Friday, July 22, 2011

பக்திக்கே முதலிடம்

சமஸ்கிருதம் அறியாத ஒருவர், பத்மநாபசுவாமி மீது பக்தி கொண்டு தினமும் 108 முறை பத்மநாபோ அமரப் பிரபு என்று சொல்வதற்கு பதிலாக பத்மநாபோ மரப்பிரபு என்று சொல்லி வந்தார். பத்மநாப சுவாமியான ஸ்ரீமந்நாராயணனே தேவர்களின் தலைவன் என்பது தான் இதன் பொருளாகும். ஆனால், இந்த பக்தர் பத்மநாபன் மரங்களுக்கு தலைவனாக இருக்கிறான் என்ற அர்த்தத்தை மனதில் எண்ணிக் கொண்டு ஆற்றங்கரையிலிருந்த அரசமரத்தைச் சுற்றிய படியே மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பண்டிதர் ஒருவர் இதைக் கவனித்தார். ஐயா! நீங்கள் உச்சரிப்பது தவறு. பத்மநாபோ அமரப் பிரபு என்று தான் உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி விளக்கம் அளித்தார். இதுநாள் வரையில் தவறாக உச்சரித்து விட்டதை எண்ணிய பக்தர் வருந்தினார். அதுமுதல் வீட்டுவாசலிலேயே அமர்ந்து பத்மநாபோ அமரப் பிரபு என்று திருத்திச் சொல்லத் தொடங்கினார். அன்று இரவு பண்டிதரின் கனவில் வந்த பெருமாள், வனானி விஷ்ணு (காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் விஷ்ணுவின் வடிவமே) என்று பராசரர் சொன்னதை நீர் அறியவில்லையா? மரங்களுக்கும் நானே தலைவன். பக்தியோடு ஆற்றங்கரை அரசமரத்தை பூஜித்த பக்தரின் மேன்மையை நீர் உணரவில்லயே, என்று கோபத்துடன் சொன்னார். அறியாமை காரணமாக தவறாக இறைநாமங்களைச் சொன்னாலும், தூயபக்தி இருக்குமானால் குழந்தையின் மழலை கேட்டு மகிழும் தாய்போல இறைவன் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார் என்று உணர்ந்தார் பண்டிதர்.

No comments:

Post a Comment