Monday, November 14, 2011

இருமுடியில் இருக்க வேண்டியவை

சபரிமலை பக்தர்கள் மாலை அணிதல்

இருமுடியில் இருக்க வேண்டியவை
சபரிமலைக்கு கிளம்பும் முன், உங்கள் இருமுடியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீலநிறத்துணியில் இருமுடியைத் தயார் செய்ய வேண்டும். ஒரு பையில், வெற்றிலை, பாக்கு, காசு, நெய் தேங்காய் ஆகியவற்றை முதலில் வைக்க வேண்டும். பின், கற்பூரம், விபூதி, மஞ்சள் தூள், ஊதுபத்தி, அவல், பொரி, பன்னீர், கற்கண்டு, நல்லமிளகு, புகையிலை ஆகியவற்றை வைக்க வேண்டும். நெய் ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கும், தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரியும் ஆழியிலும் சேர்த்து விட வேண்டும். ஒரு மூடியை பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு கொண்டு வரலாம். கற்கண்டை அதற்கான தனி உண்டியலில் போட்டு விடலாம். மாளிகைப்புறத்து அம்மனுக்கும், நாகருக்கும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கடுத்துவா சுவாமிக்கு (கடுத்த சுவாமி) அவல் பொரியும், வாவருக்கு நல்ல மிளகும், கருப்ப சுவாமிக்கு புகையிலையும் சமர்ப்பிக்க வேண்டும். காசை உண்டியிலில் போட்டு விடுங்கள். இருமுடியின் பின்பகுதியில் இரண்டு தேங்காய், பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏறுதேங்காய், இறங்கு தேங்காய் என்பர். ஒன்றை படி ஏறும் போதும், ஒன்றை வேறுபாதையில் இறங்கும் போதும் உடைப்பதுண்டு.
கரிமலை மூர்த்திக்கும், விநாயகருக்கும் தேங்காய் உடைக்கும் பழக்கமும் உண்டு. இதற்குரிய காய்களை தனியாக ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளவும். இருமுடியை தலையில் வைக்கும் முன் ஒரு சால்வையை தலையில் போட்டு அதன்மேல் முடியை தூக்கி வைக்கவும்.

மாலை அணிந்தவர்கள் பின்பற்றவேண்டியவை
1. காலை மாலை இருவேளையிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபடவேண்டும்.
2. கருப்பு, நீலம், காவி நிற வேட்டி, சட்டை அணிய வேண்டும்.
3. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
4. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
5. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
6. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
7. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
8. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
9. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
10. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

பெண் பக்தர்களே! அடையாள அட்டை இருக்கிறதா!
சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. இதில் சில குழந்தைகளுக்கு பத்து வயதானாலும் கூட வயது கூடியவர்கள் போல் தோற்றமளிப்பர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சிலர் இளமையாக தோற்றமளிக்கலாம். இந்தச் சூழலில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், துணையாக வரும் ஆண் பக்தர்கள் அவர்களை பம்பையிலேயே விட்டுவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு அவர்கள் தங்கள் பேன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பிறந்த நாளுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அல்லது வயதை நிரூபிக்கும் ஏதேனும் ஒரு சான்றைக் காட்டி அனுமதி பெறலாம். மறக்காமல் உங்கள் அடையாள அட்டையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment