Tuesday, July 26, 2011

யுக தர்மம் என்பது என்ன?

 மனிதனின் மனப்போக்குக்கு ஏற்ப காலவரையறைகள் (யுகங்கள்) ஏற்பட்டன. கிருதயுகத்தில் தர்மம் நான்கு பாதங்களால் நடந்தது என்றும்; திரேதாயுகத்தில் மூன்று பாதங்களாலும்; துவாபர யுகத்தில் இரண்டு பாதங்களாலும்; கலியுகத்தில் ஒரெயொரு பாதத்தினால் நிகழ்கிறது என்றும் சாதாரணமாகக் கூறுவதுண்டு. சத்தியம், தயை, தவம், தானம் ஆகிய நான்கும் தர்மத்தின் பாதங்கள். இந்த நான்கும் யாரிடத்து இருக்கிறதோ அந்த மகான் எந்த யுகத்தில் வாழ்ந்தாலும் கிருதயுகத்து மனிதர்தான் என்று உறுதியாகக் கூறலாம். சத்தியத்தை இழந்து தயை, தவம், தானம் ஆகிய மூன்றை மட்டும் கொண்டுள்ள மனிதர் திரேதாயுகத்தவர். முதல் மூன்றையும் இழந்து தானத்தை மட்டும் கைக்கொண்டுள்ள மனிதன் கலியுகத்தவன். ஆக, யுகங்கள்கூட தர்மத்தின் பாதங்களைப் பொறுத்தே மாறுதலடைகின்றன. யுக மாற்றங்கள் தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அனைத்துக்கும் தர்மமே ஆதாரம். தர்மத்தை அனுசரித்து குணங்களும் மாற்றமடைகின்றன. கொடுமை நிறைந்த இரண்யகசிபுவும் கருணை மிக்க பிரகலாதனும் ஒரே யுகத்து மனிதர்கள் (கிருதயுகம்). தர்மனும் துரியோதனனும் ஒரே யுகத்து மனிதர்கள். யுகங்கள் நான்கும் அந்தந்த இயல்புகளைக் கொண்டிருந்தால், இவர்கள் தர்ம - அதர்ம வழிகளில் சென்றிருக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் தர்மமே காரணம். தர்மத்தின் பாதங்களைப் பிடித்துக் கொண்டால் எல்லாரும் கிருதயுகத்து மனிதர்கள் ஆகலாம்.

No comments:

Post a Comment