Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 90-இருப்பதிலேயே திருப்தி கொள்வோமா!

ஒருமுறை பார்வதிதேவி சிவனிடம்,""நாதா! என் சகோதரர் திருமாலும், அண்ணியார் லட்சுமியும் வசிக்கும் இல்லத்தைப் பார்த்தீர்களா! அரண்மனை போல வசதியாக இருக்கிறது. நாமோ, இந்த மரத்தடியில் வசிக்கிறோம். நமக்கும் அதே போல பெரிய இல்லமாக அமைக்கலாமே!'' என்றாள்.
சிவபெருமான் அவளிடம்,""அவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அங்கே இருக்கிறார்கள். நமக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் இல்லை. அதனால், அப்படி ஒரு வீடு அமையவில்லை. என் தகுதிக்கு இந்த மரத்தடியே மிக அதிகம். இங்கும் குளிர்ச்சியாக நன்றாகத்தானே இருக்கிறது. இது போதும் நமக்கு,'' என்றார். பார்வதி விட்டபாடில்லை. ""அதெல்லாம் முடியாது! எனக்கும் பெரிய வீடு வேண்டும். அரண்மனை மாதிரி இருக்க வேண்டும்,'' என்றாள். சிவனும் சிரமப்பட்டு ஒரு அரண்மனையை உருவாக்கினார். அதற்கு கிரகப்பிரவேசம் நடத்த தகுதியான குருவை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபற்றி பார்வதி சிவனிடம் கேட்டாள். ""தேவி! என் பக்தரில் ஒருவர் இந்த கிரகப்பிரவேச சடங்கை நடத்தினால் சிறப்பாக இருக்கும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களில் உயர்ந்தவன் இலங்கை மன்னன் ராவணன். அவனை அழைப்போமே!'' என்றார். பார்வதியும் சம்மதித்தாள். சடங்குகள் யாவற்றையும் சிறப்பாகச் செய்தான் ராவணன். விழா முடிந்ததும், தட்சணை கொடுக்க வேண்டிய நேரம் வந்தது.
சிவன் அவனிடம், ""என்ன தட்சணை எதிர்பார்க்கிறாய் ராவணா?'' என்றார். அவன் அமைதியாக, ""இந்த அரண்மனை,' ' என்றான். சிவபெருமான் அமைதியாக,""இதோ, எடுத்துக்கொள்,'' என்றார். ராவணன் ஒரு அந்தணன். அந்தணர்கள் கேட்பதைக் கொடுப்பதே தர்மம். அதை சிவன் நிறைவேற்றி விட்டார். மறுபடியும் சிவபார்வதிக்கு கிடைத்தது மரத்தடி தான். இறைவனால், யாருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்! கடவுளுக்கே இவ்வளவு தான் கொடுப்பினை என்றால், மானிட ஜென்மங்களான நாம் எம்மாத்திரம்! இனியேனும், நம்மிடம் இருப்பதிலேயே திருப்தி கொள்வோமா!

No comments:

Post a Comment