Saturday, July 23, 2011

மனைவியின் காலில் விழுந்த முருகன்

அருணகிரியார் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான் தனது மனைவியான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இப்பாடலை பாடினார். இதனை மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது. உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள், இவள் முருகப்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன் கலந்து விட்டாள். இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும். ஆனால், வள்ளியம்மை பூமியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்றில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக் கொள்கிறாள். அவளை ஒரு பக்தையாகவே பார்க்கிறார் முருகன். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். பக்தன் இறைவனின் காலில் விழுவது போல, வள்ளியம்மையாகிய பக்தையின் காலில் அவளது பக்தியைப் பாராட்டி முருகன் விழுந்து, அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை முருகன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரியார் இப்பாடலை பாடினார். உலகுக்கே கொடுப்பவன் கண்ணன். அந்த கண்ணன் யாசகம் கேட்டு மகாபலியிடமும், கர்ணனிடமும் செல்லவில்லையா? அதுபோல், தான் இதுவும்! தெய்வத் திருவிளையாடல்களை மனிதத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தெய்வீக சிந்தனையுடன் மட்டும்தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment