Saturday, January 28, 2012

தெய்வங்களுக்கு தேங்காய் வாழைப்பழம் படைப்பது ஏன்?


வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.



அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.அது மட்டுமல்ல தேங்காய்,வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு,கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.பழம் கொட்டை என்பது கிடையாது.



அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

Sunday, January 22, 2012

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய்? விளக்கேற்றும் பலன் /திருக்கார்த்திகை தீப

கார்த்திகையன்று வீட்டிலோ அல்லது கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடு. ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் செய்து இறைவனை வழிபட்டனர். அப்போது, யாக குண்டங்களில் அக்னி எரியும். இதுவே எளிமையாக்கப் பட்டு தீப வழிபாடாக மாறியது. விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, அதனை வீட்டு பூஜையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.
தீபம் ஏற்றும் முறை

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
திருத்துங்கள் இவர்களை 

இக்காலத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர், பிள்ளைகள் பெருத்து விட்டார்கள். இவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டுவிடும். அதுபோல, மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கெட்ட வழக்கங்களால் மனதை இருளாக்கிக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் திருந்த, ம் போல் ஞான ஒளியை ஏற்றுமாறு முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்வது உசிதம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு பலனடையுங்கள்.


விளக்கேற்றும் நேரம் 



சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

விளக்கேற்றும் பலன் 




ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்



விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

எத்தனை விளக்கு ஏற்றுவது




திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.




முதல் விளக்கு திருவிழா 
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் ""விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.


திருவிளக்கின் சிறப்பு



திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.





அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா?
மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை' (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு.
மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி நிரம்பவே கைகொடுக்கிறது.


திருவிளக்கில் கணபதி... 

கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.


வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

முன்பிறவி பாவம் நீக்கும் தீபம் 

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுகிறார். முருகப்பெருமானை அவர் தீபமாக வர்ணிக்கிறார். வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.




எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் 



நன்றி மறப்பது நன்றன்று'' என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.

திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதக் கார்த்திகைகளே சிறப்புடையது என்றால், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும்.
இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்புப்பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுகுழந்தைகள் உருவாயின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை, கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு "கந்தன்' என்ற திருநாமம் உண்டானது. "கந்தன்' என்றால் "ஒன்று சேர்ந்தவன்' எனப்பொருள்.
சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், ""நம் பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்'' என்று அருள்புரிந்தார்.
காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்வதி இமவான் மகளாகப் பிறந்தது முதல் குமாரக் கடவுளான முருகனின் பிறப்பு வரை எட்டு சருக்கங்கள் இதில் அமைந்துள்ளன. குமார
சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழ் புராணங்களில், பத்மாசுரனை ஆட்கொண்ட தகவல் உள்ளது.
""குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். ""கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது'' என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. ""நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார்,'' என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. ""என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை!'' என்று, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார். நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப் பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய்? 


விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன் 


ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.




கார்த்திகைப் பெண்களின் பிள்ளை - முருகன் பற்றி பெரியவர்

பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.
எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.
ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.


திருவண்ணாமலையில் மகரஜோதி ஏற்றுவது ஏன் 


கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம்இன்னும்பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.



கார்த்திகை விளக்கின் தத்துவம் 
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்...தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம். அது மட்டுமல்ல! தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களின் மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் படுகிறது. புழு, கொசு, நிலம், நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாம் படுகிறது. தீபஒளி எப்படி எல்லார் மீதும் பரவுகிறதோ, அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.



சொக்கப்பனை-பெயர்க்காரணம்


கார்த்திகை தீபம் பார்த்தால் பாவம் நீங்கும். பாவம் நீங்கினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். "சொர்க்கப்பனை' என்பதே திரிந்து "சொக்கப்பனை' ஆனது. மற்றொரு காரணமும் உண்டு. "சொக்கு' என்றால் "அறியாமை'. இந்த உலக வாழ்வு நிலையானது என்ற அறியாமையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதன் காரணமாக பல பாவச்செயல்களைச் செய்து சொத்து சுகம் சேர்க்கிறார்கள். அந்த அறியாமையை நீக்கும் தீபப் பனையே சொக்கப்பனை என்னும் பெயர் பெற்றது. 






Monday, January 16, 2012

சச்சிதானந்தம்’

உலகின் கருத்தாவாக விளங்கும் ‘சிவம்’ எனும் பரம் பொருள் என்றைக்கும் அழியாது எம்முள் இருக்கிறார். மெய்ப்பொருளாக விளங்குகின்ற இறைவன் இப்பிரபஞ்சத்தை கடந்தும் இருக்கிறார், உள்ளேயும் இருக்கிறார். அதாவது கடந்தும் உள்ளும் இருப்பதால் கடவுள் என்கிறோம். என்றைக்கும் அழியாது மெய்பொருள் எனப்படும் ‘இறை’ இருப்பதால் ‘ஸத்யம்’ என்கிறோம்.

இருப்பதை ‘ஸத்’ எனவும் உணர்வு இருப்பதை ‘சித்’ எனவும் கூறப்படுகிறது. மெய்ப்பொருள், சித்சோருபம் ஆக விளங்கி வருகிறது.  அதனிடமிருந்தே உயிர்கள் உணர்வை பெறுகின்றன. அப்பொருளுக்கு மற்றொரு இயல்பு உண்டு. அது ஆனந்தமே வடிவெடுத்தது. ஆனந்தமே எண்ணிறைந்த உயிர்களிடத்து இன்பமாக இயங்குகிறது இன்பத்தை உணராத உயிர் இல்லை.

‘ஸத்’ ‘சித்’ ‘ஆனந்தம்’ மூன்று இயல்புகளை ஒன்றாகக் கூட்டினால் ‘சச்சிதானந்தம்’ என்று அழைப்பர். பிளவு படாத பெரிய பொருள் என்று அர்த்தம். ஆனந்தம் வேறு தெய்வம் வேறு இல்லை. இப்படிப்பட்ட தெய்வம் கல்லிலும் வேதச்சொல்லிலும் பூவிலும் முள்ளிலும் அன்பிலும் நம்பிக்கையிலும் இருப்பார். அவர் இல்லாத இடமே இல்லை. அடியையும் முடியையும் தேடவைத்து ஜோதியாய் நின்றார். உமை அம்மையுடன் சரிபாதியாய் நின்றார். அருவமும் உருவமும் அற்று சிவலிங்கத் திருமேனியராக நின்றார்.

ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணர் அவர், களித்து ஆடும் இடமாகிய சிதம்பரத்தில் நடராஜர் என நின்றார். ஆகவே நடராஜர் என அழைத்து நாம் வழிபடும் திருக்கோலம் எமக்கு ஆனந்தத்தை நல்கி அருளை தரவல்லது. நான்கு கரங்களை ஏந்தி ஒரு காலைத்தூக்கி நின்றாடி ஆடல், ஒலி, எழுப்பி கனக சபையில் ஆடவல்லவர் நடராஜபெருமான். அவரது சிவஞானம் அமிர்தம் போன்றது. பிரகாசமாய் ஒளிர்வது, சாந்தமும், இனிமையும் நிறைந்து கானப்படும் தூய்மையின் இருப்பிடம்,  இக்கோட்பாட்டை விளக்குவதே சிவன் தலை ஜடாமுடியில் வீற்றிருக்கும் பிறைச்சந்திரன் ஆவார்கள்.

பாம்பு அதை ஆபரணமாக அணிந்துள்ளார். அதை பார்த்து யாரும் ஆசைப்படமாட்டார்கள் எவரும் அஞ்சுவார்கள். பாம்பை அணிந்ததால் பன்னக பூசஷனன் எனப்பெயர் பெற்றார். எதற்கும் அஞ்சார் கங்கையை தலையில் சூட்டியிருப்பது அறிவு எனும் ஞானம் சிரசிற்குள் பாய்ந்து குளிர்ச்சியாக எம்மை இயங்க வைக்கிறது. மூளை கொதிப்படையாது அதாவது சூடாகாது பார்த்துக் கொள்ள வேண்டியது எமது கடமை. கங்காதரருக்கு பணிய ஆத்ம ஞானம் உண்டாகும். நான்கு கைகளில்
ஒரு கையில் உடுக்கை, இன்னொரு கையில் நெருப்பு, மற்ற இருகைகளாலும் அபயமளித்து நடனமிடும் திருக்கோலத்திற்கு அர்த்தங்கள் உண்டு.



“டமருகம்” அதாவது உடுக்கையை ஒருகையில் அது ஓசை எழுப்ப வல்லது. “விந்து” அதாவது நாதம். விந்திலிருந்து மரம் உலகு அனைத்தும் தோன்றியது. ஒவ்வொரு ஜீவனிடத்தும் ஓசை உதித்துக்கொண்டு இருக்கிறது. சிவநாதன் நாதத்தை முறையாக ஓயாது ஒலித்துக் கொண்டு இருக்கிறார். இன்னொருகை கனல் ஏந்தியிருப்பது. அது  எல்லாவற்றையும் எரித்து சாம்பல் ஆக்கும் தன்மை, இத் தீக்கு உண்டு. இது சிவஞானத்தீ ஆகையால் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அழிக்கவல்லது. எல்லாம்  எரிந்து அழிந்தபின் எஞ்சியிருப்பது நீறு. பிரபஞ்சத்தில்  நீறு பூசிய சிவம் ஒன்றே அழிவு இல்லாது இருப்பவர்.

அழிவில்லாத படைப்போ அல்லது படைப்பு இல்லாத அழிவுவோ இருக்க இயலாதாகும். ஆக ஆடவல்லான் ஆடும் ஆனந்தக் கூத்தில் ஆக்கமும் அழிவும் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டு உலகம் இயங்குகிறது. நடராஐன் தூக்கிய திருவடி உயிர்கள் அசைந்து கொண்டிருப்பதை காட்டிய படியும், ஊன்றிய திருவடி முயலகன் அசுரனை மிதித்தபடி இருப்பது நமது, பாவங்கள் நமது பயங்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை அளிக்க வல்லான் என்ற அர்த்தத்தில் தில்லையம்பலத்தில் நடனமாடுகின்றார்.  குறி குணம் எதுவும் இல்லாத விழிப்பு, கனவு, உறக்க நிலைகளுக்கு அப்பாற்பட்டதும், பஞ்ச பூதங்களின் தொகுப்பு அற்றதுமான, பிரம்மமே சிவன் ஆவார்.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் மெய்மை அறிவு, ஆனந்தமாக இதயத்திலே விளங்கவேண்டும் எனில், ஆத்ம சொரூபம் ஆன பிறப்பு இறப்பு அற்றவரும், முதன்மை யானவரும்  ஆகிய நடராஜப்பெருமானை இந்த மார்கழி மாதத்தில் வழிபாடாற்ற வேண்டும். நாம் இத் திருவேம்பாவை காலத்தில் காலை வேளையில் நீராடி தூயமனத்தினராய் பூஜை ஆராதனைகளில்  பங்கு கொண்டு இறைவனைத்தரிசிக்க வேண்டும். பத்தாவது நாளான திருவாதிரை நாளில் ஆருத்திரா தரிசனம் கண்டு நடராஜ பெருமானின் அருளை பெறுவோம். பஜனை பாடல்கள் பாடி அவரைத்துதி செய்து வணங்குவோம்.

ஓங்கார ரூப முழுமுதற் கடவுளை துதிப்போம்

ஒங்கார ரூபரும் மூலப்பரம்பொருளானவரும் முழுமுதற்கடவுளுமாகிய ஜந்துகரத்தான் தாள் பணிந்து அவர் அற்புதங்களை கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். கார்த்திகை மாதத்தில் வரும் பூரணையின் பின்பு வரும் கிஷ்ணபட்ச பிரதமை முதல் சுக்கில பட்ச சஷ்டி வரையிலான இருபத்தொரு நாட்கள் விநாயகர் பெருங்கதை நாட்களாகும். இவ் இருபத்தொரு நாட்களும் விக்கினம் தீர்க்கும் விக்கினேஷ்வரப் பெருமானை நினைந்து அவரின் அற்புதம் நிறைந்த பெரும் கதைகளை படித்தும் கேட்டும் பயன் அடைவர்.

அந்நாளில் ஆலயங்களில் ஒரு கும்பம் வைத்து இருபத்தொரு இழைகள் கொண்ட நூலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகள் வீதம் இருபத்தொரு நாட்கள் இருபத்தொரு முடிச்சு இடுவர். அதை விநாயகர் சஷ்டி அன்று விரதம் அனுஷ்ட்டித்து வணங்கி கதை படித்து பூஜை, ஆராதனைகள் முடிந்ததும் இறுதியில் கையில் அணிந்து கொள்வர்.



“ஓங்கார ஜெபமே மூலாதாரம் ஓங்கார ஜெபமே ஜீவாதாரம்
ஓங்கார  ஜெபமே சர்வாதாரம் ஓங்கார ஜெபமே ஓம் ஓம் ஓம்”

ஓங்காரத்தின் ஜெபம் ஓம் என்று கூறுவதால் மூலாதாரம் ஜீவாதாரம் சர்வாதாரம் அனைத்து ஆதாரமும் ஆக விளங்கி அருள் தருவார். கணபதி என்னும் கணநாதர் கணங்களுக்கு பதியாகவும், நாதராகவும் விளங்குகிறார். அவரை முதலில் வணங்கிச் செய்யும் எக்காரியமும் தடைகள் இல்லாது நிறைவடையும். ஆகவே ஜங்கரத்து ஆனைமுகனை இந் நாளில் வணங்கி வழிபடுதல் நலம் தரும்.

இவரது வாகனம் மூஷிகம் எலியாகும். பெரிய சரீரம் ஆனைமுகனை தாங்கி சிறிய எலி நசிந்துவிடுமோ என அச்சம் எமக்கு தோன்றும். ஆனால் அதன்  தத்துவம் சிறிய மூஞ்சுறு எலி அதாவது மூஷிகம் தாங்குமளவிற்கு விநாயகர் இலேசானவர்.அதாவது பாரமிலலாதவர் அவரைத் தாங்கும் சக்தி வல்லமைய தந்தருளுவார். எவரும் எளிதில் வணங்க வல்ல தெய்வம்.அவரை சாணத்திலும் பிடித்து வைத்து வணங்கலாம். மஞ்சளிலும் அரிசி மாவிலும் மண்ணிலும் கல்லிலும் கூட நினைத்தவுடன் பிள்ளையாரைப் பிடித்து வழிபடலாம்.



இவ்வுலகில் சகலகாரியங்களும் விக்னம் இல்லாமல் நடைபெற வேண்டுமானால் விக்கினேஸ்வர பகவானின் அருள் மட்டும் போதுமானது. துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அடியார்களைத் தமது தும்பிக்கையால் தூக்கி நம்பிக்கையான பாதையில் செலுத்துவார். பக்தர்களின் பாவத்தைப் போக்க ஓடோடி வருவார்.

ஆக விநாயகர் சிறப்பினைக் கூறும் பார்க்கவ புராணம் எனப்படும் விநாயக புராணக் கதையை இந்நாளில் பக்திபெருக்கோடு  படிப்பதும் எழுதுவதும் கேட்பதும் பிறருக்கு எடுத்துரைப்பதும் பலவித நன்மைகளை அளிக்க வல்லது. மனமாசு மறைவதற்குக் கடவுள் வழிபாடு  பேருதவி புரிகிறது. யான் எனது என்பதைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களும் ஏற்படாது.

ஆக எளிமையாக அவருக்கு பிரியமான அறுகம்புல்லை சாத்தி வழிபடுவது சாலச்சிறந்தது. எக்காரியங்களையும் முடிக்கவல்ல விக்னேஸ்வரனை நினைந்து வணங்கி  அக்காரியங்களை தொடங்க இனிதே நிறைவுபெறும். .

இலவசங்களை ஒதுக்குவோம். பிச்சை எடுப்பதை ஒழிப்போம்.

என்ன தான் கஷ்டம் வந்தாலும் சரி.. இலவசமாக யாராவது எதையாவது தந்தால் வாங்கக்கூடாது. அது பிச்சை எடுப்பதற்கு சமம்.
ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. சாப்பிட ஏதுமில்லாமல் பலர் இறந்தனர். அப்போது, ஏழு முனிவர்கள் உணவு தேடி எங்கெங்கோ அலைந்தனர். சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒருநாள், இறந்து கிடந்த ஒரு மனிதனைப் பார்த்தனர்.
பசியின் தாக்கத்தால், ஆன்மிகம், ஜபம், தவம் எல்லாவற்றையும் மறந்து, அந்த உடலையே பிய்த்து தின்ன ஆரம்பித்து விட்டனர்.
அந்நேரத்தில், அந்நாட்டு அரசன் அவ்வழியே வந்தான். அவர்களது செயல்கண்டு திகைத்துப் போன அவன்,""முனிவர்களே! ஆன்மிகச் செம்மல்களான நீங்களே இப்படி செய்தால், மற்றவர்கள் கதியென்ன! உங்களுக்கு நான் வேண்டுமளவு அரிசி, பருப்பு, காய்கறி வகைகளைத் தருகிறேன். என் அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்,'' என்றான்.
முனிவர்கள் மறுத்து விட்டனர்.
""மன்னா! பிணத்தைத் தின்பது கொடுமையிலும் கொடுமை தான்! ஆனால், பசியின் முன் பத்தும் பறந்து போய் விடுகிறது. அதற்காக, நீ எங்களுக்கு இலவசமாக உணவு தருவதாகச் சொன்னாயே! அவ்வாறு உன்னிடம் பிச்சை வாங்கினால் அது அதை விடக் கொடுமை. பிணம் தின்பதை விட கொடுமையானது இலவசம் பெறுவது,'' என்றார்.இலவசங்களை ஒதுக்குவோம். பிச்சை எடுப்பதை ஒழிப்போம்.

மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவனே உலகில் உயர்ந்தவன்

ஒருவர், வட்டிக்கடைக்காரரிடம், மகள் திருமணத்துக்கு லட்ச ரூபாய் கடன் வாங்கினார். வட்டி குட்டிபோடவே, கடனை அடைக்க முடியவில்லை. சொத்து சுகமும் இல்லை. ஆண் மக்களும் உதவவில்லை. பெண்ணைக் கட்டிய மாப்பிள்ளையும் "எனக்கென்ன ஆச்சு' என ஒதுங்கிக் கொண்டான்.
கடன் கொடுத்தவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வாங்கியவரை சிறையில் அடைத்து விட்டனர். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர், தனது ஊரில் இருந்த சாமியாருக்கு கடிதம் எழுதினார்.
""சுவாமி! கடனைத் திருப்பி அடைக்க முடியாத குற்றத்துக்காக சிறையில் போட்டு விட்டனர். இங்கே, நான் அவஸ்தைப்படுகிறேன். என் கடனை அடைத்து விட்டால், சிறையில் இருந்து விடுவித்து விடுவார்கள். நீங்கள் தான் ஊர் பெரிய மனிதர்களை நாடி கடனை அடைக்க உதவ வேண்டும்,'' என எழுதியிருந்தார்.
சாமியாரும் பலரிடம் பணம் கேட்டார். யாரும் தரத்தயாராக இல்லை. சிறை அதிகாரியை சந்தித்தார்.
""ஐயா! அவன் குடும்பஸ்தன். அவனை விடுதலை செய்யுங்கள். அவனுக்குப் பதிலாக நான் சிறையில் இருக்கிறேன்,'' என்றார். அதிகாரியும் ஒப்புக்கொண்டார். சாமியார் உள்ளே போக, கடன்காரன் வெளியே வந்தான். சாமியாரும் பல இன்னல்களை அனுபவித்து, அங்கேயே உயிரை விட்டார்.
மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவனே உலகில் உயர்ந்தவன்

எல்லாரும் கெட்டவங்க இல்லை

என்மேல் எந்த தவறும் இல்லை. ஆனால், ராமன் அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாரோ! நான் தனியாகப் போனால், "இவனால் தானே நாம் காட்டுக்கு வந்தோம்' என தப்பாக எண்ணுவாரோ என்னவோ! எனவே, எல்லா ரிஷிகளும் என்னுடன் வரணும்,'' என்று கேட்டுக் கொண்டான் பரதன். ரிஷிகளும் அவனுடன் சென்றார்கள். இந்த சம்பவத்தை ஒரு கதையுடன் ஒப்பிடுவார்கள்.
ஒரு விவசாயி தன் நிலத்துக்கு போகும் வழியில், பாம்பு படமெடுத்து நின்றது. சாதாரணமாக, மற்றவர்கள் தடியை எடுத்து அடிக்க ஓடியிருப்பார்கள், அல்லது பயந்து பின் வாங்கியிருப்பார்கள். ஆனால், இவரோ கீழே விழுந்து வணங்கினார்.
""நாகராஜா! நீ தான் என் நிலத்துக்கு காவல் தெய்வம். உன்னால் தான் எனக்கு அமோகமான மகசூல் கிடைக்கிறது போலும்! தொடர்ந்து இங்கேயே இரு,'' என்றார். பாம்பு தலையைத் தாழ்த்திக் கொண்டு, அருகில் இருந்து புற்றுக்குள் போய்விட்டது. அடுத்தநாள், விவசாயி பால் செம்புடன் வந்தார். புற்று அருகே வைத்து, ""நாகராஜா, பசியாறிக் கொள்,'' என்றார். பாம்பு வெளியே வந்தது. பாலைக் குடித்தது. போய் விட்டது. விவசாயி, செம்பை எடுத்துப் பார்த்தார். அதற்குள் ஒரு தங்கக் காசு கிடந்தது.
இதேபோல், ஒவ்வொரு நாளும் விவசாயி பாலை வைக்க, பாம்பும் குடித்து விட்டு காசைப் போட, இவர் பணக்காரராகி
விட்டார். ஒருமுறை, அவர் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. மகனை அழைத்து, ""நான் திரும்பி வரும் வரை, பாம்புக்கு பால் வை,'' என்று சொன்னார்.
மகனும் பால் வைக்கச் சென்றான். செம்பை எடுத்துப் பார்த்த போது, தங்கக்காசு இருந்தது. மறுநாள், பால் வைத்தான். அப்போதும் காசு இருந்தது. அப்போது, அவன் மனதில் விபரீத எண்ணம் பிறந்தது.
""இந்தப் பாம்பு புற்று நிறைய காசு வைத்திருக்கிறது. கஞ்சப்பாம்பு, தினமும் ஒன்றே ஒன்றை போடுகிறது. புற்றை உடைத்து விட்டால் எல்லாக் காசையும் ஒரேநாளில் எடுத்துக் கொள்ளலாம். பாம்பைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்று, மறுநாள் அது பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், தடியை தூக்கி அடித்தான். இவனுக்கு கெட்ட நேரம்.
தலையில் விழ வேண்டிய அடிவாலில் விழ, கொதித்தெழுந்த பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்து போனான். திரும்பி வந்த விவசாயி, ரொம்பவும் வருத்தப்பட்டார்.
ஆனாலும், பாம்புக்கு துன்பம் செய்ததால் தானே மகன் <உயிரிழந்தான் என்ற <உண்மையைப் புரிந்து கொண்டார். மறுநாளேபால் செம்புடன் புற்றுக்கு சென்றார். ஆனால், பாம்பு அதைக் குடிக்கவில்லை.
""நீர் இத்தனை நாளும் எனக்கு சேவை மனப்பான்மையுடன் பால் வைத்தீர். இனிமேல், நம் மகனைக் கொன்ற பாம்பு தானே என்ற எண்ணத்தையும் சுமந்து கொண்டு தான் பால் வைப்பீர். எனவே, இனி இதைக் குடிக்கமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டது.
தன் மகனைக் கொன்ற பாம்பு பற்றி விவசாயி தப்பாக நினைக்கவில்லை. ஆனாலும், பாம்பு அவர் மீது சந்தேகப்பட்டது. அதுபோல், ராமனும் பரதனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தே, பரதன் மகரிஷிகளின் துணையோடு சென்றான்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் நமக்கு செய்த துன்பத்துக்காக, ஒட்டுமொத்த குடும்பத்தையே வெறுக்கக்கூடாது. அந்தக் குடும்பத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள். எல்லாரையும் தவறாக நினைக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

அனுமன் பிறந்த கதை!

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள்.
எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார்.
புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். .
""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.
அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற வரம் அளித்தார்.
அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு
"அஞ்ஜனை' என்ற பெயர். "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "மை பூசிய பேரழகி'. ஒருநாள்,
அப்சரஸாக உருமாறி ஒரு மலைச் சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ""ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது,'' என கதறினாள்.
அப்போது வாயுபகவான் காட்சியளித்து""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார்.
அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

இளமை முதலே தொடர்ந்து படி

வயோதிக விவசாயி, தன் பேரனுடன் குளிர் நகரம் ஒன்றில் இருந்த பண்ணையில் வசித்தார். தினமும் அதிகாலையில், கதகதப்புக்காக அடுப்பின் அருகே அமர்வார். அப்போது பகவத்கீதை படிப்பார். இவர் என்ன செய்கிறாரோ, அதை அவரது பேரனும் அப்படியே செய்வான். ஒரு முறை தாத்தாவிடம், ""உங்களைப்போல் நானும் கீதை படிக்கிறேன். ஆனால், அர்த்தம் புரியவில்லை. இதை இப்படி கஷ்டப்பட்டு படிக்க என்ன தேவை இருக்கிறது?'' என்றான்.
குளிருக்காக அடுப்பில் கரி போட்டுக் கொண்டிருந்த தாத்தா, கரி இருந்த கூடையைச் சிறுவனிடம் தந்து, ""இதை ஆற்றுக்குக் கொண்டு போய் நிறைய தண்ணீர் பிடித்து வா,'' என்றார். பேரனும் தண்ணீர் எடுத்தான். வீடு திரும்புவதற்குள் தண்ணீர் ஒழுகிவிட்டது. தாத்தா அமைதியாக, ""நீ இன்னும் வேகமாக வா,'' எனக்கூறி மறுபடியும் அனுப்பி வைத்தார்.
இம்முறை சிறுவன் ஓடி வந்தான். ஆனாலும், கூடை காலியாகி இருந்தது. அது இயலாத காரியம் என்று புரிந்து கொண்டவன், ""போங்க தாத்தா! இது தேவையில்லாத வேலை,'' என்றான்.
அதற்கு முதியவர், "" எது தேவையில்லாதது? முதலில், நான் கூடையை கொடுத்த போது, கரி ஒட்டிக்கொண்டு மிகவும் கருப்பாக இருந்தது. ஆனால், அடிக்கடி தண்ணீரில் அமிழ்த்தி எடுத்ததால், அது இப்போது சுத்தமாகி விட்டது.
இதே நிலை தான் நமக்கும். கீதையைப்படிக்கும் போது, அதன் அர்த்தம் உனக்கு புரியாமலோ, நினைவில் நிற்காமலோ போகலாம். ஆனால், இளமை முதலே தொடர்ந்து படித்தால், மனதில் குழப்பத்திற்கே இடம் கொடுக்க மாட்டாய். நல்லெண்ணங்களை நிறைத்து சுத்தமாக வைத்திருப்பாய். அதுதான் கீதையின் மகிமை,'' என்றார்.

அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார்

ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.
தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், ""இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை,'' என்றார்.
இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், ""மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது'' என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி?
சிவன் பார்வதியிடம்,"" நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு,'' என சொல்லிவிட்டு சென்றார்.
சனீஸ்வரனிடம் சென்று," "தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன்,'' என்றார்.
சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, ""பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன்,'' என்றார்.
""எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்!'' என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. "ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே!' என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள்.
சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

மனதை ஒருநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும்

சவுபரி மகரிஷி, ஆள் அரவமே இல்லாத இடத்துக்குப் போய் தவம் செய்து கடவுளை அடையலாம் என்ற எண்ணம் கொண்டார்.
காட்டுக்குப் போனால் கூட, அங்கே வசிக்கும் மற்ற ரிஷிகள் ஏதாவது பேச்சுக்கொடுத்து தவத்தைக் கெடுத்து விடுவார்கள். எனவே, தண்ணீருக்குள் தவமிருப்போம் என்று அமர்ந்து விட்டார்.
ஒருநாள், சவுபரி கண்விழித்தார். அப்போது, ஒரு பெரிய மீன் போய்க் கொண்டிருந்தது. பெரிதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் மீன்கள் போய்க் கொண்டிருந்தன.
இதைப் பார்த்ததும், சவுபரிக்கு மனதில் சபலம்.
""ஆஹா...என்ன அழகான குடும்பம். தந்தை மீனும், தாய் மீனும் முன்னே செல்ல, குழந்தை மீன்கள் பின் தொடர்கின்றனவே! எவ்வளவு இனிமையான வாழ்க்கை! தவமிருந்து கிடைக்காத இன்பம், இந்தக் காட்சியைப் பார்த்ததும் கிடைத்து விட்டதே! நமக்கும், மனைவி, மக்கள் என இருந்தால் நன்றாக இருந்திருக்குமே! வெளியே போய் ஒரு பெண்ணைத் தேடுவோம். அவளை மணந்து, பிள்ளை குட்டியுடன் சுகமாக இருப்போம் என்றெண்ணி தண்ணீரை விட்டு வெளியே வந்தார்.
வழியில் மாந்தாதா என்ற மன்னனைச் சந்தித்தார். அவனுக்கு ஐம்பது மகள்கள் இருந்தனர். அதில், யாராவது ஒருத்தியைக் கேட்போமே என அவனிடம் பேசினார்.
""என் மகள்களுக்கு சுயம்வரம் வைத்து, அவர்கள் விரும்பும் மாப்பிள்ளையை தேட முடிவு செய்துள்ளேன். எனவே, பெண்ணைத் தர இயலாத நிலையில் உள்ளேன்,'' என்றான்.
""பரவாயில்லை! என்னையும் அவர்கள் பார்க்கட்டும், யாருக்காவது பிடித்திருந்தால் மணந்து கொள்ளட்டும்,'' என்றார்.
தாடியும், மீசையும், ஜடாமுடியும், கரடு முரடான மேனியும் கொண்டவராய் இருக்கும் இவரை தன் மகள்களில் ஒருத்தி கூட கட்டிக் கொள்ளமாட்டாள் என்ற தைரியத்தில் அவரை மகள்களின் அறைக்கு அனுப்பி வைத்தான் மாந்தாதா.
முனிவர், உள்ளே போனாரோ இல்லையோ, ஐம்பது பெண்களும் ஓடிவந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டனர். ஆம்...அவர் தன் தவவலிமையால் எழில் மிகு இளைஞனாக மாறி உள்ளே சென்றார். ஐம்பது பேரும் அவரைத் தான் கல்யாணம் செய்வோம் என அடம்பிடித்தனர்.
""இதென்ன மாயம்'' என நினைத்த மாந்தாதா, வேறு வழியின்றி எல்லாரையும் திருமணம் செய்து வைத்தான். அவர், அந்தப் பெண்களுக்கு தன் தவவலிமையால், ஐம்பது சிறு மாளிகைகளை உருவாக்கி அதில் தங்க வைத்தார்.
ஒருசமயம், மகள்களைப் பார்க்க மாந்தாதா வந்தான்.
முதல் மகளின் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தபோது, ""அப்பா! அவர் என் மேல் உயிரையே வைத்துள்ளார். ஆனால், ஒரே ஒரு கஷ்டம் தான்! அவர் இங்கு மட்டுமே இருக்கிறார். எந்த தங்கையின் வீட்டுக்கும் போகவில்லை,'' என்றாள்.
""அப்படியா!'' என்ற மாந்தாதா, இரண்டாம், மூன்றாம், நான்காம் என ஐம்பது மகள்கள் வீட்டுக்கும் சென்றான். அவர்களும் முதலாமவள் சொன்ன பதிலையே சொன்னார்கள். ஆம்...சவுபரி ஐம்பது இளைஞர்களாக வடிவெடுத்து எல்லா வீட்டிலும் இருந்தது அப்போது தான் தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு இருவர் வீதம் நூறு பிள்ளைகளைப் பெற்றார்.
அவர்களுடன் ஒருநாள் தெருவீதியில் சுற்றி வந்தார். ஓரிடத்துக்கு வந்ததும் ஞானோதயம் வந்தது.
""இவ்வளவு மனைவியர், இத்தனை பிள்ளைகளைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வந்து விட்டதே! ஐயோ! பழைய வாழ்க்கையே மேலானது. தவமிருக்கவே போய்விடலாம் என்றெண்ணினார். மீண்டும் காட்டுக்கே கிளம்பி விட்டார்.
பெரியவர்களின் மனசும் கூட, குழந்தைகளுடையது போல மாறிக்கொண்டே இருக்கும். அதை ஒருநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நல்லவர்களின் புகழைக் குறைக்க, நாலு கெட்டவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்!

ஒரு ஊரில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊர் மக்களிடம்,""பொய் சொல்லாதீர், திருடாதீர், ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள், ஜாதிபேதம் கூடவே கூடாது,'' என்றெல்லாம் அறிவுரை வழங்குவார்.
மக்களும் அதை ஏற்று அமைதியாக இருந்தனர். இது பக்கத்து ஊரில் இருந்த ஒரு இளைஞனுக்கு வெறுப்பைத் தந்தது. நம்ம ஊரெல்லாம் கெட்டுக்கிடக்க, இந்த ஊர் மட்டும் இவ்வளவு அமைதியாய் இருக்கிறதே! இதைக்கெடுக்க
வேண்டுமானால், சாமியாரின் இமேஜைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.
அந்த கிராமத்துக்கு வந்தான்.
""மக்களே! உங்க ஊருக்கு வந்துள்ள சாமியார் ஏதேதோ சொல்லி, உங்க மனசை மாற்றி, சோம்பேறியாக்க பார்க்கிறார். உங்க தைரியத்தை குறைக்கிறார். என்னைப் பாருங்கள்! நான் இவரை விட பலசாலி. என்னால் தண்ணீரில் கூட நடக்க முடியும். அப்படி நடந்து காட்டினால், நான் சொல்வதைஇனி கேட்பீர்களா?'' என்றான்.
ஊர் மக்களும் சரியென்று தலையாட்டினர்.
எல்லாரும் ஆற்றங்கரைக்கு சென்றனர். வாலிபன், தன் உடலில் நீரில் மூழ்காமல் இருப்பதற்குரிய ஆடைகளை அணிந்து தண்ணீரில் நடந்து அக்கரைக்கு போனான். மீண்டும் நடந்து வந்து சேர்ந்தான். ஊரே அவனைப் பாராட்டியது.
""சாமியாரே! உங்களால் அறிவுரை தான் சொல்ல முடிகிறது. இவனோ தண்ணீரிலேயே நடக்கிறான். இவனால், நினைத்ததை யெல்லாம் எங்களுக்கு தர முடியுமே,'' என்றனர்.
""அடப்பாவிகளே! இதென்ன பிரமாதம்! இவன் செய்த வேலை ஒரு ரூபாய்க்கு தான் சமம். இவன், ஒரு ரூபாய் மட்டும் கொடுத்து, இங்கிருந்து ஓடத்தில் சென்றிருந்தால், உடைகூட நனையாமல் அக்கரைக்கு போயிருக்கலாம்,'' என்றார்.
அத்துடன், தண்ணீரில் நடக்க, அவன் பயன்படுத்திய ஆடையை இன்னொருவனை அணிந்து கொள்ளச் சொல்லி நடக்கச் சொன்னார். அவனும் ஹாயாக நடந்து சென்றான்.
நல்லவர்களின் புகழைக் குறைக்க, நாலு கெட்டவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்!

ராமபாணத்தை விட ராமபாதுகை விசேஷமானது.

