிரகாசர் நடுங்கி விட்டார். அப்போது, அவருடன் வந்திருந்த ராமானுஜர் அந்தப் பெண்ணருகே சென்றார்.""ஐயா, யார் நீங்கள்? அப்பாவியான, இந்தப் பெண்ணின் உடலில் இருந்து ஏன் இவளை வருத்த வேண்டும்?'' என்று கேட்டார்.அப்போது அந்த ராட்சதன் அழுதபடியே பேசினான்.""ஐயா! தாங்கள் கல்வியில் என்னை விட உயர்ந்தவர். எனவே, உங்களோடு நான் பேசுகிறேன். நான் என் வாழ்நாளில் சகலகலைகளையும் கற்றறிந்தவனாகவே இருந்தேன். ஆனால், யாருக்கும் வித்யாதானம் செய்யவில்லை. அதன்பலனாக, இந்த ராட்சதப் பிறப்பை அடைந்து, இப்பெண்ணின் உடலில் புகுந்தேன். தாங்கள், என் தலை மீது கை வைத்தாலே போதும், நான் இந்த ராட்சதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைந்து விடுவேன்,'' என்றான்.ராமானுஜரும், ஸ்ரீமன் நாராயணனை மனதில் எண்ணி, அந்த ராஜகுமாரியின் தலையில் கை வைத்தார். அந்த ராட்சதன் முக்தியடைந்தான். ராஜகுமாரி சுகமடைந்தாள். மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

No comments:

Post a Comment