Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 94


வேலையில்லாத ஏழை இளைஞர்கள் சிலரிடம் இசையார்வம் இருந்தது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் ஏதாவது ஒரு பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். கையில் இருந்த பணத்தைப் போட்டு, சில இசைக்கருவிகளை வாங்கினர். கடுமையாகப் பயிற்சி செய்தனர். தெருக்களில் நின்று அவர்கள் பாடினர். அவர்களது பாடல்களில் ஈர்க்கப்பட்ட கூட்டத்தினர் தங்களால் ஆன பணத்தை அளித்தனர். எப்படியோ, ஜீவனம் கழிந்தது. ஒரே ஊரில் அவர்கள் பாடினால், எத்தனை நாள் தான் மக்கள் கேட்பார்கள். போதாக்குறைக்கு மழைக்காலமும் வந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததே குறைவு தான். வருமானம் குறைந்தது. ஒருநாள், கடுமையான மழை பெய்யவே, அவர்களில் சிலர் கச்சேரி வேண்டாம் என முடிவு செய்தனர். ஆனால், இசைக்குழுவின் தலைவர், ""நிகழ்ச்சியை நடத்தியே ஆக வேண்டும். கூட்டம் வருகிறதா என்பது பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால், இந்த இடத்தில் கச்சேரி நடக்கும் என்று நம்மை நம்பி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு சில ரசிகர்கள் வரக்கூடும். அவர்கள் ஏமாந்து போகக்கூடாது. எனவே உடனே புறப்படுங்கள்,'' என உத்தரவிட்டார். ஒரு ஷெட்டின் கீழ் அவர்களது நிகழ்ச்சி நடந்தது. ஒரு காசு கூட வசூலாகவில்லை. இசைக்குழுவினர் முகம் சுளித்தனர். அப்போது ஒருவர் வேகமாக வந்தார். குழுவின் தலைவரிடம் ஒரு பையை அளித்து விட்டு வேகமாகப் போய்விட்டார். அவர் அதைப் பிரித்துப் பார்த்தார்.
""உங்கள் இசையை ரசித்தேன். பிரமாதம்... உங்கள் ஊர் மேயர்'' என்று எழுதப்பட்ட காகிதத்துடன் இருபதாயிரம் ரூபாய் பணம் இருந்தது.பனிக்காலமோ, மழைக்காலமோ... காலச்சக்கரத்தில் சுழலும் நாட்களில் அவையும் அடக்கம். எந்தக்காலமும் நமக்கு நண்பன் தான். கடமையை தொடர்ந்து செய்வோம்! அதற்குரிய அங்கீகாரம் எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வாசல் கதவைத் தட்டும்.

No comments:

Post a Comment