ராமபிரானின் வில்லைக் கண்டு நடுங்காதவர்களே உலகில் கிடையாது. ராமபாணம் தப்பாது என்பார்கள். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் அதைக் கண்டு பயப்படவில்லை. யார் அவன்? இலங்கை செல்வதற்காக சேதுவில் பாலம் கட்ட ஏற்படாயிற்று. கடலோ பெரும் கொந்தளிப்புடன் இருந்தது.
""சமுத்திரராஜா! ஒரு நல்ல காரியத்துக்காக இலங்கை செல்கிறோம். அமைதியாக இரு!'' என்று ராமன் சொல்லிப்பார்த்தார். அவனோ, அடங்குவதாக இல்லை. கோபத்துடன் ராமபிரான், தன் பாணத்தை எடுத்து விட்டார்.
உடனே சமுத்திரராஜன் வெளியே வந்தான்.
சாதாரணமாக அல்ல! கைதட்டிக்கொண்டே, எக்காளமான சிரிப்புடன்! ராமனுக்கு ரொம்ப ஆச்சரியம்!
""என் வில்லின் பலம் தெரியாமல், மமதையில் அட்டகாசமாகவா சிரிக்கிறாய்! இது கனல் கொழுந்து. உன்மேல் பட்டால் தீய்ந்து போவாய். சொட்டு தண்ணீர் இல்லாமல் செய்து விடுவேன்,'' என எச்சரித்தார். அப்போதும் சமுத்திரராஜன் கலங்கவில்லை.
""ராமா! நீ யாரிடம் என்ன பேசுகிறாய். இந்த பூலோகத்தை ஆளும் பரதன், உனது பாதுகையைப் பெற்று வந்தான் அல்லவா! அதற்கு அவன் தினமும் அபிஷேகம் செய்கிறான். அந்த நீர் தமஸா நதியில் விழுந்து, அது சரயூ நதியில் கலந்து என்னுள் வந்து ஐக்கியமாகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்து குடித்து என் உடல் வஜ்ரம் பாய்ந்து வலிமையாக இருக்கிறது. என்னை, உன்னால் கொன்று விட முடியுமா என்ன!'' என்றான்.
ராமபாணத்தை விட ராமபாதுகை விசேஷமானது. உங்கள் ஊர் ராமர் கோயில்களில், பாதுகாபூஜைக்கு ஏற்பாடு செய்யுங்கள். நமது நாட்டை எந்த சக்தியும் எதுவும் செய்து விட முடியாது.

Sunday, January 15, 2012

வளம் தரும் பொங்கல்

தைப் பொங்கல் திருநாளை ஒட்டி நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வளம் தரும் பொங்கல்

தை முதல்நாள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும், அறுவடைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் என்பது "பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.

நன்றி தெரிவிக்கும் விழா

ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.

வாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி, வெல்லம், பால், நெய், முந்திரி போன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்' என்று வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும் போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொங்கல் சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.

கரும்பு படைப்பது ஏன்?

உழைப்பின் அருமையை கரும்பு நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். இளமையில் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

சூரியனுக்கு உகந்த ஞாயிறு

இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தை மாதம் பிறக்கிறது.

சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையிலும், உகந்த அஸ்தம் நட்சத்திரத்திலும், சூரியபகவானின் நட்பாக கருதப்படும் விருச்சிக லக்னத்திலும் தை மாதம் பிறக்கிறது. கர வருடத்தில், மகர சங்கராந்தி பலனும் அதிக நன்மை கிடைப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.

Saturday, January 14, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள்,
சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
 பொங்கல் வாழ்த்துக்கள்.


 15 ஜனவரி, 2012

பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Friday, January 13, 2012

தவம்

ஞானம் பெற உதவுவது தவம். காவி உடுத்துவதும், காட்டிற்கு சென்று மூச்சடக்குதலும் தவமாகாது. காற்றை மட்டுமே உண்டு, ஒற்றைக்காலில் நெருப்பின் நடுவே நிற்றல் மட்டுமே தவமாகாது. இவை தவத்தின் வெவ்வேறு அடையாளங்களே.

ஐம்புலன்களை அடக்கல்

ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தை பரிசுத்தமாக வைத்து மனஅமைதியும், பொறுமையும் மேற்கொள்வதே ‘தவம்’ என்கின்றனர் முன்னோர்கள். தனக்கு வரும் துன்பங்களை மன அமைதியுடனும், பொறுமையுடனும், தாங்கிக்கொள்ளுதல், மற்றொரு உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தல், ஆகிய இருபண்புகளும் சேர்ந்த ஒரு பண்பே ‘தவம்’ ஆகும்.

தவமே சிவம்

வியாபாரம் செய்யும் வியாபாரிக்கு அதனால் செல்வம் பெருகும், விவசாயிக்கு வேளாண்மையால் தானியம் வரும். தானதர்மத்தால் புகழ் வரும். கல்வியால் அறிவு வரும், முறையான உணவினால் உடலுக்கு ஆரோக்கியம் வரும் ஆனால் தவத்தால் சிவம் வரும் என்கின்றனர் ஞானிகள்

Wednesday, January 4, 2012

வைகுண்ட ஏகாதசி விழா

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது. பரமபத வாசல் வழியே வரும் ரங்கநாதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ரங்கத்தில் திரண்டுள்ளனர்.

மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
பரமபத வாசல்

மகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

அப்போது அவ்வசுரர்கள், "எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர். அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

நம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பெருமாள் ஆலயங்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, தங்க அங்கி அணிந்த பெருமாள் மங்களவாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- "ரங்கா, ரங்கா' என முழங்க அந்த ஓசை சொர்க்கத்தில் இருக்கும் ரங்கனுக்கே கேட்கும். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம்.

பரமபத விளையாட்டு


வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம்.

சொர்க்கத்தில் இடம்

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம்.

ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள்.

ஏகாதசி விரத மகிமை

வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.

இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

புராண கதை கூறும் விரதம்

கிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்