Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 77-சொன்ன சொல்லை மறந்திடலாம்

காஞ்சிபுரத்தில் வயதான பணக்கார அந்தணர் ஒருவர் வசித்தார். இவருக்கு வடமாநிலங்களிலுள்ள கோயில்களையெல்லாம் தரிசிக்க ஆசை. அக்காலத்தில் வாகன வசதி கிடையாது. முதுமை காரணமாக அவ்வளவு தூரம் நடந்து செல்வது சாத்தியம் தானா என யோசித்தார். ஆசை விடவில்லை. கிளம்பி விட்டார். அதே நாளில், தனது ஊரில் இருந்து அந்தண இளைஞன் ஒருவனும் இதே போல கோயில்களுக்கு கிளம்பினார்.
அறிமுகமில்லாத இவர்கள் ஓரிடத்தில் சந்தித்தனர். பெரியவர் நடந்த களைப்பால் சில இடங்களில் அமர்ந்து விடுவான். அப்போது, இளைய அந்தணன் அவருக்கு கை,கால் பிடித்து விட்டு சேவை செய்தான். சில சமயங்களில், அந்தணரால் நடக்க முடியாத போது அவரைத் தூக்கிக் கொண்டு நடந்தான். இதனால், அந்தணருக்கு இளைஞனை மிகவும் பிடித்துப் போயிற்று.
அவர்கள் வடக்கிலுள்ள பல கோயில்களைத் தரிசித்தனர். எத்தனை கோயில்களைத் தரிசித்தாலும் மதுராவிலுள்ள கிருஷ்ணனைத் தரிசித்தால் தான் தங்கள் பயணத்தின் நோக்கம் வெற்றி பெறும் என இருவருமே நினைத்தனர். இளைஞனும் அவரைத் தூக்கிக் கொண்டு மதுராவை அடைந்தான். பெரியவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மதுரா கிருஷ்ணனை கண்குளிரத் தரிசித்தார்.
அன்று அவர் மிகுந்த மகிழ்வுடன் இருந்தார். தனக்கு சேவை செய்த அந்த இளைஞன் மீது அளவில்லாத பாசம் ஏற்பட்டது. அந்த ஆர்வ மிகுதியில், ""தம்பி! நீ எனக்காக பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. உனக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். நீ பணத்தால் குறைந்தவன் என்றா<லும், நீ செய்த சேவைக்காக என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளேன். அவள் எனக்கு ஒரே மகள். எனவே, என் சொத்துக்களும் உன்னையே சேரும். ஊருக்குப் போனதும் கல்யாணத்தை நடத்தி விடுகிறேன். இந்த மதுரா கிருஷ்ணனே என் சொல்லுக்கு சாட்சி,'' என்றார்.
இளைஞனுக்கு பெண்ணும் கிடைத்து, சொத்தும் கிடைக்கப்போகிறதே என பேரானந்தம்.
அவர்கள் தல உலாவை முடித்து காஞ்சிபுரம் திரும்பினர். ஊருக்கு வந்ததும் தன் அழகு மகளைப் பார்த்தார் அந்தணர்.
""ஐயோ! இவ்வளவு அழகான பெண்ணை, ஒரு ஏழைக்கு திருமணம் செய்து கொடுப்பதாவது...கூடவே கூடாது. இவளை நல்லதொரு பணக்கார இளைஞனுக்கு மணம் முடித்து வைக்கலாம்,'' என மனம் மாறிவிட்டார்.
இளைஞன் அவரிடம், முன்னர் கொடுத்த வாக்கின் அடிப்படையில் பெண் கேட்டான்.
பெரியவர் சிரித்தார்.
""போடா போ! உனக்கு பெண் தர எனக்கென்ன பைத்தியமா? ஏதோ உணர்ச்சி வேகத்தில் பெண் தருவதாச் சொல்லிவிட்டால், அதைச் செய்தாக வேண்டுமா! நீ பரம ஏழை, அவள் லட்சங்களில் புரள்பவள். போய்விடு<'' என்று விரட்டினார்.
உடனே இளைஞன், மதுராபுரி கிருஷ்ணனை நினைத்தான்.
""பகவானே! நடந்ததை நீ அறிவாய். நடந்த சம்பவம் உண்மை என்றால். நீ எனக்கு சாட்சியாக வர வேண்டும்.'' என உருக்கமாக வேண்டினான். அந்நாட்டு மன்னனிடமும் புகார் கொடுத்தான்.
மன்னர் விசாரித்தார். ஆனால், பெரிய அந்தணர் எப்படியோ வாதாடி ஜெயித்து சாதகமாக தீர்ப்பைப் பெற்று விட்டார்.
அந்தண இளைஞன் வருந்தினான். மதுராவுக்கு கிளம்பி விட்டான். தன் நிலையை இறைவனிடம் சொல்லி முறையிட்டான்.
தனக்கு சாட்சியாக வரவேண்டும் என சந்நிதி முன் தலையை முட்டி மோதினான். கிருஷ்ணர் அவன் முன்னால் தோன்றி அவனுடன் புறப்பட்டார். காஞ்சிபுரம் நகர எல்லையை அடைந்ததும் சிலையாக மாறி நின்று விட்டார்.
மதுரா கிருஷ்ணன் அங்கு சிலையாக நின்றதைக் கண்ட மக்கள் பரவசமாயினர். மன்னனுக்கும் விஷயம் தெரிந்தது. பெரிய அந்தணரும் அந்த இளைஞனுக்காக, கிருஷ்ணரே அவனுடன் வந்தது குறித்து அறிந்து பரவசப்பட்டார். செய்த தவறுக்கு வருந்தினார்.
அந்த இளைஞனுக்கும் அந்தணர் மகளுக்கும் திருமணம் நடந்தது. அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்தனர்.

No comments:

Post a Comment