Sunday, July 3, 2011

இறைவன் எமக்கு இந்த சரீரத்தைகொடுத்தது ஏன்

எமக்கு இந்த சரீரத்தை இறைவன்
கொடுத்தது ஏன்..!?


சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த  சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி  சீரோடும் சிறப்போடும்  இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர்  கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது.

உடல் என்பது தோலும், எலும்பும், தசையும் இரத்தமும், நாடி நரம்புகளுமாக தோற்றமளிக்கின்ற இந்த தூல  உடம்பினை மாத்திரம் குறிப்பதன்று.
இந்த உடம்பினுள் சூக்குமமாய் அமைந்துள்ள மனம் என்ற உட்கருவியையும்  உடம்பு என்று அழைக்கப் படுவதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.மனம் முதலிய நுட்ப கருவிகளை உள்ளடக்கிய நூதன இயந்திரத் தொகுதியாகிய இந்த உடம்பினை இறைவன் படைத்து நமக்கு வழங்கி இருக்கின்றான்.இந்த உடம்பினுள்  செறிந்து இருக்கின்ற  உயிர்தான் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றையும்  செயற்படுத்துகின்றது..
உயிரும் உடம்பும் இணைக்கப்பட்டிருக்கின்ற பிரதான நோக்கம்  இறைவனை வழிபாடு செய்தற்கேயாகும். இந்த நோக்கத்தை உள்ளபடி உணர்தவர்கள் இறைவனை வழிபாடு செய்கின்றனர். உயர்வு பெறுகின்றனர்.  உணராதவர்கள் வந்த நோக்கத்தை மறந்து நெறியில்லா நெறியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிவிட்டு மீளாத் துன்பத்தில் வீழ்ந்து அழுகின்றனர். இன்பமும் துன்பமும் நமது தேட்டங்களே. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பங்கள் எம்மை வந்து அணுகாமல் தடுத்துக் கொள்ள முடியும். இந்த அருமையான  மனித உடம்பினைத் தந்து இறைவன் எமக்கு உதவியது  மலமாகிய அழுக்குக்களையும், அறியாண்மை யாகிய கொடிய இருளையும் நீக்கி ஒளியையும் இன்பத்தையும் பெறும் பொருட்டே என்பது உணரற்பாலது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. இந்த உடம்பின் உதவியுடன் மேலும் மேலும் அழுக்குகள்தான் சேர்கப்படுகின்றன கொடுமைகள் பல புரிந்து பாவ மூட்டைகளின் தொகைகள் பெருக்கப்படுகின்றன. அதன் பயன் துன்பங்கள் துயங்களில் இருந்து மீளமுடியாமல் அல்லல்படுவது தான் முடிவாகின்றது. நன்றாகக் கற்றவர்கள் கூட இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநினியாயங்களில் ஈடுபாடு கொள்வதை பாரக்கும்போது இறைவனின் நோக்கத்தை அறிந்தும் அறியாதவர்கள் போல் ஏனோ நடந்து கொண்டு தீவினைகளைச் சேகரிக்கின்றார்கள் என்று வேதனைப்படவேண்டி உள்ளது.

வாழ்த்த வாயும்  நினைக்க மட நெஞ்சும்  தாழ்த்தச்  சென்னியும். தந்த தலைவன்  சிவன் என்று சைவப் பெருமக்கள் கூறுவர். மனம், மொழி, மெய்யினால் இறைவனை வழிபடுவதற்க்காகவே .இந்த மானிட சரீரத்தை எம்மீது அளப்பெரும் கருணை கொண்டு எமக்கு இறைவன் ஈந்துள்ளான். இருள் நீங்கிய இன்பம்பெறுதலே நமது வாழ்வின் குறிக்கோள் என்றால் நாம்வந்த வேலையைப் சரியாக செய்யவேண்டும். தேவையற்ற வேலைகளை எல்லாம் அணைத்து எம்மை பாரம் ஆக்கிக் கொள்ளக்கூடாது.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறென்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர்

எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். என நினைத்து இறைவனை வழிபாடு செய்தலே மேலானது. என எமது சைவக் குரவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஏனென்றால் அந்த எல்லோருக்குள் நாமும் அடைக்கலமாகுகின்றோம் என்பதே அதன் உட்கருவாகும். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலைதானே வந்து எய்தும் பராபரமே" என்ற வாக்கை மனதிற் கொண்டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக

இறையுணர்வு ஆன்ம ஞானம்  எம்மிடையே ஏற்பட்டு விட்டால் எம்மைப்போன்றே ஏனைய மனிதர்களும். இருள்நீங்கி இன்பம் பெறுவதின் பெருட்டே இவ்வுலகில் தோன்றி யுள்ளனர்  என்பதை உணர்ந்து கொள்வோம். அப்பொழுது எல்லோர் மீதும் அன்பும, அருளும், கருணையும். இரக்கமும். ஏற்பட்டு  விடும். எமது பிராத்தனைகள் யாவும் நாம் வாழ்ந்து இன்பம் பெற்றால் போதும் என்ற சுயநல உணர்வு நீங்கப் பெற்று எல்லோரும் இன்பவாழ்வு எய்த வேண்டுமென்ற ஆன்மஞானம் நிறைந்த வழிபாடாக அமைந்து விடும்.


No comments:

Post a Comment