Thursday, July 28, 2011

காசியின் மகிமை!

காசி வாசம் எல்லாப் பாவங்களையும் நாசம் செய்துவிடும். காசியில் வாசம் செய்பவரை தர்மமே காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவன் காசி என்கிற வாராணாசியை விட்டு வேறு எங்காவது சென்றால் - அது கிடைத்தற்கரிய அபூர்வ நிதியைத் தள்ளிவிட்டு, பிச்சை எடுத்துப் பணம் சேர்க்கச் செல்வது போன்றது. உலகில் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், செல்வம் ஆகியவை எல்லாம் ஒவ்வொரு ஜன்மத்திலும் கிடைக்கும். ஆனால் காசி வாசம் எப்போதும் கிடைக்காது. பாக்கியவான்கள் மூன்று உலகத்தையம் உய்விக்கச் செய்யும் திறமை வாய்ந்த காசி வாசம் பெறுவது, மூன்று உலக ஐஸ்வர்யங்களையும் பெறுவதை விட மேலானது. காசியிலே ஒருவன் இருந்தால் ஆத்மஞானத்தால் வரும் பிரம்ம தேஜஸ் அவனுக்குக் கிட்டும். காசியை அடைந்து அதனால் ஏற்படும் பிரகாசத்தின் மலர்ச்சிக்கு முன்பு, மற்ற எல்லாப் பிராகாசங்களும் மின்மினிப் பூச்சியின் பிரகாசம் போன்று ஆகிவிடுகிறது என காசிக் கண்டம் என்ற சம்ஸ்கிருத நூல் கூறுகிறது. காசியில் வாழ்கிறவர்களைத் தொட்டாலும் போதும். பிறவித் துன்பம் தொலைந்து போகும் என்று அதிவீரராமபாண்டியர் இயற்றிய காசிக் கண்டம் கூறுகிறது. இதோ அவரது பாடல். மணிமேகலை காப்பியம், வாரணாசி ஒர் மறையோம்பாளன் என்று இயம்புகிறது.
காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும், காசியை பேசும் நாவே நாவாகும். காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும், காசியை இனிது காணும் கண்களே கண்களாகும் என காசிக்கண்டம் கூறுகிறது. குமரகுருபர சுவாமிகள் தாம் இயற்றிய காசிக் கலம்பகம் என்ற நூலில், காசி விஸ்வநாதரைக் தொழாதார் பிறப்பார் என்கிறார். மேலும் அவர் ஆனந்தம் தரும் அன்பூரணியுடன் மகாமயானத்தில், ஆனந்தமாக ஆடும் சிவபெருமான் அழகில் ஈடுப்டடுத் திளைத்து ஆடுங்கள். இல்லாவிட்டால் பிறவியில் அகப்பட்டு இளைத்து ஆட வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். மேலும் காசிப்பதியை சிவபெருமானின் படை வீடு என்றும் குமரகுருபர சுவாமிகள் பாடினார். எல்லாப் புண்ணியத் தலங்களுக்குள் காசியே மணிமுடி போல் தலைசிறந்து விளங்குகிறது. கந்தபுராணம் காசியில் இறக்கும் ஜீவர்களுக்கு சிவபெருமான் தாரக மந்திரம் உபதேசித்து முக்தி வழங்குகிறார் என்று கூறுகிறது.

No comments:

Post a Comment