Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 49-

மதஉணர்வு அதிகமாக இருந்த அந்தக்காலத்தில், மன்னர் அவுரங்கசீப்பால், சீக்கிய மதகுரு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார். அவரது உடல் ஓரிடத்தில் கிடந்தது. ""அவருக்கு இறுதி மரியாதை கூட செய்யக்கூடாது, உடல் அழுகி மண்ணோடு மண்ணாக வேண்டும்,'' என்று உத்தரவிட்ட மன்னர், பலத்த காவலும் போட்டார். பயத்தில் மக்கள் உடலின் அருகே செல்லவில்லை.
தேஜ்பகதூரின் மகன் குருகோவிந்த்சிங். இவருக்கு அப்போது வயது 14 தான். தன் தந்தைக்கு முறையான இறுதிச்சடங்கு செய்தே தீருவதென முடிவெடுத்தார். உடலை எடுத்தால் அவரது உயிரும் பறிக்கப்படும் என உறவினர்கள் எச்சரித்தனர். கோவிந்த்சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. பஞ்சாபில் இருந்து டில்லி புறப்பட்டார்.
செல்லும் வழியில் அவரைப் பார்த்த ஒரு வண்டிக்காரரும், அவரது மகனும் டில்லி செல்ல வேண்டாம் என அவரை எச்சரித்தனர். தங்கள் வீட்டிலேயே மறைந்திருக்கும்படியும், அவருக்குப் பதிலாக தாங்களே டில்லி சென்று உடலை எடுத்து வருவதாகவும் உ<த்தரவாதம் அளித்தனர். கோவிந்த்சிங்கிற்கு இதில் உடன்பாடில்லை.
இருந்தாலும்,அவர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.
மனஉறுதி மிக்க வண்டிக்காரரும், அவரது மகனும் டில்லியை அடைந்து உடல் கிடக்கும் இடத்தை மிகச்சிரமப்பட்டு கண்டுபிடித்தனர். உடல் அழுகி நாற்றமடித்ததால், பாதுகாப்புக்கு வந்த வீரர்கள் கூட தள்ளி நின்றனர். வண்டிக்காரர் தன் மகனிடம்,
""மகனே! நம்மில் ஒருவர் உயிர் விட்டாலன்றி உடலை எடுக்க முடியாது. இருளைப் பயன்படுத்தி உடலருகே செல்வோம். நான் கத்தியால் குத்தி இறந்து போகிறேன். என் உடலை அங்கே போட்டுவிட்டு, தேஜ்பகதூரின் உடலுடன் நீ சென்று விடு,'' என்று யோசனை சொன்னார். அந்த வீரமகனும் ஒப்புக்கொண்டான். சொன்னபடியே, இருளில் உடலருகே சென்று, கத்தியால் குத்தி மாய்த்துக்கொண்டார் வண்டிக்காரர். அவரது உடலை அங்கே கிடத்திவிட்டு, பகதூர் உடலைத் தூக்கிக்கொண்டு அவரது மகன் தப்பிவிட்டான். குருகோவிந்த்சிங்கிடம் அதை ஒப்படைத்தான்.
உயிரே போவதாக இருந்தாலும், மனக்கலக்கம் கொள்ளாமல் எவன் இருக்கிறானோ அவனே வாழத் தகுதியானவன்.

No comments:

Post a Comment