Sunday, July 10, 2011

அவதாரங்களிலே மிகச் சிறந்த அவதாரம் ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

யர்பாடி!இது பகவான் கண்ணன் குழந்தைப் பருவத்திலிருந்து யசோதையின் வீட்டில் வளர்ந்த ஊர். மாமன் கம்சனில் அரண்மனையிலுள்ள சிறையில் பிறந்து, உடனேயே ஆயர்பாடிக்குக் கொண்டு வரப்பட்டவன் கண்ணன். ஆயர்பாடி என்பது யாதவர்கள் மிகுந்து வசிக்கும் இடம். ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்தாறு பசுக்களுக்கு குறைவிருக்காது. ஒவ்வொரு பசுவும் குடம் குடமாகப் பால் கொடுப்பவை. அந்தப் பாலையும், பாலிலிருந்து தயிரையும், தயிரிலிருந்து வெண்ணெயையும் கடைந்தெடுத்து அடுத்தடுத்துள்ள ஊர்களில் விற்று ஜீவனம் நடத்தி, ஆனந்த வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள்.அவர்களுடைய வீடுகளைப் பூட்ட மாட்டார்கள். ஏனெனில் திருட்டு பயம் இல்லாத காலம் அது. ஆனால் கண்ணன் வந்தபிறகு வாசற்கதவைப் பூட்ட வேண்டிய அவசியம் வந்தது. ஏனெனில் கிருஷ்ணன் ஒரு திருடன்; அதுவும் வெண்ணெய் திருடி. ஈசனுக்கு "வீணை தடவி' என்று ஒரு பெயர் இருப்பதைப் போல, ஆயர்பாடியில் கிருஷ்ணனுடைய பெயர் "வெண்ணெய் திருடி'. பூட்டிய வீட்டைத் திறந்து கொண்டு தன் பரிவாரங்களோடு வீட்டினுள்ளே புகுந்து, எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் உரியிலிருந்து வெண்ணெயை எடுத்து, தானும் தின்று தன் நண்பர்களுக்கும் கொடுத்து காரியம் முடிந்ததும் ஓடிவிடுவான் கண்ணன். அதனால்தானோ என்னவோ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் குழந்தையாக இருக்கும்போது தின்ற வெண்ணெய், இன்றைய குழந்தைகளுக்கும் பிடிக்கிறது.

இன்றைய குழந்தைகளுக்கும் வெண்ணெய் என்றால் வெகு பிரியம். வெறும் வெண்ணெய் தின்னும் குழந்தைகள்; வெண்ணெய் பிஸ்கெட் தின்னும் குழந்தைகள்; ரொட்டியில் வெண்ணெய் தடவி தின்னும் குழந்தைகள்; ஏன்- தயிர் சாதத்திற்கு நெய் ஊற்றி சாப்பிடும் குழந்தைகள்கூட இன்றுண்டு. குழந்தைகள் வெண்ணெய்யும், அதைச் சார்ந்த பொருட்களையும் தின்கிறார்களென்றால் கண்ணனே வழிகாட்டி! சரி; விஷயத்திற்கு வருவோம்.ஆயர்பாடியில் ஒரு கோபிகை- அதாவது ஓர் இளம் பெண். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு சொத்து எதுவும் கிடையாது. தாய்- தந்தையும் இல்லை. அவர்கள் அவளுக்கு விட்டுப்போனது ஒரு ஓலைக் குடிசையையும் ஒரு பசுமாட்டையும்தான். பலரும் ஐந்து பசுக்கள் முதல் ஐம்பது பசுக்கள் வரை வைத்திருக்கும்போது, இவள் ஒரே ஒரு பசுவை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்தி வந்தாள். காலையில் எழுந்ததும் இருக்கும் ஒரு பசுமாட்டை ஊருக்கு வெளியே ஓட்டிச்சென்று மேயவிட்டு, மாலையில் வீட்டுக்கு வருவது; பிறகு பாலைக் கறந்து விற்றுவிட்டு, மிகுந்த பாலை புரை ஊற்றி, தயிராக்கி விற்பது; மீதமிருந்த தயிரில் வெண்ணெய் எடுத்து சேர்த்து, இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதை விற்பது அவள் வழக்கம்.

ஒருநாள் அந்த ஏழை கோபிகை தன்னுடைய பசுவை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டாள். அந்த வீட்டின் வழியாக தன் பரிவாரங்களுடன் வந்த கண்ணன் அந்த வீட்டைப் பார்த்தான்.

"இது யாருடைய வீடு?' என்று கேட்டான் கண்ணன்.


""இது ஒரு ஏழை கோபிகையின் வீடு. இவளிடம் ஒரே ஒரு சிவப்பு நிற பசுதான் இருக்கிறது. அதை நம்பித்தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்'' என்கிறான் ஒருவன்.


இன்னொருவன், ""சிவப்பு பசுவா? அதன் பால் ருசியாக இருக்குமே'' என்றான்.

மற்றொருவன், ""பாலே ருசியாக இருக்குமென்றால் வெண்ணெயும் மிகுந்த ருசியாக இருக்குமே'' என்று கண்ணனுக்குத் தூபம் போட்டான்.

உடனே வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே போன கண்ணன் திடுக்கிட்டு நின்றான். வீட்டினுள்ள எல்லாம் மண்பாண்டங்கள். எதிலும் எந்தப் பொருளும் இல்லை. சிலவற்றில் குறைவாகவே இருந்தன. நாளை உடுத்திக்கொள்ள ஒரே ஒரு புடவை மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஏழ்மை கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. இருப்பினும் தலைக்கு மேல் மிக உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் உரி கண்ணில் பட்டுவிட்டது. உடனே தன்னுடைய நண்பர்களை ஒருவர் மேல் ஒருவராக நிற்க வைத்து கண்ணன் மேலே ஏறுகிறான். உரியிலுள்ள மண் கலயத்தில் கையை விட்டு ஒரு கவளம் வெண்ணெயை எடுத்து வாயில் போடுகிறான். கதவு திறக்கும் ஓசை!
கண்ணன் திடுக்கிட்டு வாசலைப் பார்க்க, அந்த வீட்டின் கோபிகை வந்துவிட்டாள். அவள் முகம் கோபத்தில் சிவக்கிறது. ஓரளவு சேர்த்து வைத்த வெண்ணெயை இவன் திருடுகிறானே என்று கோபம் கொப்புளிக்கிறது. உடனே அவள் கேட்கிறாள்:

""கஸ்த்வம் பால...?''

இந்த வடமொழி வாக்கியத்திற்கு "பையா, நீ யார்?' என்று பொருள். அதற்கு கண்ணன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? "நான்தான் கண்ணன்; யசோதையின் மைந்தன்' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் கண்ணன் சொல்கிறான்:

""பலானுஜஹ:''
என்ன போக்கிரித்தனம் பாருங்கள் கண்ணனிடம்.

"பலானுஜஹ' என்றால் பலராமனின் தம்பி என்று பொருள். அனுஜன் என்றால் தம்பி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி விசிஷ்டாத்வைதத்தை உண்டாக்கிய ஸ்ரீராமானுஜருக்கு அவருடைய பெற்றோர் லக்ஷ்மணன் என்றுதான் பெயர் வைத்தார்களாம். ஆனால் அவருக்கோ ஸ்ரீராமனின்மேல் அபார பக்தியாம். அதனால் ராமா + அனுஜஹ = ராமானுஜன்- அதாவது ராமனுடைய தம்பி என்று தன் பெயரை வைத்துக் கொண்டதாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்லுவார்கள். அதற்கு முன்னோடி கிருஷ்ணன்தான்.

