Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 91 பாம்புக்கு கருணை உண்டு

பல்லவர்கள் காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த நேரம்..சென்னை அருகிலுள்ள திருநின்றவூரில் காளத்தி முதலியார் என்பவர் வசித்தார். அவர் பெரும் கொடை வள்ளல். இவரது புகழைக் கேள்விப்பட்ட பல்லவ மன்னன் ஒருவன், முதலியார் மீது பொறாமை கொண்டான். தன்னை விட உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து, தன் புகழைச் சரியச் செய்கிறாரே என்று கொதித்தான். அதிகாரிகளை அனுப்பி, முதலியார் வைத்திருந்த பொருட்களை பறித்து விட்டான்.
வேறு எங்காவது போய் வாழலாம் என அவர் தன் மனைவியுடன் புறப்பட்டார். நீண்ட தூரம் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினர். பசி வயிற்றைக் கிள்ளியது. உணவளிப்பவர் யாருமில்லை.
கிழிந்த ஆடையுடன் புலவர் ஒருவர் அங்கே அமர்ந்திருந்தார். பசிக்களைப்பு அவரையும் வாட்டியிருந்தது. இருப்பினும் வாய் சும்மா இல்லை. ""ஏ வறுமையே! இன்று நீ என்னை விரட்டுகிறாய். நாளை நான் உன்னை விரட்டுகிறேன் பார்! இன்று நீ என்ன ஆட்டம் வேண்டுமானாலும் போடு. நாளை திருநின்றவூர் காளத்தி முதலியாரிடம் பொருள் பெற்ற பின், உனக்கு என்னிடத்தில் வேலையின்றிப் போகும். ஒரேநாளில், நான் லட்சாதிபதியாகி விடுவேன்,'' என்ற பொருள்பட அவர் ஒரு பாட்டைப் பாடினார்.
முதலியாருக்கு திக்கென்றது. ""ஆஹா! யாரோ ஒரு புலவர், நான் இன்னும் பணக்காரனாகவே இருக்கிறேன் என எண்ணி, என்னை நம்பி ஊருக்குச் செல்கிறார். இவர் வரும் நேரத்தில், நான் அங்கு இல்லாமல் இருந்தால், பதில் சொல்லக்கூட நாதியிருக்காதே! என்ன கொடுமை! என்ன நடந்தாலும் சரி! இவர் அங்கு வந்து சேர்வதற்குள் நாம் முந்திப்போய் விட வேண்டும்,'' என்றெண்ணி, மனைவியுடன்
மீண்டும் ஊர் போய் சேர்ந்து வீட்டில் இருந்தார். எதிர்பார்த்ததைப் போல புலவர் வீட்டுக்கு வந்தார். முதலியார் அவரை வரவேற்றனர். தன் நிலையைச் சொல்லி பொருள் கேட்டார் புலவர். இது எதிர்பார்த்தது தானே! கேட்டதைக் கொடுக்காவிட்டால் மானம் போய் விடுமே! "மரணம் கொடுமையானது தான். ஆனால், ஒருவர் கேட்டு இல்லை எனச் சொல்வது அதை விடக் கொடுமையானது' என்ற கொள்கையுடையவர் முதலியார். எனவே, வேகமாக வீட்டின் பின்பக்கம் சென்றார். மானமிழந்து வாழ்வதை உயிர்விடுவதே மேல் என்ற கருத்தில், அங்கிருந்த பாம்புப் புற்றுக்குள் கையை விட்டார். அதில் இருந்த பாம்பு, கொடுத்துச் சிவந்த அந்தக்கரங்களை தீண்ட விரும்பவில்லை. ""எத்தனை பேருக்கு அள்ளிக் கொடுத்த கை,'' என்று நினைத்த பாம்பு, தன் வாயில் இருந்த ரத்தினத்தை அவர் கையில் போட்டது. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த முதலியார், பெரும் விலை மதிப்புள்ள அந்தக் கல்லுடன் வீட்டுக்குள் வந்தார். புலவரிடம் ஒப்படைத்தார்.
""பெரும் பொருளாய் இருந்தால் சுமந்து செல்ல கடினமாக இருக்குமென நினைத்து, இந்த
ரத்தினத்தை தந்தீர்களோ! இதன் விலை அளவற்றது. இதைக் கொண்டு நான் பிழைத்துக் கொள்வேன்,'' என வாழ்த்திவிட்டு புறப்பட்டார். அதை பிரபுக்களால் கூட விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், அரசனிடம் சென்றார். முதலியார் வீட்டில் தானமாக வாங்கி வந்ததாகவும், அதற்கு பொருள் தரும்படியும் கூறினார்.
அரசன் ஆவேசமானான். அதிகாரிகளைக் கடிந்து கொண்டான். ""நீங்கள் பறிமுதல் செய்யும்போது, இதுபோன்ற ரத்தினங்களை ஏன் விட்டு வைத்தீர்கள்! முதலியார் இன்னும் நிறைய வைத்திருப்பார். நானே நேரில் போகிறேன்,'' என கிளம்பினான். முதலியாரிடம் அவர் கைவசமுள்ள ரத்தினங் களைக் கேட்டான். முதலியார் நடந்த உண்மையை விளக்கினார். அதை நம்பாத மன்னன், ""அப்படியானால், மீண்டும் புற்றுக்குள் கை விடும். பாம்பு இப்போது தந்தது நாகரத்தினம். அதனிடம் ஜீவரத்தினமும் இருக்கும். அதைக் கேட்டுப் பெறும் பார்க்கலாம்,'' என்றான்.
நடப்பது நடக்கட்டுமென முதலியார் புற்றில் கையை விட்டார். பாம்பு ஜீவரத்தினத்தை அவர் கைகளில் உமிழ்ந்து விட்டு, புற்றை விட்டுவெளியே வந்து உயிர்விட்டது. முதலியாரின் பெருமையை எண்ணியும், கொடிய பாம்புக்கு இருந்த இரக்க சிந்தனை கூட தன்னிடம் இல்லாமல் போனதே என்பதை எண்ணியும் வெட்கப்பட்டான். முதலியாரிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும்பொருட்களை ஒப்படைத்தான்.

No comments:

Post a Comment