Tuesday, July 26, 2011

மூன்று முறை ராம ராம ராம என சொன்னால் போதும். அது ஆயிரம் தடவைக்கு சமானம்

மூன்று முறை ராம ராம ராம என சொன்னால் போதும். அது ஆயிரம் தடவைக்கு சமானம் என்கிறார் திருமங்கை ஆழ்வார். ராம ராம ராம என மும்முறை சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் சொன்ன பலன் கிடைக்கும் என்கிறார் பரமசிவன். சகஸ்ரம் என்றான் ஆயிரம் எனப் பொருள். திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்திலும், வேதசமக மந்திரத்திலும் இறைவனின் திருநாம எண்ணிக்கை பற்றி சொல்லப்பட்டுள்ளது.
சரி... மூன்று எப்படி ஆயிரமாகும்?
ராமா என்ற சொல்லை எடுங்கள். தமிழிலுள்ள ர வரிசையில் ரா இரண்டாம் எழுத்து. வடமொழியில் ம என்பது ஐந்தாவது எழுத்து. அங்கே ம என்ற எழுத்தை ப1, ப2, ப3, ப4 என ஒரே எழுத்தை சற்று அழுத்தம் கூட்டி கூட்டி உச்சரிப்பார்கள். இந்த வரிசையில் ஐந்தாவதாக வரும் எழுத்து ம ஆகும். இரண்டை ஐந்தால் பெருக்கினால் பத்து வரும். ஆக ராம என்ற சொல்லுக்குரிய எண் 10. இதை மூன்று முறை சொன்னால் 10*10*10 = 1000. வடமொழி எழுத்தையும், தமிழ் எழுத்தையும் எப்படி முடிச்சுப் போடலாம் என்ற சந்தேகமும் சிலருக்கு வரும். வடக்கே பிறந்த ராமன், தெற்கே வரை வந்து தன் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டியுள்ளார். எனவே வடக்கும் தெற்கும் இணைவதில் தவறேதும் இருக்க முடியாது என திருமழிசையார் கருதியிருக்கக் கூடும். எனவே, தான், ராம ராம ராம என மும்முறை சொன்னால் ஆயிரம் முறைக்கு சமம் என்றார். ராமநாமத்தின் மகிமை அலாதியானது. இந்த உலகுக்கு மட்டுமல்லாமல், ஏழு உலகத்திற்கும் மோட்சம் தரும் ராமநாமத்தை ராமனின் அம்பில் வாலி கண்டதாக கம்பர் வர்ணிக்கிறார். இறைவனது பெயரை நடக்கும்போதும், வேலை செய்யும் போதும், யார் சொல்கிறார்களோ அவர்கள் எடுத்து வைக்கும். ஒவ்வொரு அடியிலும் தியாகம் செய்த புண்ணியம்பெறுவார்கள். அவர்களது உடல்கள் புனிதமடைகின்றன. யார் இறைவனின் பெயரை உணவருந்தும் போது கூறுகிறார்களோ அவர்கள் உணவு உட்கொண்ட போதிலும் விரதம் இருந்த பயனை பெறுகிறார்கள். யார் இறைவனின் பெயரை இடைவிடாமல் சொல்கிறார்களோ அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தி பெற்று விடுகிறார்கள்.

No comments:

Post a Comment