Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 58 இளக வைத்த இன்னிசை

ஒருசமயம், வீணை இசையில் வல்லவர்களான நாரதரும், தும்புருவும் தங்களில் யார் சிறப்பாக வாசிக்கின்றனர் என்று சர்ச்சை செய்தனர். இதற்கான முடிவை சிவபெருமானிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கைலாயம் நோக்கிப் புறப்பட்டனர். வழியிலுள்ள ஒரு வனத்தில் ஆஞ்சநேய சுவாமி அமர்ந்துராம நாமத்தை தியானம் செய்து கொண்டிருந் தார். அவர் இருவரையும் பார்த்தார்.
""யாழிசை வல்லுநர்களே! நலம் தானா? எங்கே இந்தப் பக்கம்?''என்று விசாரித்தார். தாங்கள் செல்லும் விஷயம் பற்றி அவர்கள் விளக்கினார்கள்.
ஆஞ்சநேயர் அவர்களிடம், ""அதற்கு ஏன் அவ்வளவு தூரம். நீங்கள் இருவரும் தனித்தனியே வாசியுங்கள். பிறகு முடிவைச் சொல்கிறேன்,'' என்றார்.
அவர்களும் யாழ் இசைத்தனர். பின்னர், ஆஞ்சநேயர் அந்த யாழை வாசித்தார். அப்போது, அண்ட சராசரமும் உறைந்து நின்று விட்டது. நதிகளில் தண்ணீர் ஓடாமல் அப்படியே நின்றது. உலகமே அந்த இசையில் மயங்கி இயக்கம் நின்று விட்டது. ஆஞ்சநேயர் அமர்ந்திருந்த பாறை உருகி வழிந்தது. நாரதரும், தும்புருவும் இவரது இசைக்கு முன்னால் நம் இசை எம்மாத்திரம் என்று விக்கித்து நின்றுவிட்டனர்.
ஆஞ்சநேயர் இசையை முடித்ததும், யாழை பாறையில் வைத்தார். உருகி ஓடியிருந்த அந்தப் பாறையில் அது ஒட்டிக்கொண்டது.
""நாரத தும்புரு முனிவர்களே! நீங்கள் மீண்டும் வாசியுங்கள். யார் இசைக்கு இந்தப்பாறை மீண்டும் இளகுகிறதோ அவர்கள் ஒட்டியுள்ள வீணையை எடுத்துக்கொள்ளலாம். அவரே வெற்றி பெற்றவர்,'' என்றார்.
இதன்பிறகும் அவர்கள் போட்டியிடுவார்களா என்ன! ஆஞ்சநேயரிடம் விடைபெற்று கிளம்பி விட்டனர்.

No comments:

Post a Comment