கோபிகையினிடம் "பலானுஜஹ' என்று கண்ணன் சொன்னதற்குக் காரணம், பலராமன் ஒரு பராக்கிரமசாலி. அவன் பெயரைச் சொன்னால் அந்த கோபிகை பயந்துவிடுவாளென்று அவ்வாறு கூறினான். அவளோ பயப்படுவதாகத் தெரியவில்லை.

""கிமிஹயே தன் மன்மந்திரா சங்கயா?'' என்கிறாள். "அதனால் என்ன... என் வீட்டுக்குள் ஏன் நுழைந்தாய்' என்று பொருள். அதற்கு கண்ணன் என்ன சொல்கிறான் பாருங்கள்...

""கோபி... நான் மாடு மேய்ப்பவன் என்று உனக்குத் தெரியும். என்னுடைய பசுக்கூட்டத்தில், ஒரு மிகச் சிறிய வெள்ளை கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது. அதைத் தேடிக்கொண்டு நான் வந்தேன்.''

அதற்கு கோபிகை, ""தன் நவநீத பாத்ரே ஹஸ்தம் கிமர்த்யம் மம..'' என்கிறாள். ("அது சரி... அதற்காக அந்த வெண்ணெய் பாத்திரத்தில் ஏன் கைவிட்டாய்?')

வடமொழியில் "நவநீதம்' என்றால், தமிழில் வெண்ணெய் என்று பொருள்.

""நான் அந்தக் கன்றுக்குட்டியைத் தேடிக் கொண்டு வந்தேனா? ஒருவேளை உன்னுடைய வீட்டில் ஒளிந்திருக்குமோ என்று தேடினேன். இந்தப் பாத்திரத்தின் உள்ளே என்னுடைய மிகச் சிறிய கன்றுக்குட்டி இருப்பதுபோல் தெரிந்தது. உடனே அதை கையை விட்டு வெளியே எடுக்க முயன்றேன். பார்த்தால் வெண்ணெய்...'' என்று சொன்னவாறு அந்த வீட்டை விட்டுத் தன் பரிவாரங்களுடன் வெளியே ஓடி வருகிறான்.

அந்த கோபிகையோ, நாளை பணமாக்கவிருந்த வெண்ணெய் போயிற்றே என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறாள்.

ஓடிப்போன கண்ணன் மீண்டும் கோபிகையிடம் வருகிறான். அவள் கண்ணைத் துடைத்துவிடுகிறான்.

""அடப் பைத்தியமே!' இதற்காகவா அழுகிறாய்? இனிமேல் நீ அழக்கூடாது. உனக்கு இனி எந்தக் கஷ்டங்களும் வராது. கவலைப்படாதே. சந்தோஷமாக இருப்பாய்'' என்று சொல்லிவிட்டு கண்ணன் ஓடிவிடுகிறான்.

இப்போதும் கோபிகை அழுகிறாள். அக்கம்பக்கத்திலுள்ள கோபியர்கள் வந்து அவள் அழுகையின் காரணம் கேட்கிறார்கள். அவள் சொல்லுகிறாள்:

""இது அழுகையல்லடி... ஆனந்தக் கண்ணீர். அந்த பகவானே வந்து என் கண்களைத் துடைத்துவிட்டு, நீ இனிமேல் அழக்கூடாது. உனக்கு இனி எந்தக் கஷ்டமும் வராது. இனி கவலையே உனக்கு இருக்காது. சந்தோஷமாகவே இருப்பாய்... என்று என்னை வாழ்த்திவிட்டுப் போனான்'' என்று சொல்லி ஆனந்தமடைந்தாளாம்.

எவ்வளவு அற்புதமான கவிதை பாருங்கள். ஸ்ரீசைதன்ய மகாப் பிரபுவின் கற்பனை ஊற்று இது. ஆம்; அவதாரங்களிலே மிகச் சிறந்த அவதாரம் ஸ்ரீகிருஷ்ணாவதாரம். அதனால்தான் வியாசரின் மகாபாரதம் முதல், சைதன்யர், பாரதியார், கண்ணதாசன் வரை ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment