Friday, July 22, 2011

வணக்கத்தின் தத்துவம்--திரை ரகசியம்

வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும், இடது கை உடல் கழிவை சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது. ஆனால், கோயிலுக்கு போனாலோ, பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம். மனிதனைப் பொறுத்தவரை வலதுகை உயர்ந்தது, இடது கை தாழ்ந்தது. ஆனால் இறைவனையும், மகான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.

கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவாக இருக்கிறார் என்று அறிவுறுத்திய வள்ளலார், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். எண்கோண வடிவில், தாமரைப் பூ போன்று இருக்கும் இச்சபையின் உள்ளே பொற்சபை, சிற்சபை என இரண்டு சபைகள் இருக்கிறது. ஞானசபையின் உள்ளே, மகா மந்திரம் ஜெபிக்கப்பட்ட நிலைக்கண்ணாடியும், அதன் பின் பகுதியில் அகல் விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டிருக்கிறது. கண்ணாடியின் முன்புறம் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இவை அனைத்தும் கலந்த நிறத்தில் ஏழு திரைகளை அமைத்து, இவற்றை நீக்கினால் ஜோதி தரிசனம் பெறும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கருப்பு நிறத்திரை மாயா சக்தியையும், நீல நிறத்திரை கிரியா சக்தியையும், பச்சைத்திரை பராசக்தி, சிவப்புதிரை இச்சா சக்தி, மஞ்சள் திரை ஞான சக்தி, வெள்ளைத்திரை ஆதி சக்தி மற்றும் அனைத்து வண்ணமும் கலந்த திரை சித் சக்தியையும் குறிக்கிறது. இந்த ஏழு சக்திகளை கடந்தபின்பே, இறைவனை அடைந்து மரணமில்லாத பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒப்பற்ற ஜோதி ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஆசைகளும், குற்றங்களும் மறைக்கின்றன. இந்த குறைகளை அகற்றினால் நமக்குள்ளும் ஜோதி தோன்றி, நாம் பிரகாசம் அடையலாம் என வள்ளலார் வலியுறுத்தினார். இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் மட்டும் பாதியளவு நீக்கப்பட்டு, வள்ளலார் நிறுவிய நிலைக்கண்ணாடி முன்பு ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைப்பூச தினத்தில் மட்டும் ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டுகின்றனர். இங்கு தினமும் பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வழிபாடு நடக்கிறது.

1 comment:

  1. வணக்கத்தின் தத்துவம். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete