Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 45 -இறப்பும் ஒரு நிகழ்வு தான்

இறப்பும் ஒரு நிகழ்வு தான்

கார்த்திகேயன் நிறைய படித்தவன். பெரிய வேலையில் இருந்தான். கை நிறைய சம்பளம். தினமும் முருகன் கோயிலுக்கு போகும் பழக்கம் உள்ள அவன், ""முருகா! எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடு. '' என்று வேண்டுவான்.
முருகப்பெருமானும் அருள்பாலித்தார். நீண்டநாளாக அவனை பார்க்கக்கூட வராதிருந்த தாய்மாமனார் அவன் பெரிய பணியில் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தார். ""ஏதோ! இவ்வளவு காலம் பிரிந்திருந்து விட்டோம், போனது போகட்டும்! என் மகள் மல்லிகாவை நீ திருமணம் செய்து கொள். என் சொந்த தங்கை மகனான உனக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது,'' என்று சொந்தம் கொண்டாடினார்.
இப்போதாவது மாமா வந்தாரே! சரி...மற்ற பெண்களை மணப்பதை விட மாமா பெண்ணை மணந்தால் உறவு கருதியாவது ஒற்றுமையுடன் இருப்பாள் என எண்ணி அவளையே திருமணம் செய்து கொண்டான். நீண்டநாளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. அவன் முருகனையே சரணடைந்தான். மல்லிகாவும் அவனுடன் செல்வாள். ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் கோயிலுக்கு போவதை விட்டுவிட்டாள்.
ஒருநாள் குழந்தைக்கு ஜன்னி கண்டு இறந்துவிட்டது. மல்லிகாவும், கார்த்திகேயனும் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. நான்கைந்து நாள் கழிந்ததும், கார்த்திகேயன் வழக்கம் போல் பணிக்கு கிளம்பினான். மல்லிகா கண்ணீர் மல்க கடும் கோபத்துடன்,""நம் குழந்தை இறந்து ஐந்துநாள் தான் ஆகிறது.
அதற்குள் உங்களுக்கு வேலை கேட்கிறதா! நான் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேலைக்கு கிளம்புகிறீர்களே!'' என்றாள்.
""மல்லிகா! அதற்கென்ன செய்வது, மாத வரவு செலவு போன்றது தான் வாழ்க்கை. இதுபோல பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும். இன்று நம் குழந்தை, நாளை நாம். வருத்தம் எனக்கும் உண்டு. ஆனால், அப்படி வருந்துவதால் என்ன நடந்து விடப்போகிறது!
வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக் கொள்,'' என்றபடியே வண்டியைக் கிளப்பினான்.
மல்லிகா அவனை கல்மனதுக்காரன் என்றே எண்ணினாள். ஆனால், இறப்பு என்பது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று தானே!

No comments:

Post a Comment