Wednesday, July 27, 2011

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை


ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை – மண்ணுலகை விட்டு விண்ணுலகெய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை ஆகும்.

ஆத்மாக்கள் மோட்சகதி அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் எமது வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு வாழ்வதற்க்கு ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்.
சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடிஅமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.
முக்கியமாக தாய்தந்தையர்களை இழந்தவர்கள்  இதில்  பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்யவேண்டும். மற்றும் தாத்தா பாட்டி  மாமனார் மாமியார் சுற்றத்தவர்கள் என எம்மை விட்டு  அமரர்களாகிய அனைவருக்கும் இது போற்றி  வணங்கத்தக்க நாளாகும்.
அப்பா  அம்மா உறவுகள் என அனைவர்க்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர்  கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடிஅமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.
         பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற கீரிமலை நகுலேஸ்வர தீர்த்தம்
மனிதர்களாகிய நாம் பெற்றகடன்கள் பலவாகும். அவற்றுள் மூன்று கடன்கள் பெரும் கடன்களாக கருதப்படுகிறது. அவையாவன தேவர்கடன், முனிவர்கடன், பிதிர்க்கடன் என்பவையாகும். தேவர்கடன் இறைவனை வழிபடுவதாலும், முனிவர்கடன் வேதம் ஓதுதலாலும், திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும், பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைந்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும் இக்கடன்கள் தீர்க்கப்படுகின்றன. நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும், இக்கடமையை செய்ய ஏற்ற நாளாககவும் வருவது இந்த ஆடி அமாவாசை தினமாகும்.
                                               கேரளாவில் ஆத்ம தர்ப்பணம்
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்க கூடிய நாளாகிய இவ் அமாவாசை திகதியன்று காலையில் கடலில் நதியில் ஆற்றில் மூழ்கி குளித்து அல்லது வீடுகளில் குளித்து சுத்தமான ஆடை அணிந்து விபூதி பூசி பொட்டு வைத்து ஆலயம் சென்று சிவன் தரிசனம் செய்து ஆலய குருவின்  வழிகாட்டலில் முதலில் தர்ப்பை கையில் அணிந்து சங்கல்பம் செய்து  அமரத்துவம் அடைந்தவர்கள் பெயர்நாமங்களை குருவிடம் சொல்ல வேண்டும்.

பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்         சேதுக்கடல் அக்னி தீர்த்தம்
இறந்த தாய் தந்தையர் அவர்கள் பெயர்களை முதலில் சொல்லி பின்பு தாத்தா பாட்டி  தலைமுறை சொல்லி அதன் பின் ஏனைய உறவினர் நன்பர்கள் இறந்திருந்தால் அவர்கள் பெயர்களும் சொல்லி எள்ளும் தண்ணீரும் சேர்த்து இறைத்து தர்ப்பணம் செய்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பின் மோட்சதீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து ஆராதிக்க வேண்டும்.
எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள். தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.
பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும். பின் குருவிற்கு தானம் வேட்டிசால்வை அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.
வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு சைவமாக சமைத்து வாழை இலை உணவு படைத்து கற்பூர ஆராதனை செய்து வணங்கி  உறவினருடன் கூடி மதியபோஷனம் உண்ணவேண்டும்.

No comments:

Post a Comment